ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை
சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…
இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…
ஒருவன் மனையை
இன்னொருவன்
அபகரிக்கிறான்…
ஒருவன் மனைவியை
இன்னொருவன்
அனுபவிக்கிறான்…
மண்ணுக்கும்
சண்டையிடுகிறான்
பெண்ணுக்கும்
சண்டையிடுகிறான்…
அண்ணா! காப்பாற்றுங்கள்!
எனக் கதறியவளுக்கு
எந்த அண்ணனும் கைக்
கொடுக்கவில்லை…
மாயக் கண்ணனும் துகில்
கொடுக்கவில்லை…
இங்கே
ஆண்மையை கல்யாண
சந்தையில் விற்று விட்டுப்
பெண்மையை காரிருள்
சந்தையில் விலை பேசுகிறான்…
இங்கே
ஆண்டானுக்கு ஒருசாதி
அடிமைக்கு ஒருசாதி
ஆண்டவனுக்கும் சாதிகள்
உண்டு இங்கே!
இங்கே
அரசியல் மந்திகள்
மாறி மாறித் தாவிக்
கொண்டிருக்கின்றன
கட்சி மரங்களை…
நள்ளிரவில் சுதந்திரம்
வாங்கிய இந்தியா இன்னும்
தன் விடியலைத் தேடிக்
கொண்டிருக்கிறது…
பூமி சுற்றுவதை நிறுத்தட்டும்!
உலகம் அழிந்து போகட்டும்!
புல் பூண்டினங்கள் ஒழிந்து
போகட்டும்!
சாத்தான் சர்ப்பத்தைக்
கொன்றுப் போடட்டும்!
ஏ ஏவாளே! அதோ ஒரு
தேவதை வருகிறாள்!
அவளிடம் நீ பழம்
வாங்கி உண்டு விடு!
புதியதோர் பூமியை
உருவாக்கிக் கொடு!
உலகம் அந்த நாளைப்
போகியெனக் கொண்டாடட்டும்!
ரோகிணி கனகராஜ்
ரோகிணி கனகராஜ் அவர்களின் படைப்புகள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!