1997ல், துபாயில் ஒரு வியாழன் மாலை.
மறுநாள் வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் வியாழன் மாலை ‘கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு’ என்னும் பாடல் வரிகள் மக்களின் மனதில் அவரவர் தாய்மொழியில் நிம்மதிப் பெருவெள்ளமாக பெருகி ஒலிக்கும்.
ஆனால் “பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா” விற்பனை பிரதிநிதியான விஜய்க்கு தடாலடியாக விற்பனை செய்வதற்கு அது ஒரு பொன்னான வாய்ப்பு.
மாலை ஐந்து மணி அளவில், பர்துபாயில் உள்ள அனைத்து அபார்ட்மெண்ட் பிளாட்களையும் அழைப்பு மணி அடித்து, அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், பெரும்பாலான ” வேண்டாம்!” “வேண்டவே வேண்டாம்!” பதில்களுக்கு மத்தியில், ஒரு சிலர் உள்ளே அழைப்பதுண்டு.
கஸ்டமர் வீட்டிற்குள் நுழைந்தால், அனைத்தும் செவ்வனே நடந்தால், ஒருமணி கழித்து, ஒரு பிரிட்டானிக்கா செட் விற்றுவிட்டு ‘பத்தாயிரம் ருபாய் கமிஷன் (1997ல்) சம்பாதித்து விட்டோம்’ என்ற வெற்றி வெறியில் இன்னும் முனைப்புடன் மேலும் நிறைய வீடுகளின் அழைப்பு மணியை அடித்து விட்டு, முடிந்தால் ஒன்றிரண்டு ஹோம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக் கொண்டு (நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை நாள், நாளை காலை உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் குழந்தைகட்கு இந்த அறிவுப் பெட்டகத்தை அறிமுகப்படுத்துகிறேன் ” என்று சொல்லிவிட்டு) இரவு 10 மணி அளவில் அறை திரும்புவது வழக்கம் விஜய்க்கு.
இந்த வேலையில் எல்லா வியாழன் மாலையும் ‘வெற்றி வியாழன்’ என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் வெற்று வியாழனாகக்கூட இருக்கலாம்.
ஆனால் தோல்வியில் துவளாது, முனைப்புடன், தன் முயற்சியில் சற்றும் தளராத வேதாள விக்ரமனாக மறுநாளைத் தொடங்குபவனே இந்த வேலையில் ஜெயிக்க முடியும். அப்படிப்பட்டவன் விஜய்.
சென்னையிலே ஒரு மூன்று பெட் ரூம் பிளாட் வாங்கவேண்டும், மகனை இஞ்சினீயர் ஆக்க வேண்டும், கார் வாங்க வேண்டும் இந்திய வாழ்க்கையில் சற்று தேக்க நிலை அடைந்தபோது, தன்னை இளக்காரமாக பார்த்த மனிதர்களிடையே வெற்றி மனிதனாக உலவ வேண்டும், இன்னும் எத்தனையோ ‘வேண்டும்’ ‘வேண்டும்’ என்ற வெறி அவனை துபாய் பாலைவன சோலை தெருக்களில் அயராமல் அலுவல் ரீதியாக அலைய வைத்தது.
அன்றொரு நாள் வியாழன் மாலையில் பல வீட்டுக்கதவுகளை தட்டி விட்டு, வேணுகோபால் என்பவரின் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டான் விஜய்.
வேணு மலையாளி. துபாயில் பதினைந்து வருடம் வாசம். ஒரு ஷிப்பிங் கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இரண்டு. ஆனால் தற்போது குடும்பம் இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றுள்ளது.
மனைவி, குழந்தைகள் இங்கு இருந்தால் விற்பனை செய்வது சற்று எளிது. ஏனென்றால் குழந்தைகள் மிகவும் விரும்பினால் மனைவி பச்சை விளக்கு காண்பித்து விடுவாள். பெரும்பாலான வீடுகளின் வழக்கம் அதுதானே.
