பௌத்தம் – ஓர் அறிமுகம்

பௌத்தம்

“அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள்.

மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்….

உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிப்பது, எது அதிருப்தி தருவது என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள்.

உங்களுக்கு எது சரியானது என்று தெரிந்த பிறகு அதை வளர்த்துக் கொள்ளுங்கள்”

இவ்விதமான பல கருத்துக்கள் ‘பௌத்தம்’ என்ற வார்த்தையோடு இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால் பௌத்தம் என்பது ‘சித்தார்த்த கௌதமா‘ என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்ந்த ஞானியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை.

இவர் தான் பிற்காலத்தில் ‘புத்தர்‘ – அதாவது ‘விழிப்பு அடைந்தவர்‘ என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் தன் சுய முயற்சியாலேயே ஞானம் பெற்றார்.

புத்தர் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர் கற்பித்த போற்றத்தக்க வாய்மை (தர்மம்) அவர் காண்பித்த சமய வழியைப் பின்பற்றிய சீடர்களால் (சங்கம் என்று அழைக்கப்படுவர்) வழிவழியாக வாய்மொழிச் சொல்லாகப் பரவி உலகில் நிலை பெற்றது. அவர் தம் வாழ்நாளில் 45 ஆண்டுகள் சங்கத்திற்கு வழி காட்டியாக விளங்கினார்.

இச்சங்கம் பல நூற்றாண்டுகளாக அழியாது தொடர்ந்து புத்தரின் ஞானத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையினாலும் வாய்ச் சொல்லாலும் பாதுகாத்து வருகிறது.

இது நாள் வரை புத்தம், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் எல்லாப் பௌத்த மதத்தினராலும் ‘மூன்று புகலிடங்கள்’ என்றும், ‘மூன்று இரத்தினக் கற்கள்’ என்றும் மதித்துப் பாராட்டப்படுகின்றன.

மேலும் புத்தம், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் அறிவுடைமை, வாய்மை, நற்பண்பு ஆகிய மூன்றுக்கும் அடையாளக் குறிகளாக விளங்குகின்றன. இந்த மூன்று குணங்களை நாமே நம்முள் வளர்த்துக்கொள்ள முடியும்.

புத்தர் காலத்திற்குப் பிறகு அவர் கற்றுக்கொடுத்த தர்மம் ஆசியாக் கண்டம் முழுவதும் அதற்கு அப்பாலும் பரவியது.

அதனால் அந்தந்த நாடுகளின் கலாச்சாரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் அது பல மாறுபாடுகளை அடைந்தது. அதன் விளைவாகப் பௌத்த மதத்திற்குள்ளேயே பல உட்பிரிவுகள் தோன்றின.

அவற்றுள் முக்கியமான மூன்று பிரிவுகளாவன

1)தேராவாதா (பெரியோர் வாதம்) என்று அழைக்கப்படும் பிரிவு இலங்கை, தாய்லாந்து, பர்மா நாடுகளில் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது.

2)மஹாயானா (பெரிய வாகனம்) என்று அழைக்கப்படும் பிரிவு சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளில் காணப்படுகின்ற பழக்க வழக்கங்களைத் தழுவியது.

3) வஜ்ரயானா (வைரக்கல் வாகனம்) என்று அழைக்கப்படும் பிரிவு திபெத் பகுதியில் காணப்படுகிறது. கீழ்க் காண்பவை தேராவாதா பிரிவினை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளன.

புத்தர் காட்டிய பாதை

புத்தர் ஆன்மீக விழிப்புக்கான ஒரு பாதையைக் கற்றுக் கொடுத்ததோடு நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தவேண்டிய ஒரு ‘கோட்பாட்டையும்’ காண்பித்தார்.

இந்தக் கோட்பாட்டுக்கான பாதையை, ஒன்றுக்கொன்று துணை நிற்கும் மூன்று அம்சங்களாகப் பிரிக்கலாம் – அவை நற்பண்பு, தியானம் மற்றும் அறிவுடைமை.

“நேர்மை இருக்கும் இடத்தில் அறிவுடைமை உள்ளது.
அறிவுடைமை இருக்கும் இடத்தில் நேர்மை உள்ளது.
அறிவுடைமையும் நேர்மையும் உலகில் தலைசிறந்தவைகளாகக் கூறப்படுகின்றன.”

