ப்ரெண்ட்ஸ் – சிறுகதை

மதுரையில் அலுவலக மீட்டிங் முடித்து விட்டு பெரியார் பேருந்து நிலையத்தில், மாட்டுத்தாவணி செல்லும் பேருந்திற்காக அன்றில் காத்திருந்தபோது 22 ஏ பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி 2-வது சீட்டில் அமர்ந்து மாட்டுதாவணிக்கு டிக்கட் வாங்கினாள்.

கல்லூரியில் பயிலும்போது ஒருநாள் இந்த 22 ஏ பஸ்ஸை பிடிக்க தான் பட்ட கஷ்டங்களையும், அன்றைய நிகழ்வு கற்பித்த பாடமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

1999-ம் வருடம் நடந்த நிகழ்வுகள் இன்றும் நினைவில் அப்படியே நிற்கின்றன. பழையவைகளை அப்படியே அசைபோட்டாள் அன்றில்.

 

“ஏய், அன்றில் இன்னைக்கு பெரியார் போயிட்டு, கம்யூட்டர் ஆர்க்கிடெக்சர் புக் வாங்கிட்டு வருவோமா?” என்றாள் வெண்பா.

“சரி, இன்னைக்கு எப்டியாவது 22 ஏ பஸ்ச பிடிச்சி ஹாஸ்டலுக்கு 7-மணிக்குள்ள வந்திரனும். இல்லைனா பேரண்ட்ஸோட வந்து வார்டனப் பாக்கனும்பாங்க. எங்க வீட்ல சொன்னா என்ன நடக்கும்முன்னு தெரியாது” என்றாள் அன்றில்.

இருவரும் மாலையில் கல்லூரி முடிந்து பெரியார் பேருந்து நிலையத்திற்குச் சென்று வர முடிவு செய்தனர்.

 

அன்றிலும், வெண்பாவும் மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் இஞ்சினியரிங் பயிலும் மாணவிகள். இணைபிரியாத தோழிகள்.

இருவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்றிலின் அப்பா தனியார் கம்பெனி ஒன்றின் குமாஸ்தா. வெண்பாவின் அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். இருவரின் குடும்பமும் மிகவும் கண்டிப்பானது.

கல்லூரியின் பெண்கள் விடுதியில், விடுதி கண்காணிப்பாளர் இரவு 7-மணிக்கு ஒவ்வொரு அறையாகச் சென்று அட்டன்டென்ஸ் எடுப்பார்.

அப்போது மாணவிகள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் விடுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவிகள் பெற்றோருடன் வந்து வாடர்னைப் பார்த்து விசாரணைக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.

இந்த ஒரு கட்டுப்பாட்டைத் தவிர வேறு கட்டுப்பாடுகள் ஏதும் அவ்விடுதியில் இல்லை.

 

திட்டமிட்டபடி ப்ரெண்ட்ஸ் இருவரும் கல்லூரி முடிந்ததும் 5.30 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

அன்றில் மட்டும் கையில் பர்ஸ் வைத்திருந்தாள். இருவரின் செலவுக்குத் தேவையான பணம் அந்த பர்ஸில் இருந்தது.

இருவரும் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சர்வோதயா இலக்கிய பண்ணைக்கு நடந்தே சென்று கம்யூட்டர் ஆர்க்கிடெக்சர் புத்தகத்தை வாங்கினர்.

எதிரே இருந்த டவுன்ஹால் ரோட்டிற்குள் இருந்த அமுதம் பாதாம் பால் கடைக்குச் சென்று பாதாம் பால் வாங்கினர்.

அன்றில் கைகடிகாரத்தில் மணியைப் பார்த்தவாறே “வெண்பா, இப்பவே மணி ஆறாகப் போகுது. சீக்கிரம் பாலைக் குடி. 14 பி-ய பிடிச்சு ரிலாக்சா ஹாஸ்டலுக்கு போவோம்.” என்று அவசரப்படுத்தினாள்.

“ம்..ம்..போவோம். ரசிச்சு குடிக்க விட மாட்டியே” என்றவாறு பாதாம் பாலை வெண்பா குடித்து முடித்தாள். இருவரும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அவசரமாக ஓடி வந்தனர்.

 

மணி 6.05. 14பி புறப்பட்டு லேசாக நகர ஆரம்பித்தது. “வெண்பா, அங்க பாரு 14 பி. நீ பஸ்ஸின் பின் படிக்கட்டு வழியே ஏறு.” என்றபடி கையில் பர்ஸ் மற்றும் புத்தகத்துடன் நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸின் முன்படிகட்டு வழியே ஏறினாள் அன்றில்.

பஸ்ஸிற்குள் குறைவான கூட்டமே இருந்தது. பஸ்சுக்குள் ஏறியதும் அன்றிலிற்கு மூச்சு வாங்கியது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு “வெண்பா, வெண்பா” என்று பஸ்ஸிற்குள் கத்தினாள். பதில் ஏதும் வெண்பாவிடமிருந்து வரவில்லை.

உடனே பஸ்ஸின் முன்பகுதியிலிருந்து நகர்ந்து பின்பகுதி வரை சென்று வெண்பாவை தேடினாள் அன்றில்.

வெண்பா பஸ்ஸில் ஏறவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு நடத்துனரிடம் “பஸ்ஸை நிப்பாட்டுங்க. என்னோட பிரெண்ட் ஏறல. அவ கையில காசும் இல்ல.” என்று கத்தினாள்.

“ஏம்மா, பஸ்ஸ இங்க நிப்பாட்ட முடியாது. மதுரா காலேஜ்லதான் நிப்பாட்ட முடியும். ஏன்னா ரம்ஜான் பண்டிகைக்கு பைக் ரேஸ் நடக்குது. வெளில பாரு” என்றார்.