இந்தியர்கள் மத்தியில் மலையாளிகள்தான் பிரிட்டானிக்கா என்னும் தகவல் களஞ்சியத்தை பெரும்பாலும் வாங்குவர்.
துபாயில் ஒரு சராசரி மலையாளிக் குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே ஜோலியில் இருப்பர்.
குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பி அவர்களாகவே வீட்டுக் கதவை திறந்து பெற்றோர் வரும்வரை ‘ஹோம் அலோன்’ என்று தனி வாழ்க்கை நடத்துவது பெற்றோர்க்கு குற்ற உணர்வை அளிக்கும்.
எனவே இது போன்ற விலையுர்ந்த பொருட்களை வாங்கி கொடுத்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் ஆற்றுப்படுத்திக் கொள்வர்.
அதே சமயம் இந்த ‘தகவல் களஞ்சியம்’ குழந்தைகள் படிப்பிற்கு, முக்கியமாக ‘ப்ராஜெக்ட் ஒர்க்’ பண்ணுவதற்கு உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமேயில்லை.
கேரளா 100% படிப்பறிவு உள்ள மாநிலம் என்பதில் ஆச்சர்யமே இல்லை. கல்வியறிவு என்பது அவர்களது பூர்வ ஜென்ம பந்தம்.
வேணுவின் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து, “குட் ஈவினிங்!” சொன்னபோது விஜய் மனதில் ஒர் சிந்தனை ஓடியது.
’15 வருஷ துபாய் வாழ்க்கை என்றால் வேணுவிற்கு பணத்திற்கு பஞ்சம் இல்லை. ஆனால் குடும்பம் கேரளாவில் இப்போது இருப்பதால், எமோஷனலாக கன்வின்ஸ் பண்ணுவது கஷ்டம். இருந்தாலும் பார்த்து விடுவோம்’ என்று விஜய் எண்ணினான்.
வேணுவை பல வழிகளில் பிரஷர் போட்டு ஒருமணி அளவிலான விற்பனை உரையாடல் நேரத்திற்கு பிறகு வாடிவாசல் காளையை அடக்கி ஒரு பிரிட்டானிகா செட் விற்று விட்டு (விலை ரூபாய் எழுபத்தி ஐந்தாயிரம் 1997ல்), அட்வான்ஸ் வாங்கி, அப்ளிக்கேஷன் மற்றும் இன்ஸ்டால்மென்ட் படிவங்களில் கையெழுத்து வாங்கி (ஒவ்வொரு கையெழுத்தும், “நான் ஆர்டரை கான்சல் செய்யமாட்டேன்” என்ற சத்திய சாட்சி), வெற்றிக் களிப்புடன் வெளியே வந்தான் விஜய்.
பத்தாயிரம் ரூபாய் (1997ல்) கமிஷன் அவன் பாக்கெட்டில் பொதுவாக இது போன்ற விற்பனைகளின்போது கஸ்டமரிடமிருந்து இரண்டு ரெபெரென்ஸ் (சிபாரிசு) வாங்குவான் விஜய்.
அதாவது, வேணுவைப் போலவே பிரிட்டானிகா வாங்குவதற்குண்டான வசதியும் குழந்தைகளும் தகுதியும் உடையவர்கள். அப்படி வேணு சிபாரிசு செய்த ஒரு நபர் ஜார்ஜ் தாமஸ்.
அவரை தொடர்பு கொண்டு சில நாட்கள் கழித்து அப்பாயிண்ட்மெண்ட் மூலம் வார விடுமுறை நாளான ஒரு வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் அக்குடும்பத்தை துபாய் கராமாவில் அவர்களின் விசாலமான வீட்டில் சந்தித்தான்.
ஜார்ஜ் தாமஸ் ஒரு பெரிய கம்பெனியில் சீனியர் மேனேஜர். நல்ல சம்பளம். துபாயில் இருபது வருடம் உறைவிடம். அவர் இரண்டு குழந்தைளும் சுட்டியான அறிவுக்கூர்மை கொண்ட பள்ளி சிறுவர்கள்.
