எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்
என்பதெல்லாம் தெரியாமல்
எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்
வகுத்ததிலிருந்து வழி மாறிய
அறியாத பயணங்களில்
வலுவிழந்து வாழ்வியலை
சூனியமாக்கும் விதமாகவே
யாவரும் இங்கு…
உடற்கூறு ஆய்வுகளின் போதும்
உதவாத உறுப்புகள் என்பதையெல்லாம்
உயர்வன உடுத்திக் கொண்டு
பெரும்போதை விதானங்களுக்குள்
ஆணி வேர்களின் ஆட்டங்களினூடே
துளிர்விட ஏதும் வழியின்றி காய்ந்து கிடக்கிறது
பாதை சறுக்கல்களை முன்னிலைப்படுத்திய
மிதிபடும் சருகுகளாய்…
திமில் நிமிர்த்திய திமிரோடு
பிடிமாடாய் ஆகாது திரிந்து
வாடிவாசல் திறந்த போது
வக்கனையாய் வலம் வந்தவை
அடி மாடாய் அடங்கி சுருங்கி
கண்ணீரோடு கசாப்பு கடைகளில்
காயங்களை உருவாக்கியபடி…
செய்வதறியாத செயல்கள் என்று
பாவ மன்னிப்புகளை கேட்டுப் பெறும்
தகுதி களைந்து போதி மரங்கள் அல்லாது
போதை நுணுக்கங்களை போதிக்க பெற்று
முட்செடிகளாய் முகம் காட்டி
முட்டி மோதி நிற்கிறது
மானுட விருட்சங்கள் வீணே…
சுடும் தீ என்பதறிந்தும்
சுகமென விரல் நுழைத்து
குளிர்காய நினைத்தே
எதிர்வினைகளில் எரிந்து
போகிறது ததும்பும் இளமை!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
மறுமொழி இடவும்