முழு நிலா

பௌர்ணமி வழிபாடு

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது.

பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி ஆகும்.

சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை ஆகும்.

ஆன்மீகரீதியாக பார்க்கும்போது தட்சனின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் பாசத்துடன் நடந்து கொண்டு ஏனைய மனைவியரைப் புறக்கணித்தார்.

இதனால் வருந்தமடைந்த தட்சனின் மகள்கள் தந்தையிடம் தங்களது கணவரின் செயல்பாடு குறித்து முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் எல்லா மனைவியரிடமும் அன்பு செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சந்திரன் தட்சன் சொன்னதை ஏற்காமல் ரோகிணியிடம் மட்டும் அன்பு செலுத்தினார்.

இதனால் கோபம் அடைந்த தட்சன் சந்திரனின் ஒளி மங்கும்படி ஆணையிட்டார். ஒளியிழந்த சந்திரன் இறைவனான சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனுக்கு ஒளியினைக் கொடுத்து தேய்து வளரும்படி வரம் அருளினார்.

சிவபெருமானின் வரத்தின்படி சந்திரன் பதினைந்த நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும், பதினைந்து நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும் காட்சியளிக்கிறார்.

 

காலநிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்

பௌர்ணமி அன்று சந்திரனில் இருந்து வெளிவரும் காந்த ஈர்ப்பு விசையானது பூமியின் மேல்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய தினத்தில் கடல் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன.

அதேபோல் உயிரினங்களின் மனஎழுச்சியும் அதிகமாக இருக்கும். அதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பௌர்ணமி அன்று கரடுமுரடாக நடந்து கொள்வர். மனதினை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஆனந்தத்தின் உச்சியினை பௌர்ணமி அன்று உணரலாம்.

காலநிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பௌர்ணமி தினத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது வழக்கத்திற்கு வந்திருக்கலாம்.

 

பௌர்ணமி விரதம்

பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடுமேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

 

மாத பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.

சித்திரை பௌர்ணமி

சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

 

வைகாசி பௌர்ணமி

வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.

வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.

 

ஆனி பௌர்ணமி

ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.

 

ஆடி பௌர்ணமி

ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.

 

ஆவணி பௌர்ணமி

ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.

 

புரட்டாசி பௌர்ணமி

புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இன்றைய தினத்தில் அம்மைஅப்பர் வழிபாடு, கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.

 

ஐப்பசி பௌர்ணமி

ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.

இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

 

கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில்தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.

ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

 

மார்கழி பௌர்ணமி

மார்கழியில் பௌர்ணமி பொதுவாக திருவாதிரையில் வரும். இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

 

தை பௌர்ணமி

தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.

 

மாசி பௌர்ணமி

மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.

 

பங்குனி பௌர்ணமி

பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.

எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

 

கிரிவலம்

பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.

கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

நாமும் வாழ்வினை வளமாக்கும் பௌர்ணமியில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.