திருஞானசம்பந்தரால் திருவாடுதுறையில் பாடப்பட்ட இடரினும் தளரினும் எனத் தொடங்கும் பதிகம் நம் வாழ்வின் வறுமைகள் நீங்கி பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம் ஆகும்.
இப்பதிகமானது திருவாடுதுறைப்பதிகம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
திருஞானசம்பந்தர் மற்றும் அவரது தந்தையான சிவபாத இருதயரும் திருவாடுதுறையில் தங்கி இருந்து கோவில் தரிசனம் செய்தனர்.
அப்போது சிவபாத இருதயர் உலக மக்களின் நன்மை பொருட்டு வேள்வி செய்ய எண்ணினார். தனது விருப்பத்தினை தனது மகனான திருஞானசம்பந்தரிடம் தெரிவித்து வேள்வி செய்வதற்கு பொருளுதவி கேட்டார்.
சம்பந்தரும் திருவாடுதுறையில் அருள்புரியும் மாசிலாமணீஸ்வரரை வழிபாடு செய்து இடரினும் தளரினும் பதிகத்தைப் பாடினார்.
இறைவனும் மகிழ்ந்து தனது பூதகணங்களின் மூலம் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட உலவாக் கிழியை பலிபீடத்தில் வைத்து அருளினார்.
சம்பந்தரும் அதனைப் பெற்று சிவபாத இருதயரிடம் சேர்ப்பித்தார். சிவபாத இருதயர் அப்பணத்தினைக் கொண்டு வேள்வியை உலக மக்களின் நன்மைக்காக சீர்காழியில் செய்து முடித்தார்.
இதனால் திருவாடுதுறை தலமும், திருவாடுதுறைப் பதிகமும் மக்களின் வறுமையைப் போக்கி வளமான வாழ்வு வழங்குவதாகக் கருதப்படுகிறது.
பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம் தினமும் தவறாமல் பாடுவதால் வாழ்வின் வறுமைகள் நீங்கும். வாழ்விற்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் இறைவன் நல்குவார். பொருளாதார ஏற்றமும், இனிய வாழ்வும் அமையும்.
பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வாழ்வினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
நனவினும் கனவினும் நம்பா, உன்னை
மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போது அணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடிஅலால், அரற்றாது என் நா
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
கையது வீழினும் கழிவு உறினும்
செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மைஅணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்தவெண் பொடிஅணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்
சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்,
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிலால் உரையாது, என் நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேல்படை எம் இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன
விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம்
நிலையாக முன்ஏறுவர் நிலைமிசை நிலைஇலரே
பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம் பாடலும் பொருளும்
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
அமுதம் பெறுவதற்காக திருபாற்கடலைக் கடைந்தபோது அமுதத்துடன் வெளியான நஞ்சினை உண்டு கழுத்தில் அடக்கி இவ்வுலக உயிர்களைக் காத்த வேதங்களின் நாயகனே, என் வாழ்வில் துன்பங்கள் வந்தபோதும், வயது முதிர்ச்சியாலும், தீவினைப்பயனால் நோய்கள் தொடர்ந்து வாட்டினாலும் நான் உனது திருவடிகளை தொழுது வழிபாடு செய்வேன்.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
வாழ்வினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
ஒளிர்கின்ற செஞ்சடையில் புனலாகிய கங்கையையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபெருமானே இப்பிறவியில் வாழும்போதும், வினைகள் முடிந்து மரணிக்கும்போதும், வாழ்வில் இன்னல்கள் ஏற்படும்போதும் நான் உன்னுடைய திருவடிகளை போற்றி வணங்குவேன்.
தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
நனவினும் கனவினும் நம்பா, உன்னை
மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போது அணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
புனலாகிய கங்கையையும், மணம் நிறைந்த கொன்றைப் பூக்களையும் தலையில் சூடி கனகனவென்று எரியும் நெருப்பினைக் கையில் கொண்டுள்ள பெருமானே, அடியேனாகிய நான் என்னுடைய உறக்கத்திலும், விழிப்பிலும் மனம் ஒன்றி என்னுடைய இறைவனான உன்னைப் போற்றி வழிபடுவேன்.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடிஅலால், அரற்றாது என் நா
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
மேருவாகிய வில்லினைக் கையில் ஏந்தி அக்னியைக் கணையாகக் கொண்டு முப்புரங்களையும் அழிக்க முனிந்த இறைவனான சிவபெருமானே, நான் தும்மல் மற்றும் அவற்றின் உபாதைகளால் துன்பம் உற்ற போதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை போற்றுதல் அல்லாது என்நாக்கு வேறு எதனையும் போற்றாது.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
கையது வீழினும் கழிவு உறினும்
செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மைஅணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
கொய்து அணியப் பெறும் நறுமண மலர்களைச் சூடியுள்ள முடியையும், கருமைநிற கண்டத்தினையும் கொண்டுள்ள சிவபெருமானே, கைப்பொருட்களை இழந்து வருந்தும் காலத்திலும், ஏனையோர்களால் கழிவுப் பொருள் என்று இழிவாகக் கருதப்பட்ட காலத்திலும் உன்னுடைய செம்மையான திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறு ஏதேனும் செய்திலேன்.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்தவெண் பொடிஅணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
மிக்க வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சங்கரனே, கொடிய துன்பத்தால் நான் அச்சமுற்றபோதும், என் தந்தையாகிய இறைவனே உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாது என்நாக்கு வேறு எதனையும் சொல்லாது.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
அழகுக்கு எடுத்துக்காட்டாக சொல்லக்கூடிய மன்மதனை, அவனுடைய அழகிய திருமேனி அழியும்படி நெருப்பு தோன்ற நெற்றிக்கண்ணை விழித்தவனாகிய திருவாடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, கொடிய வினையினால் துன்பங்கள் நெருப்பு போல் வந்து வாட்டினாலும் உலக உயிர்களுக்கு தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என்நாக்கு வேறு எதனையும் பாடாது.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்
சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்,
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
அழகிய மணிமுடி அணிந்த இராவணன் கயிலையை தூக்க முயற்சிக்கும்போது அவன் துன்பம் அடையும்படி கைலாய மலையின் கீழ் அழுத்திய திருவாடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, தீவினையால் பெரும் துன்பம் தரும் நோய் உண்டானாலும், பெருவாழ்வு தரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறு எதனையும் நான் சிந்தனை செய்வதில்லை.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிலால் உரையாது, என் நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
கண்ணனாகிய திருமாலும், மணம் மிக்க தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனும் அளந்தறிதற்கு அரியவனான திருவாடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, அடியேன் உண்ணும்போதும், பசியால் களைப்புற்றபோதும் உறங்கும்போதும் ஒளி பொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதல்லாமல் என் நாக்கு வேறு எதையும் பேசாது.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது
ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட்படுத்தாது உன் வணங்குகிற உன் அடியவர்களுக்கு அருள்புரியும் இறைவனே, பித்த நோயால் மயங்கும் நிலையில் இருந்தாலும், தலைவா, அடியேனுடைய நாக்கு தங்களுடைய திருவடிகளைப் போற்றுதல் அல்லாது வேறு எதனையும் போற்றாது.
அவ்வாறான தங்களுடைய அடியேனை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?
திருவாடுதுறையில் அருள்புரியும் சிவபெருமானே (உலக மக்களின் நன்மையின் பொருட்டு தந்தை செய்ய விரும்புகிற வேள்விக்கு) தேவையான பொருளை நீ எனக்கு தரவில்லை எனில் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேல்படை எம் இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன
விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர்
வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர்
நிலைமிசை நிலைஇலரே
அலைகளை உடைய காவிரியால் வளம் பெற்றுள்ள திருவாடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியினை உடைய திரிசூலத்தினை ஏந்திய எம் இறைவனான சிவபெருமானை வழிபாடு செய்து, உலக நலன்கள் விரும்பி ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை பாடுபவர்கள் வினைகள் யாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகத்தில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.
திருஞானசம்பந்தர்
மறுமொழி இடவும்