கதவைத் திற! காற்று வரட்டும்! என்பது போல வாயிலைத் திற! வசந்த மகள் உள்ளே வரட்டும்! என்று தமிழ் மகளாம் தைமகளை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுவதே போகிப் பண்டிகையாகும்!
“கல்தோன்றி மண்தோன்றிய காலத்தே தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி” என்ற பெருமைக்குரிய செம்மொழியாம் தமிழ் மொழியினை எடுத்து இயம்பும் ஆளுமை பெற்றவர்கள் தமிழர்களாகிய நாம்!
நம் பழம்பெரும் பாரத நாட்டில் பல்வேறு மாநிலத்தவர்கள் பல்வேறு பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். அதுபோல் நம் தமிழ் இனத்திற்கென்றே உண்டாக்கப்பட்டது “தைத்திங்கள் முதல் நாள்” – “பொங்கல் விழா”
பழையன கழிதலும் புதியான புகுதலும் என்பதற்கேற்ப வீட்டில் உள்ள பழைய உபயோக இல்லாத பொருட்களை சேர்ந்து வீதி ஓரம் எரித்துவிட்டு புதிய பொருட்களுடன் புதிதாக பிறக்கும் தைமகளை வரவேற்பது நம் வழக்கம்.
“வேண்டாததைத் தூர எறிவது” என்பது பொருட்களை மட்டும் அல்ல! நம் மனங்களில் புரையோடிக் கிடக்கும் வேண்டாத எண்ணங்களையும் விட்டொழித்து அன்பு, வாய்மை, நேர்மை, அறிவு, விட்டுக் கொடுத்தல் போன்றவைகளை புதிதாக உறுதியுடன் மனத்தில் இருத்தி நம் செயல்களில் அதனை பிரதிபலிக்க வேண்டும் என்பதே போகிப் பண்டிகையின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை ஆகும்.
நாட்களை இனிமையாக துவக்க எதையோ தேடி காத்திருக்க வேண்டியது இல்லை! ஒருவருக்கொருவர் இனிய புன்னகையுடன் துவக்கினாலே போதும்! ஒவ்வொரு போகியிலும் நாம் புதிதாகப் பிறக்கின்றோம்! புதிய, நல்ல வழித்தடம் பதிப்போம்! தீய சக்திகளுக்கு விடைகொடுத்து போகச் செய்வதே போகியின் தத்துவம்!
கருவில் உருவான எதுவும் உலகில் நிரந்தரமாய் இருக்கப்போவதில்லை! இயற்கை மட்டுமே இருக்கும் என்றால் அதையும் உறுதியாகச் சொல்ல இயலாது! எனவே நாம் வாழும் வரை அன்பு செய்வதே சிறந்தது! அன்பே கடவுள்!
– ஜெயந்தி
Comments are closed.