நற்பண்பு

புத்தரின் கோட்பாட்டுக்கான பாதையில் செல்ல விரும்புவோர், சம்பிரதாயப்படி உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்க உபதேசங்களைப் பௌத்த விகாரங்களுக்குச் (துறவிகள் வசிக்கும் ஆசிரமம்) சென்று ஆண் அல்லது பெண் துறவியிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது நீங்களே உங்கள் வீட்டிலேயும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று புகலிடங்களை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கையை அறிவுடைமை, வாய்மை மற்றும் நற்பண்பு ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்கப் புத்தர் கற்றுக் கொடுத்தபடி, புத்தரை முன்னுதாரணமாக வைத்து நடந்து கொள்ள வேண்டும்.

ஐந்து நல்லொழுக்க உபதேசங்கள் என்பன நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்க உதவும் பயிற்சி விதிகளாகும்.

எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்

கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்

தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்

தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல் (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)

போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்

மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையில் வாழும் ஒருவருக்குத் தன்னடக்கமும் தியானஞ் செய்யக் கவனமாகப் பேணிவளர்க்க வேண்டிய நுண்ணிய உணர்வும் வளர்கிறது. தியானம் தான் புத்தர் காட்டிய பாதையின் இரண்டாவது அம்சம்.

தியானம்

பொதுவாக, பேச்சு வழக்கில் கூறப்படும் தியானம் என்பது மனப் பார்வையை ஒரு உருவதின் மேலோ, வார்த்தையின் மேலோ, தலைப்பின் மேலோ திரும்பத் திரும்பக் கவனம் செலுத்தி, மனதை அமைதிப்படுத்தி, அந்த உருவத்தின் அல்லது வார்த்தையின் பொருளைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பது தான்.

பௌத்த ஆழ்ந்த அறிவு, தியான (விபாஸனா என்று அழைக்கப்படும்) வழியில் இதற்கு மற்றொரு நோக்கமும் உள்ளது – அது மனதின் இயல்பான குணத்தை மேலும் நன்கு புரிந்து கொள்வதுதான்.

தியானப் பொருளை ஒரு அசையாத குறியாக வைத்தால், மனதில் புதைக்கப் பட்டுள்ள அடிமனப் போக்கைத் தெளிவுபடுத்த உதவும்.

புத்தர் தனது சீடர்களைத் தங்கள் உடம்பையும், மனத்தையும் தியானப் பொருளாகப் பயன்படுத்த ஊக்கமளித்தார்.

உதாரணத்திற்கு, மூச்செடுக்கும் போது உருவாகும் உணர்ச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு தியானப் பொருள்.

அசையாது உட்கார்ந்து, கண்களை மூடி, மூச்சின் மேல் கவனம் செலுத்தினால் ஒரு காலக் கட்டத்தில் தெளிவும் அமைதியும் தோன்றும்.

இந்த மனநிலையில், கொந்தளிக்கும் மன நிலைமைகள், எதிர்பார்ப்புகள், அடிக்கடி நிகழ்கிற மனோபாவங்கள் எல்லாம் தெளிவு பெற்று, அமைதியான ஆனால் தெளிவான விசாரணையினால் விடுபட்டு விடுகின்றன.

தியான நிலையை ஓர் இடத்தில் அசையாது உட்கார்ந்து மட்டும் அல்லாமல், அன்றாடச் செயல்களைச் செய்யும் போதும் அடையலாம் என்று புத்தர் கற்றுத் தந்தார்.

கவனத்தை உடலின் அசைவுகளின் மேலும், ஏற்படும் உடல் உணர்ச்சிகளின் மேலும், மனதில் தோன்றும் மனோநிலைகள் மற்றும் எண்ணங்கள் மீதும் செலுத்தலாம். இந்த நடமாடும் கவனம் ‘மனக்கவனத்துடன் இருத்தல்‘ என்று சொல்லப்படும்.

மனக்கவனத்துடன் இருப்பதால் சாந்தமான ஒரு கவனத்தை அறிந்து கொள்கிறோம் என்று புத்தர் தெளிவுபடுத்தினார்.