எனவே ‘வெற்றி நிச்சயம்’ என்ற உணர்வுடன் தன் விற்பனை திறன் கொண்ட பேச்சு திறமையால் அனாயாசமாகப் பிரிட்டானிகாவின் பயன்களை எடுத்துரைத்தான்.
ஆனால் ஏனோ ஜார்ஜ் தாமஸ் மசியவில்லை. இன்னும் இருபத்தியாறு குழந்தைகள் விஞ்ஞான புத்தகங்களை அவர்கள் எதிர்பாராத வண்ணம் இலவசமாக வழங்கியும், அவர் அசைந்து கொடுக்காமல் இருக்க, அவர் குழந்தைகள் அப்பாவையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர் மனைவி ‘ஓகே’ என்று கண்ணால் தீவிரமாகப் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருக்க, அவர் அப்போதும் சிலையாக இருக்க, எதிரியை வீழ்த்த, கடைசி துப்பாக்கி தோட்டாவாக, புத்தகங்கள் வைத்து கொள்ள இனாமாக ஒரு ‘ஐகியா’ புத்தக அலமாரியை விஜய் வழங்கியும், அவர் வாங்க மறுத்து விட்டார்.
ஒரு மணிக்கு மேல் பேசி, விற்பனை செய்யமுடியாமல் தவித்து, விரக்தி அடைந்து, களைப்புடன் அறைக்கு திரும்பினான் விஜய்.
அதனால் அந்த தோல்வி அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.
வெற்றிகளைக் கொண்டாடுவதைவிட தோல்விகளில் பாடம் கற்றுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால்தான் விஜய் ஒரு வெற்றிகரமான சேல்ஸ்மேன்.
சில நாட்கள் கழிந்து, ஒருநாள் தற்செயலாக வேணுவை லூலூ ஷாப்பிங் மால்லில் சந்தித்தபோது, தாய்நாட்டிலிருந்து திரும்பிய குழந்தைகள் பிரிட்டானிக்கா புத்தகங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்று கேட்டான்.
அதற்கு வேணு சொன்ன பதில் விஜய்யை திடுக்கிட வைத்தது. மேலும் ஜார்ஜ் தாமஸ் ஏன் அவ்வளவு முயற்சிகளுக்கு பின்னும் பிரிட்டானிகா வாங்கவில்லை என்பதன் காரணமும் புரிந்தது.
ஆம்! கேரளாவில் வேணுவின் மனைவியின் அப்பாவிற்கு பைபாஸ் சர்ஜரிக்கு அவசரமாக நிறைய பணம் தேவைப்பட்டதால், வேணுவின் மனைவி பிரிட்டானிகாவை யாருக்கேனும் விற்றுவிட வலியுறுத்தினாள்.
மிகவும் பிரஷர் போட்டதால் வாங்கிய வேணு மிகவும் பிரஷர் போட்டும் வாங்காத ஜார்ஜ் தாமஸுக்கு நிறைய “டிஸ்கவுண்ட்” கொடுத்து அந்த புத்தம்புது பிரிட்டானிகாவை ஜார்ஜ் தாமஸிடம் விற்று விட்டார்.
அன்று ஜார்ஜ் தாமஸ் வீட்டில் அனைவர்க்கும் பிரிட்டானிகாவை பற்றி எடுத்துக் கூறியபோது ஒரு நீண்ட போன் கால் வந்ததும் போனை வைத்தவுடன் அவர், தன் மனைவியிடம் “வேணுவிடமிருந்து போன்” என்று மலையாளத்தில் சங்கேத பாஷையில் சொன்னதும் விஜய்க்கு பொட்டில் அடித்தாற்போல் நினைவுக்கு வந்தது.
ஒன்று போனால் ஒன்று வரும் என்பார்கள்; சில நேரங்களில் ஒன்று வந்தால் ஒன்று போகும் என்று விஜய் ஆறுதல் பட்டுக் கொண்டான்.
ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887