போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் இருபதாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடல்கள் உலக உயிர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவபெருமான் மீது, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகரால் பாடப் பெற்றது.

கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது, பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.

பாவை நோன்பிருக்கும் பெண்கள் நீராடி முடித்துவிட்டு, சிவபெருமான் திருவடிகளைப் போற்றி, தம்மைக் காத்தருளுமாறு வேண்டுதல் வைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நோன்பிருக்கும் பெண்கள், உலக உயிர்களின் தோன்றலுக்கும் முடிவுக்கும் காரணமானதும், இறைவனின் ஐந்தொழிலுக்குக் காரணமானதும், திருமாலும், நான்முகனும் காணாததுமான இறைவனின் திருவடிகள் தங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

குறைவில்லாத இறை இன்பத்தைப் பெற வேண்டும் எனில் தான் என்ற‌ அகந்தையை விடுத்து இறைவனிடம் சரணாகதி ஆக வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.

இனி திருவெம்பாவை இருபதாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் பாடல் விளக்கம்

எல்லா உயிர்களாலும் போற்றப்படும் இறைவனான சிவபெருமானே, எங்களைப் பாதுகாத்து, எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்கும் உன்னுடைய திருவடி மலர்களை அருளுவாயாக.

அனைத்துப் பொருட்களுக்கும் இறுதியாக இருக்கும் செம்மையான தளிர் போன்ற திருவடிகளை எங்களுக்கு அருளுவாயாக.

உலக உயிர்களின் தோற்றத்திற்கு காரணமாக பொன்னான திருவடிகளை எங்களுக்கு அருளுவாயாக.

எல்லா உயிர்களுக்கும் இன்பங்களை வழங்கும் உன்னுடைய பூ போன்ற திருவடிகளை எங்களுக்கு வழங்குவாயாக.

எல்லா உயிர்களும் இறுதியில் வந்து அடையும் இலக்கான உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எங்களுக்கு அருளுவாயாக.

திருமால், நான்முகன் இருவராலும் காண இயலாத தாமரை போன்ற திருவடிகளை அருளுவாயாக.

எங்களை எல்லாம் பிறப்பற்ற நிலைக்கு உயர்த்துமாறு ஆட்கொண்டருளும் பொன் போன்ற திருவடிகளை அருளுவாயாக.

மார்கழி நீராடலையும், உம்மையும், உம்முடைய திருவடிகளையும் நாங்கள் போற்றுகின்றோம்.

தான் என்ற அகந்தையை விடுத்து இறைவனின் திருவடியை சரணடைவதே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.