உடலையும் மனதையும் மையமாக வைத்திருந்தாலும் இந்தக் கவனமானது எந்த ஒரு உடல் அல்லது மன அனுபவத்தோடும் பட்சபாதமில்லாமலும் கட்டுப்படாமலும் இருக்கிறது.

இந்த விலகின மனநிலையானது பௌத்தர்களால் நிர்வாணா (பாலி மொழியில் நிப்பாணா) – அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத மனநிலை – என்று கூறப்படுகிற மனநிலைக்கு ஒரு முன்னோடி.

நிர்வாணா என்பது ஒரு இயற்கையான நிலை. நம் இயல்பான நிலையோடு சேர வேண்டிய ஒன்று இல்லை. மன அழுத்தங்களும், குழம்பிய பழக்கங்களும் இல்லாத போது நம் மனநிலை அப்படித்தான் இருக்கும்.

உறக்கத்திலிருந்து விழிக்கும் போது எப்படிக் கனவு நிலை மறைகிறதோ, அதேபோல மனக்கவனத்துடன் இருப்பதால் தெளிவடையும் மனமானது ஆட்டிப் படைக்கும் எண்ணங்களாலும், சந்தேகங்களாலும், கவலைகளாலும் பாதிக்கப்படுவதில்லை.

மனக்கவனத்துடன் இருத்தல் நாம் பயன்படுத்தும் அடிப்படையான கருவி என்றாலும், நம்மைப் பற்றிச் சரியான கருத்தினை நிறுவவும் மனக்கவனத்துடன் இருத்தலால் தெளிவாவதை மதிப்பீடு செய்யவும், பொதுவாகச் சில யோசனைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. இந்த குறிப்புகள்தான் புத்தரின் மெய்யறிவுப் போதனைகளினால் கிடைக்கின்றன.

மெய்யறிவு

பொதுவாகப் பயன்படுத்தப்படும் புத்தரின் மெய்யறிவுப் போதனைகள் கடவுளைப் பற்றிய அல்லது அடிப்படையான உண்மையைப் பற்றிய அறிக்கைகள் அல்ல.

அப்படிப்பட்ட அறிக்கைகளாக இருந்தால் அது கருத்து வேறுபாடுகளுக்கும், முரண்பட்ட பேச்சு வார்த்தைக்கும், வன்செயலுக்கும் கூட இடம் கொடுக்கும் என்று புத்தர் கருதினார்.

அதற்கு மாறாகப் பௌத்த நுண்ணறிவு நம்பிக்கை என்று ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் நம் வாழ்க்கையைப் பற்றி நாமே என்ன கவனிக்கிறோமோ அதை விளக்குகிறது.

பௌத்தப் போதனைகள் நமது அனுபவங்களோடு பரிசோதனை செய்து பார்க்கப்பட வேண்டும். பல்வேறு மக்கள் வாய்மையைப் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள்.

நாம் எதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால் நம் அனுபவங்கள் எவ்வளவு நியாய பூர்வமானவையாக இருக்கின்றன என்பதும், அவை நமக்கு மேலும் அறிவூட்டவும் கருணையோடு வாழ்வை நடத்தவும் வழி வகுக்கிறதா என்பதும் தான்.

போதனைகள் மனக்கசப்பு நீங்க வழிவகுக்கும் கருவிகளாக விளங்குகின்றன. மனம் தெளிவான பிறகு அடிப்படையான உண்மை – அதை எவ்விதத்தில் வெளிப்படுத்தினாலும் சரி- வெளிப்படையாகிறது.
நான்கு மேன்மையான உண்மைகள்

பொதுவாக நாம் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்டிருப்பது முழுமையற்றது என்று மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகப் புத்தர் துக்கத்தைப் பற்றி விளக்குகிறார்.

துக்கம் என்ற வார்த்தை அதிருப்தி அல்லது திருப்தி அளிக்காத என்று பொருளில் சொல்லப்படுகிறது. புத்தர் தனது போதனைகளைத் துக்கத்தைப் பற்றிய உண்மை, அதன் தொடக்கம், அதன் முடிவு மற்றும் அதன் முடிவுக்கான வழி என்று சுருக்கமாகக் கூறுகிறார்.

இந்த அடிப்படைப் போதனைகள், ஒருவருடைய அனுபவங்களோடு ஒத்துப் போகிற வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்போதனைகளே நான்கு மேன்மையான உண்மைகளென அறியப் படுகின்றன.

