பொறுமை வெற்றியின் ஆயுதம்; சாதாரண வெற்றிக்கு அல்ல; மிகப்பெரிய வெற்றிக்கான ஆயுதம். ஆதலால்தான் ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மில் எத்தனை பேரிடம் பொறுமை இருக்கிறது?
சாலையில் பயணிக்கும் போதும், சிக்னலில் நிற்கும் போதும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வே பார்க்கின்றனர்.
அவர்களுக்கு வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல; பயணம் என்பது மறந்தே போய்விடுகிறது.
‘ஒருநொடி பொறுமை விபத்தில்லா பயணத்திற்கு வழி’ என்பதை சாலையில் பயணிப்போர் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு விதையை மண்ணில் விதைக்கிறோம். கண்ணுக்குத் தெரியாமல் அது மண்ணுக்குள் புதைகிறது. பின்பு அதற்கு நீரூற்றுகிறோம்.
சிறிது கால காத்திருப்பிற்குப் பின்னர் அது மெல்ல முளை விடுகிறது; பின்பு இலை உருவாகி கிளையாகிறது; தண்டு பெரிதாகிறது; பூக்கள் தோன்றுகின்றன. பின்பு காய்த்து, பழங்களாகி மீண்டும் விதை தருகிறது.
ஒரு விதையிலிருந்து மற்றொரு விதையைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு பொறுமை அவசியம். இந்நிகழ்வில் பொறுமையுடன் இருந்;தால் மட்டுமே வெற்றி என்னும் விதையைப் பெற முடியும்.
‘பொறுமை கசப்பானது; ஆனால் அது தருகின்ற கனியோ இனிப்பானது’ என்கிறார் அரிஸ்டாட்டில்.
ஒரு இலக்கை நோக்கி நாம் செல்லும்போது வெற்றி என்பது உடனடியாக சாத்தியமாவதில்லை.
நதிகளின் பயணத்தில் அவை உயரத்தில் இருந்து அருவியாய் கொட்டி, தடைகளைத் தாண்டி, மௌனமாய் நடந்து இறுதியில் கடலில் ஐக்கியமாகின்றன.
அவை தங்களுடைய இலக்கான கடலை அடையும் வரை தடைகளை தகர்த்தெறிந்து பொறுமையுடன் பயணித்துக் கொண்டே செல்லுகின்றன.
பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை.
‘விடியும்’ என்ற நம்பிக்கையே நம்மை இரவில் உறக்கச் செய்கிறது.
‘முடியும்’ என்ற நம்பிக்கையே வாழ்வில் நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
நாம் ‘பொறுமை’யை இழக்கும் போது, பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த முட்டாளாக மாறுகிறோம் என்பதை உணர வேண்டும்.
நம்மிடம் இருக்கும் ‘பொறுமை’ தனது பயணத்தை நிறுத்தும் போது, ‘தோல்வி’ நம்மை வந்தடையும் என்பதை மனதில் நிறுத்தி எப்போதும் செயல்பட வேண்டும்.
வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதில்லை. ‘பொறுமை தரும் வெற்றி’யின் உதாரணத்திற்கு மூங்கிலைச் சொல்வதுண்டு.
மூங்கில் செடியை வளர்ப்பவர்கள் அதிகம் பொறுமையாக இருக்க வேண்டும். மூங்கிலானது பல தாவரங்களைப் போல் சட்டென வளர்வதில்லை.
அதனைப் பயிர் செய்து நான்கு வருடங்கள் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். எனினும் அதனுடைய வளர்ச்சி பூமிக்கு மேல் ஒருஅங்குலத்திற்கு மேல் இருக்காது.
ஆனால் அதனுடைய ஐந்தாவது வருடத்தில் யாரும் எண்ண முடியாத அளவிற்கு அதாவது எண்பது அடி உயரத்திற்கு ‘சட சட’ என வளர்ந்து விடும்.
ஒரே வருடத்தில் மூங்கில் எப்படி இவ்வளவு உயரத்திற்கு வளர்கிறது? என்பதை ஆராய்ந்தால் அது மிகப்பெரிய இயற்கை அதிசயம்.
அதாவது மூங்கில் பூமிக்கு வெளியே மிக அதிக உயரத்திற்கு வளர்வதற்கு முன்னால், பூமிக்கு கீழே (நம் கண்களுக்கு தெரியாமல்) ஆழமாக தன்னுடைய வேர்களை வளரச் செய்கிறது.
ஏனெனில் மிகஉயரமாக வளரும்போது அதனைத் தாங்கிப் பிடிக்க வலிமையான வேர்கள் தேவை.
எனவே முதல் நான்கு வருடங்களில் மூங்கில் வேர்களை வலுவாக்கிக் கொண்டு, பின்பு மேல் நோக்கி வளரத் தொடங்குகிறது.
அதன்பின் அது வளரும் போது தடுமாறுவதும் இல்லை; தடம் புரள்வதும் இல்லை.
பொறுமை உயரமான வெற்றியை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கி பொறுமையைக் காத்து உயரமாக வளரும் மூங்கில் வெற்றிக்கு பொறுமை அவசியம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
ஒருசெயலில் பொறுமையைக் கழற்றி விடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை.
அவசரம் நமக்குச் சிப்பிகளைத் தரலாம்.
ஆனால் பொறுமையே முத்துக்களைத் தரும்.
ஒருவருடைய திறமைகளை வெற்றியாக உருமாற்றித் தருவது பொறுமையே!
பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு!
அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய்ச் செயல்படும்.
‘நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்’ என்பது லியோ டால்ஸ்டாயின் தத்துவம்.
வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும் ஒரு சதவீத உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்;டீன்.
பொறுமையான முயற்சியே வெற்றிக்கு அடித்தளம்.
வெற்றியையும் அதனைக் கொண்டாடும் மனநிலையையும் ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிதே!