போதை பாதை போகாதே – சிறுகதை

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கார்த்தி, பிரபு, ராஜா மூவரும் ஒற்றையடிப் பாதை செல்லும் அந்த காட்டுப் பகுதியில், மான்கள் துள்ளிக் குதித்து வருவது போல் வந்தனர்.

அவர்களின் கையில் ஒருபை இருந்தது.

ஒருமரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்தனர். கார்த்தி பையிலிருந்து அதனை எடுத்தான்.

நம் நாட்டு இளைஞர்களை எது வீணடிக்கிறதோ அது, பலர் குடியை எது கெடுக்கிறதோ அது, உடல்நலத்தை எது கெடுக்கிறதோ அது சிரித்துக் கொண்டிருந்தது.

பல உயிர்களை காவு வாங்கிய, பல தாய்மார்களின் தாலியைப் பறித்த, அந்த பாழாய்ப் போன மது பாட்டிலை எடுத்து மூவரும் குடித்துத் தீர்த்தனர்.

நன்றாகக் குடித்த மூவரும் மாலை வரை அங்கேயே படுத்து போதையில் உறங்கினர்.

பிறகு எழுந்தனர். உடல் மிக களைப்பாக இருந்தது. மனம் அதைவிட மிகக் களைப்பாக உணர்ந்தது. நடக்க முடியாமல் நடந்து மூவரும் வீடு சென்றனர்.

 

போதை பாதை போகாதே

அடுத்த நாள் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

‘போகாதே போதை பாதை’ என்ற தலைப்பில் அவ்வூரின் தலைமை மருத்துவர் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் பேசினார்.

“எதிர்கால இந்தியாவின் தூண்களே!

வருங்கால தலைவர்களே!

உங்களின் அறிவை மழுங்கச் செய்ய, சமுதாயத்தில் ஆயிரம் பிரச்சினைகள் பின் தொடரும்.

குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உலவக் கூடிய மது, உங்களை வென்று விடுகிறது.

 

மது உங்களுக்கு சுகம் தருகின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அது பாதி உண்மை.

மதுவை நாம் அருந்தியதும், அது உடனடியாக ஒரு ஊக்கமூட்டியாக செயல்படுகிறது. நமது மனதை அதன் நிகழ்காலத்தை மறக்கச் செய்து, ஒரு போலியான தற்காலிக சந்தோசத்தைக் கொடுக்கின்றது. அதனால்தான் கஷ்டத்தை மறக்க மது உதவுகின்றது என்று பலர் நினைக்கின்றோம்.

ஆனால் நேரம் ஆக ஆக அது நம் மனதை உற்சாகம் இழக்க வைக்கின்றது.

நாம் எந்த கஷ்டத்தை மறந்தோமோ, அது மீண்டும் பூதம் போல் வந்து நம்மைத் தாக்குவதாக உணர்கின்றோம்.

கஷ்டத்தை மறக்க மீண்டும் மதுவை நாம் நாடுவோம்.

விரைவிலேயே நம் கட்டுப்பாட்டில் மது இருக்காது. மதுவின் கட்டுப்பாட்டில் நாம் இருப்போம்.

 

எல்லாப் பழக்கங்களும் சிலந்தி வலை போல ஆரம்பிக்கும். பின்னர் இரும்புச் சிறையாக மாறிவிடும்.

அதனை சுவைப்பதால் உங்களின் மனம், செயல், சிந்தனைத் திறன், சிறுமூளை மற்றும் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கின்றன.

உடல் நலம் மற்றும் மன நலம் கெட்டு நாம் நம் பெற்றோருக்கு, மனைவிக்கு மற்றும் அன்புக் குழந்தைகளுக்கு பாரமாக மாறிவிடுவோம்.

நீ குடிகாரன் என்றால், அதன் தண்டனையை உன் குழந்தைதான் அனுபவிக்கும். நீ இப்போது முடிவு செய்துகொள்; நீ குடிகாரனா, இல்லை உன் வருங்காலக் குழந்தைக்கு நல்ல அப்பனா என்று.

 

கவலையை மறக்கக் குடிக்காதே.

