போடுங்கம்மா குலவை

குலவை ‍- கும்மி

போடுங்கம்மா குலவை என்பது காளியம்மன் / மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும்.

 
மஞ்சளுன்னா மஞ்சள்
மலையாளத்து கொச்சி மஞ்சள்
நாழி நறுக்கு மஞ்சள்
நன்னாளி பச்சை மஞ்சள்
அரைத்து எடுப்பாளாம்
ஐந்து வகை கிண்ணியிலே
தேய்த்துக் குளிப்பாளாம்
தெப்ப மெல்லாம் தான் மணக்க

காசியிலே நீராடி கங்கையிலே தலை உலர்த்தி
விரிச்ச தலையோட வேப்பிலையும் கையிலேந்தி
வீதியெங்கும் விளையாடி வீரநடை தான் போட்டு
வாராளாம் மாரி நம்ம தெரு தேடி
நம்ம தெரு மக்களத் தான்
வாழ வைக்க வேணுமின்னு
போடுங்கம்மா தாயி பொன்னான முதல் குலவை

மஞ்சளுன்னா மஞ்சள் மைசூர் ரேக்கு மஞ்சள்
நாழி நறுக்கு மஞ்சள் நன்னாளி பச்சை மஞ்சள்
அரைத்து எடுப்பாளாம் ஐந்து வகை கிண்ணியிலே
தேய்த்துக் குளிப்பாளாம் திரேகமெல்லாம் தான் மணக்க

குற்றால அருவியிலே குளித்து அவள்நீராடி
ஈரத்தலையோட இந்தரவர்ணப்பட்டுத்தி
நம்மஊரு வீதியிலே தெருவெல்லாம் விளையாடி
செண்பகப் பூப்பெறக்கி சிவலிங்கம் பூஜை பண்ணி
வாராளாம் மாரி நம்ம தெரு தேடி
போடுங்கம்மா தாயே பொன்னான மறுகுலவை

மஞ்சளுன்னா மஞ்சள் மதுரை மீனாக்கோவில் மஞ்சள்
நாழி நறுக்கு மஞ்சள் நன்னாளி பச்சை மஞ்சள்
அரைத்து எடுப்பாளாம் ஐந்து வகை கிண்ணியிலே
தேய்த்துக் குளிப்பாளாம் தேச மெங்கும் தான் மணக்க

ஆத்திலே நீராடி அவசரமாய் தலை உலர்த்தி
தீர்த்தக் கரை சென்று தீர்த்தங்களும் தான் கொண்டு
ஓடோடி வாராளாம் நம்ம தெரு தேடி
நம்ம தெரு மக்களைத்தான் உண்மையுடன் காப்பதற்கு
வாராளாம் மாரி வந்திடுவா தேடி
போடுங்கம்மா தாயி பொன்னான முக்குலவை

யானை இது யானை அய்யனார் தந்த யானை
யானைகளைப் பார்த்தால் மேகங்கள் போலேயல்லோ
யானைத்தந்தம் பார்த்தால் தாழை மடல் போலே
யானைக் காதுப் பார்த்தால் மாரிக்கு வெண் சாமரம் வீசினது போலே

யானை வந்து இறங்க அல்லியக் கால் நட்ட
சேனை வந்து இறங்க செல்வம் பொழிந்திட
பச்சைக் காய்கறியும் பாலும் தருவோமென்று
பராமதில் ஏறி பார்த்திருப்பாள் அம்மா

சுட்ட அப்பமும் சோறும் தருவோமென்று
சூழ்ந்த மதில் ஏறி சுற்றிடுவாள் அம்மா
போடுங்கம்மா மாந்தர்களே பொன்னான மணிக்குலவை
கம்மாக் கரையோரம் கை விதையை விதைத்து வைத்தாள்

அள்ளி விதை விதைத்தாள் அரைச்சம்பா நெல்லு
அம்மா விதைத்த விதை அறுக்கப் பதமாச்சு
கட்டுங்களங் காணும் கதிர் உழக்கு நெல் காணும்
பொழி போட வாராளாம் பொன்னு முத்து மாரியம்மாள்

என்ன சொல்லி பொழி அளந்தாள் எங்க முத்து மாரியம்மாள்
நாழி நெல் எடுத்தாள் நாடெங்கும் படி போட
உழக்கு நெல் எடுத்தாள் உலகமெல்லாம் படி போட

வைரவ சாமிக்கு வரிசைப்படி அளந்தாள்
கருப்பண சாமிக்கு கணக்குடன் படி அளந்தாள்
முத்தாலம்மன் தேவிக்குத் தான் முதற்படி தானளந்தாள்
போடுங்கம்மா மாந்தர்களே பொன்னான மணிக்குலவை.

 

Visited 1 times, 1 visit(s) today