உண்மை 1: துக்கம் இருக்கிறது

வாழ்க்கையில் நோய், தொல்லை, இடையூறு போன்ற நமக்குப் பிடிக்காத அனுபவங்கள் ஓர் அளவுக்கு இருந்தாக வேண்டும்.

வசதியான சமுதாயங்களிலும் மக்கள் வேதனை, மனக் கவலை, குறிக்கோளற்றிருப்பது அல்லது வாழ்வின் சவால்களைச் சமாளிக்க முடியுமா என்று சந்தேகிப்பது போன்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

மேலும், பிடித்த அனுபவங்கள் குறைவாகவே உள்ளன அல்லது நிலையற்று இருக்கின்றன. நாம் அன்பு செலுத்தும் ஒருவர் இறந்தாலோ அல்லது நம் நண்பர் நம்மை ஏமாற்றி விட்டாலோ துக்கம் தோன்றுகிறது.

மேலும் தெளிவாவது என்னவென்றால் இந்தத் துக்கத்தால் எழும் மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளை மறக்க, இன்பம் தேடிப் போவது, மேன்மேலும் வெற்றி தேடுவது, புதிய உறவு தேடுவது போன்ற பொதுவாக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வெகு நேரம் உதவிகரமாக இருப்பதில்லை.

ஏனென்றால், துக்கம் நம் ஆன்மீகத் தேவையிலிருந்து வளர்கிறது. துக்கத்தை இணக்கம், சமாதானம், அமைதி போன்றவைக்கான நம் உள்ளத்தின் ஏக்கம் என்று சொல்லலாம்.

இது ஒரு ஆன்மீக ஏக்கம் என்பதால் நாம் எவ்வளவுதான் இன்பச் செயல்கள் செய்து துக்க உணர்ச்சிகளைக் குறைக்க முற்பட்டாலும் அது வெற்றி அடைவதில்லை.

நிலையற்றதன் மேலும், பலவீனமானதன் மேலும் நாம் நம்பிக்கை வைத்து நம் தேவைகளைத் திருப்தி செய்ய முயற்சிக்கும் வரை நாம் எப்போதும் ஏமாற்றம் அடைந்து எதையோ இழந்து போனது போலத் துன்பத்துக்கு ஆளாகிறோம். நம் உடலும் மனதும் எவ்வளவு பலவீனமானதென்று நாம் உணர அதிகம் சிந்தனை செய்ய வேண்டியதில்லை.

“பிடிக்காத ஒன்றுடன் தொடர்பு வைத்திருப்பது துக்கம், பிடித்த ஒன்றை விட்டு விலகி இருப்பது துக்கம், வேண்டியது கிடைக்காமலிருப்பது துக்கம், சுருக்கமாகச் சொன்னால், உடல் மற்றும் மனத்தின் கட்டுப்படுத்த முடியாத பழக்க வழக்கங்கள் எல்லாம் துக்கம்.”

உண்மை 2: துக்கத்திற்கு ஆரம்பம் இருக்கிறது

புத்தரின் அனுபவத்தில் இந்தத் தவறான ஆசையே துக்கத்தின் காரணம். இது எப்படி? எப்போதுமே நிலையற்றதன் மீது திருப்தி அடைய முயற்சித்து, கவனமில்லாமலும் ஆன்மீக நோக்குடன் இணையாமலும் இருந்தோமானால் வாழ்க்கை நமக்குத் தரக்கூடிய செல்வங்களைத் தவற விட்டுவிடுகிறோம்.

ஆன்மிகத்திற்கான உள்ளார்ந்த சக்தியைப் பயன்படுத்தாமல் ( நம் அறியாமையினால்), நாம் உணர்ச்சிகளையும் மனோபாவங்களையும் நம்பி இருக்கிறோம்.

எனினும், மனவிழிப்புடன் இருக்கும் போது இது ஒரு பழக்கம் தான் என்றும் நமது இயல்பான நிலை அல்ல என்றும் தெரிந்த பிறகு, இதை மாற்றிக் கொள்ளமுடியும் என்று உணர்ந்து கொள்கிறோம்.

