புனலூர் என்ற ஊரில் செல்லையா என்னும் செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான நன்செய், புன்செய் நிலங்களும், நிறைய பசுக்கள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளும் இருந்தன.
அவர் பணத்தில் மட்டுமல்லாது இரக்க குணத்திலும் செல்வந்தராக விளங்கினார். ஏழை, எளிய மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து வந்தார்.
ஒருசமயம் புனலூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யாது பெரும் வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் தரிசாகின. புனலூர் கிராம மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர்.
செல்வந்தர் செல்லையா குழந்தைகள் பட்டினியால் தவிப்பதைக் கண்டு மனம் வருந்தினார்.
புனலூரில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலவை சாதம் தயார் செய்து பொட்டலமாக்கி, கூடைக்குள் பொட்டலங்களை வைத்து, தினமும் வீட்டு முற்றத்தில் வைக்குமாறு தன்னுடைய வேலையாளுக்கு உத்தரவிட்டார்.
குழந்தைகள் தன்வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் கூடையில் இருந்து, ஆளுக்கொரு உணவு பொட்டலத்தை எடுத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு செய்தார்.
வேலையாளும் செல்வந்தர் சொன்னபடி கலவை சாத பொட்டலங்கள் தயார் செய்து, கூடைக்குள் பொட்டலங்களை அடுக்கி வீட்டு முற்றத்தில் வைத்தார்.
சிறிது நேரத்தில் குழந்தைகள் இனிப்பில் ஈக்கள் ஒட்டுவது போல் உணவுக்கூடையை மொய்த்தனர். ஒருவரை ஒருவர் முண்டியத்துக் கொண்டு உணவுப் பொட்டலங்களை கையில் எடுத்தனர். தன்னுடைய மாடியில் இருந்து செல்வந்தர் நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
உணவுப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடினர்.
அவ்வூரில் வசித்த மருதனின் மகள் செல்வி மட்டும் குழந்தைகளோடு முண்டியடிக்காமல் காத்திருந்து, எல்லோரும் சென்ற பின்னர் கடைசியாக இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துச் சென்றாள். அவளின் நடவடிக்கை செல்வந்தருக்கு ஆச்சர்யம் அளித்தது.
மறுநாளும் உணவுப் பொட்டலத்தை எடுக்க வந்த குழந்தைகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு உணவினை எடுத்துச் சென்றனர்.
செல்வி மட்டும் காத்திருந்து கடைசியாக இருந்த பொட்டலத்தை எடுத்துச் சென்றாள். செல்வந்தரும் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.
இவ்வாறு ஒருவாரமாக குழந்தைகள் உணவிற்காக முண்டியடிப்பதும், செல்வி காத்திருந்து கடைசியாக உணவினை எடுத்துச் செல்வதையும் செல்வந்தர் கவனித்தார்.
மறுவாரத்தில் ஒருநாள் உணவினைப் பெற்ற செல்வி வீட்டிற்குச் சென்று பொட்டலத்தைப் பிரித்தாள். உள்ளே தங்க மோதிரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, செல்வந்தர் வீட்டிற்கு தன் தந்தையுடன் சென்றாள். நடந்தவைகளை மருதன் செல்வந்தரிடம் கூறினார்.
செல்வந்தர் மருதனிடம் “பசியாக இருந்த போதும் உங்கள் மகள் எல்லா குழந்தைகளையும் போல் முண்டியடித்துச் செல்லாமல் பொறுமையாகச் சென்று உணவினைப் பெற்றாள்.
ஆதலால் நான்தான் கடைசியாக இருந்த உணவுப் பொட்டலத்தில் தங்க மோதிரத்தை வைத்தேன். இம்மோதிரம் செல்வியின் பொறுமை தந்த பரிசு ஆகும். எனவே இதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.” என்று கூறினார்.
செல்வந்தர் கூறியதைக் கேட்ட செல்வியும், மருதனும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
பொறுமை என்றைக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை பொறுமை தந்த பரிசு மூலம் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பெரியோர் கூறியுள்ளனர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!