கவலையை நீக்க குடும்பத்தின் அன்பு, ஆன்மிகம், ஒழுக்கம், பெரியோர் நட்பு, இயற்கையை ரசித்தல் மற்றும் கடின‌ உழைப்பு போன்றவற்றில் விருப்பம் செலுத்து.

 

குடி கொண்டாட்டம் அல்ல; கொல்லும் அரக்கன்.

மகிழ்ச்சிக்காகக் குடிக்காதே! குடி மட்டுமே மகிழ்ச்சி தருவதல்ல.

நண்பர்களின் நட்பு, இயற்கை, புத்தக வாசிப்பு, புகைப்படம் எடுத்தல், ஆன்மிகம், விளையாட்டு, சுற்றுலா, ஏழைகளுக்குத் தொண்டு மற்றும் பல விசயங்கள் மகிழ்ச்சி தர உள்ளன.

மதுவை மற. மகிழ்ச்சிக்கான பல வழிகளை இயற்கை திறக்கும்.

 

ஒரு முறை நான் சுவைத்து விட்டு, பிறகு விட்டு விடுவேன் என்று நினைக்காதே!

நீ விட‌ நினைத்தாலும், மது என்னும் அரக்கன் உன்னை விட மாட்டான்.

மதுவை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

 

உங்கள் முன் இரு பாதைகள் உள்ளன. ஒன்று போதையின் பாதை. அது மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

போதையின் பாதை சென்று சேரும் இடம் நரகம்.

இன்னொன்று கரடு முரடான பாதை போல் உங்களுக்குத் தோன்றும். ஆனால் அதில் பழக்கப்பட்டு விட்டீர்கள் என்றால் அந்த பயணம் மிகவும் இனிதானது. அது உங்களுக்கு நல்ல கல்வி தரும்; நல்ல வேலை தரும்; நல்ல மனைவி தரும்; மகிழ்வான குழந்தைகள் தரும்.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள்.

அந்தப் பாதை சென்று சேரும் இடம் சொர்க்கம்”

என்று தலைமை மருத்துவர் பேசினார்.

 

எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வீர்கள்?

போதையின் பாதையா?

உண்மையான‌ மகிழ்ச்சியின் பாதையா?

என்று மாணவர்களிடம் கேட்டார்.

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில்,

உண்மையான மகிழ்ச்சியின் பாதை என்று உறுதிமொழி எடுத்தனர்.

 

இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குடிப்பதை நிறுத்தினால் போதும்; அனைத்து மதுக் கடைகளும் தானாக மூடப்படும்.

உங்களையும் காத்து இந்த நாட்டையும் காக்க முடிவெடுங்கள்!” என்று தலைமை மருத்துவர் பேசி முடித்தார்.

 

மகத்தான இந்தியா

அந்த கூட்டத்தில் கார்த்தி, பிரபு, ராஜாவும் அமர்ந்து மருத்துவர் பேசியதைக் கேட்டனர்; மனம் வருந்தினர். அன்று குடிக்க பையில் வைத்திருந்த மது பாட்டிலை ராஜா உடைத்து எறிந்தான்.

மற்ற கல்லூரி மாணவர்களையும் இணைத்து, ‘போகாதே போதை பாதை’ என்ற வாசகம் கொண்டு விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.

வாட்ஸ்அப் வழியாக அலைபேசியில் அனைத்து மக்களுக்கும் அந்த வாசகம் கொண்டு சேர்க்கப்பட்டது.

நாடு முழுவதும் பரவிய அந்த வாசகத்தின் பயனாக‌, மதுக்கடைகளில் கூட்டம் குறையத் தொடங்கியது.

மதுக்கடைகளும் ஒவ்வொன்றாக குறையத் தொடங்கின. இறுதியில் மதுவே இல்லாத மகத்தான நாடாக இந்தியா மாறியது.

இளைஞர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்பதை நிரூபித்தனர். மற்ற நாடுகளிலும் இதனை பின் தொடர்ந்தனர்.

 

போகாதே போதை பாதை

தேடாதே போதை மதுவை

வாடாதே வாழ்க்கைப் பாதையில்

நாடாதே மதுக்கடை வாசலை

 

திருந்து; அதுவே மதுவை அழிக்கும் மருந்து.

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.