உண்மை 3: துக்கத்தைத் தடுக்கலாம்

இரண்டாம் மேன்மையான உண்மையைப் புரிந்துக்கொண்டால், உணர்ந்தும் உணராமலும் இருக்கும் நமது (நம்மை மையமாக வைத்திருக்கும்) பழக்க வழக்கங்களை நம்மால் கைவிடக் கூடுமானால் மூன்றாவது உண்மை தானாகவே விளங்கும்.

பாதுகாப்பாக (மற்றவர் சொல்வதற்குப் பயந்து பயந்து) இருக்காமல், சண்டையும் ஆரம்பிக்காமல், தவறான எண்ணங்களை விட்டு, உறுதியான (மாற்றிக்கொள்ளவே முடியாத) கருத்துக்கள் இல்லாமல் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டால் மனம் ஆழ்ந்த அமைதியில் இருக்கும்.

வாழ்வை விரோதமாகவும் போதாக்குறையாகவும் காண்பிக்கும் பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் தடுக்கப்படுகின்றன.

உண்மை 4: துக்கத்தைத் தடுக்க ஓர் வழி இருக்கிறது

நாம் வாழும் வாழ்க்கை மீது ஆன்மீகக் கவனம் செலுத்த நடைமுறைக்கு உகந்த வழிமுறைகள் இதில் அடங்கியுள்ளன.

ஆன்மீக இயல்பைப் பேணிவளர்க்க முடிந்தால் தான் நம்மால் ‘கைவிட’ முடியும். அப்படி வளர்ப்ப்போமேயானால் மனம் தானாகவே நிர்வாண நிலையை நோக்கிச் செல்லும்.

வழி இருக்கிறது என்றும் வழியை நிறைவேற்ற முறை இருக்கிறது என்றும் தெரிந்துக்கொள்ளக்கூடிய நுண்ணறிவு மட்டும் இருந்தால் போதும்.

‘வழி’ என்பது மேன்மையான எட்டுப் பிரிவுப் பாதை. இதை அடிக்கடி பௌத்த மதச் சின்னங்களில் சக்கரமாகக் காண்பிக்கப்படும்.

சக்கரத்தின் ஆரைகள் எப்படி ஒன்றையொன்று தாங்கி நிற்கிறதோ அதே போல, எட்டுப் பிரிவுப் பாதையில் ஒவ்வொரு பாகமும் மற்ற பாகங்களைத் தாங்கி நிற்கின்றன.

புத்தர் வழியில் நாம் செல்வோமேயானால் கீழ்க் காணும் எட்டுப் பாகங்களையும் நாம் ஒருசேர வளர்க்க வேண்டும்.

அவை: சிறந்த கருத்து, சிறந்த நோக்கம், சிறந்த பேச்சு, சிறந்த நடத்தை, சிறந்த தொழில் வகித்தல், சிறந்த முயற்சி, சிறந்த ‘விழிப்புடன் இருத்தல்’, சிறந்த ஒருமுகச் சிந்தனை.

இங்கே ‘சிறந்த’ என்ற வார்த்தியைச் சேர்ப்பதற்குக் காரணம் நம்மையே மையமாக வைத்து வாழாமல், நற்பண்பு, தியானம் மற்றும் நுண்ணறிவுடன் வாழ அவசியம் இருப்பதால் தான். அப்படிப்பட்ட வழி எல்லோருக்கும் சிறந்தது, நமக்கும் உகந்தது.

“யாரிடம் அறிவு உணரும் ஆற்றலும், சிறந்த நுண்ணறிவும் இருக்கிறதோ, அவர்கள் தமக்குத் தாமே தீங்கு செய்து கொள்ளவோ மற்றவருக்குத் தீங்கு செய்யவோ, தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்ய நினைக்கவோ மாட்டார்கள். அவர்கள் தங்கள் நலனை நினைத்து, மற்றவர் நலனை நினைத்து, தங்கள் நலனையும் மற்றவர் நலனையும் நினைப்பதோடு உலக நலனையும் நினைக்கிறார்கள். “

பாதையைப் பின்பற்ற

எதனால் அவர் சீடர்கள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று கேட்டதற்குப் புத்தர் விளக்கினார்:

“அவர்கள் கடந்து போனதை நினைத்துக் கவலை அடைவதில்லை;
வரப்போவதை நினைத்து எண்ணி எண்ணி ஏங்குவதில்லை;
அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள்;
அதனால் பிரகாசமாக இருக்கிறார்கள்.”

இந்த வழியை முழுமையாகப் பேணி வளர்த்தவர்கள் துன்பம் நேரும் போதும் உள்ளத்தில் அமைதியையும் பொறுமையையும் காண்கிறார்கள்.

காலம் கனிந்து வரும்போது தங்கள் செல்வங்களைப் பிறருடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

குறையற்ற வாழ்வும், வன்முறையற்ற மனோபாவங்களுடனும் வாழ்வதனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மனமும் உள்ளமும் நிலையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

இதுவே நம் முயற்சிக்குக் கிடைத்த பழங்கள். இதனை அடைய, பழங்களை விளைவிக்கப் பாடுபடுவது போல், மெதுவாகவும் விடாப்பிடியாகவும் தொடந்து கருணையோடு நம் சிந்தனையைப் பேணிவளர்க்க வேண்டியுள்ளது.

இந்தக் காரணத்தால் நம்மோடு ஒத்த உணர்வாளர்களின் தோழமை நமக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சங்கத்திடம் அடைக்கலம் செல்வது இதனைப் பிரதி பலிக்கிறது.

பொதுவாகச் சங்கம் என்பது எல்லா ஆன்மீகத் தோழர்களையும் குறிக்கும். ஆனால் ஆன்மீகத் தோழமைக்கு உச்சக் கட்டமாகச் சொல்வது ஐயப்பாடில்லாமல் புத்தரின் பாதை கோட்பாடுகளைக் காண்பிக்கும் விரிவான ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்துத் தானம் நம்பி வாழும் சமயவர்க்கத்தைத் தான்.

புத்த துறவிகள் சமயப் பிரசங்கிகள் அல்லர். அவர்கள் மற்றவர்கள் கேட்டாலொழியத் தாமாகக் கற்பிப்பதற்குத் தடையுள்ளது. அவர்கள் ஆன்மீகத் தோழர்கள்.

புத்தர்வழி நடக்கும் பொது மக்களுடன் இருக்கும் உறவு, அன்னியோன்னியமான உதவி புரியும் உறவாகும். அவர்கள் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கும், பணம் வைத்திருக்கவும் தடையுள்ளது.

அவர்கள் சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும், உதவி பெறுவதற்குத் தகுந்தவர்களாக இருக்க வேண்டும். பௌத்த விகாரங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து இல்லற மக்கள் ஓடி ஒளிவதற்காக அல்ல‌.

இல்லற மக்கள் தங்கவும், போதனைகள் பெறவும் முக்கியமாக அவர்கள் விகாரங்களுக்கு செய்யும் சேவையும் உதவியும் பாராட்டதக்கதென அவர்கள் உணர வேண்டும்.

இப்படியாகத் துறவிகள் தோழர்களாகவும், வழிகாட்டிகளாகவும் மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்குத் தன்மானமும் தன்னம்பிக்கையும் வளர வாய்ப்புத் தருகிறார்கள்.

“நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
‘எதுவும் எனக்குப் பயன் தராது’
என்று சொல்லாதீர்கள்.

சீராகத் தொடர்ந்து வரும் சிறு துளிகள்
கூஜாவில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வை சிறிது சிறிதாக அடைகிறார்.”

எ.பாவலன்
drpavalan@gmail.com

Visited 1 times, 1 visit(s) today

Comments

“பௌத்தம் – ஓர் அறிமுகம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. பாவலன்

    பெளத்தம் பற்றி அறிந்து கொள்ள ஆசிரியர் அற்புதமாகக் கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரை ஆழமானது; அழகானது; தெரிந்து கொள்ள வேண்டியது.

    இதன் சாராம்சம் அறிந்தும் பின்பற்றாதது; தெளிவானது; புதுப்புனல் போன்றது; நுனிச்சுடர் போல் நுண்மையானது.

  2. பாரதிசந்திரன்

    இப்படியாகத் துறவிகள் தோழர்களாகவும், வழிகாட்டிகளாகவும் மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்குத் தன்மானமும் தன்னம்பிக்கையும் வளர வாய்ப்புத் தருகிறார்கள். மிக அருமையாக எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர்!