நடத்துனர் சொன்னது உண்மைதான். பெரியார் பஸ்டாண்டிற்கு வெளியே பைக்கில் குழந்தைகளையும், பெண்களையும் வைத்துக் கொண்டு ஆண்கள் வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர்.

“இப்ப, யாராவது பைக் ரேஸிக்குள்ள போய் அடிபட்டா, போலீசுல கம்ப்ளைண்ட் பண்ணக்கூட முடியாது. போலீசுல பெர்மிசன் வாங்கிதான் இந்த ரேஸ் நடத்துறாங்க. போலீஸ்கூட காவலுக்கு அங்க நிக்கிறாங்க பாருங்க.” என்று பேருந்திற்குள் யாரோ கூறுவது அன்றிலின் காதில் விழுந்தது.

அதற்குள் மதுரை கல்லூரி நிறுத்தம் வந்ததால் பேருந்து நின்றது. அன்றில் பேருந்திலிருந்து வேகமாக கீழே இறங்கினாள். மணியைப் பார்த்தாள். ஆறே கால்.

பெரியார் போகும் பேருந்திற்காகவோ, ஆட்டோவிற்காகவோ காத்திருக்கப் பிடிக்காமல் வேகமாக பெரியாரை நோக்கிய பாலத்தில் விருவிருவென நடந்தாள் அன்றில். பாலத்தின் பாதிக்குச் சென்றதும் ஓட ஆரம்பித்தாள்.

 

பெரியாரை நெருங்கியபோது குறுக்கே உள்ள தெருவில் புகுந்து பைக் ரேஸை தாண்டி பேருந்து நிலையத்திற்குள் புகுந்தாள்.

ஹாஸ்டல் இருந்த பகுதிக்குச் செல்லும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து வெண்பாவைத் தேடினாள். அங்கு அவளைக் காணவில்லை.

பேருந்து நிலையம் முழுவதும் தேடினாள். அன்றிலின் கண்களில் வெண்பா தென்படவே இல்லை.

ஹாஸ்டலுக்கு 7- மணிக்குள் செல்ல வேண்டும் எனில் 6.45-க்கு வரும் 22 ஏ-வை கட்டாயம் பிடிக்க வேண்டுமே. வெண்பாவின் கையில் வேறு காசு கிடையாதே. ஒருவேளை வேறு ப்ரெண்ட்ஸ் யாரோடையாவது வெண்பா அடுத்த பஸ்ஸ பிடிச்சி ஹாஸ்டலுக்கு போயிருப்பாளோ? என்றெல்லாம் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கையில் 22 ஏ வந்தது.

அன்றில் 22 ஏ-வில் ஏறி பேருந்தின் மையத்திற்கு சென்றாள்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்து நிற்கும்போது அன்றிலின் கண்கள் பேருந்திற்குள்ளும், வெளியேயும் வெண்பாவைத் தேடின.

இறுதியாக ஹாஸ்டல் இருக்கும் நிறுத்தம் வந்ததும் ஏமாற்றத்துடன் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். வெண்பாவைக் காணவில்லை. ஏழு மணியாக மூன்று நிமிடமே இருந்தது.

 

ஹாஸ்டலை நோக்கி வேகமாக ஓடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் அன்றில். இரண்டு நிமிடங்களில் விடுதி கண்காணிப்பாளர் அன்றிலின் அறைக்கு வந்து அட்டன்டென்ஸ் எடுத்துவிட்டு அடுத்த அறைக்குச் சென்றார்.

உடனே அன்றில் எதிர் பிளாக்கில் மாடியில் இருந்த வெண்பாவின் அறையை நோக்கி ஓடினாள். வெண்பாவின் அறையில் வேணி மட்டும் ரெக்கார்ட் எழுதிக் கொண்டிருந்தாள்.

வேணியிடம் நடந்தவைகளைக் கூறி வெண்பா வந்தாளா என்று கேட்டாள் அன்றில்.

“இல்லையே, அவள் ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்டவள். இப்படி அவள தொலைச்சிட்டு வந்து நிக்கிறியே. நீங்களெல்லாம் ப்ரெண்ட்ஸ் தானா?” என்று வேணி கோபப்பட்டாள்.

அன்றிலுக்கு தலை சுற்றியது. தலையைக் கவிழ்ந்தபடி செய்வதறியாது நடந்த அன்றிலை யாரோ திடீரென கட்டிப்பிடித்தார்கள்.

அன்றில் சுயநினைவு வந்து நிமிர்ந்த போது வெண்பாதான் தன்னைக் கட்டிப் பிடித்தது என்பதையும், அவள் ஏங்கி ஏங்கி அழுவதையும் உணர்ந்தாள்.

வெண்பாவின் உடலில் ஏற்பட்ட ஒருவித அதிர்வும், முகத்தின் பயமும் அன்றிலை அதிர்ச்சி அடையச் செய்தன.

 

“வெண்பா வந்திட்டியா? இன்னும் ஆன்டி உங்க ரூமுக்கு அட்டன்டென்ஸ் எடுக்க வரல. நீ நார்மலாகு. உன் ரூமுக்குப் போவாம் வா.”என்றபடி வெண்பாவின் கையைப் பிடித்தபடி அறையை நோக்கி நடந்தாள் அன்றில்.

இருவரும் லேப் ரெக்கார்ட் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தனர். அடுத்த சில நொடிகளில் விடுதி கண்காணிப்பாளர் உள்ளே நுழைந்தார்.

“ஏய், அன்றில் இன்னும் அட்டன்டென்ஸ் எடுத்து முடிக்கல அதுக்குள்ள இங்க எதுக்கு வந்தே?” என்று அதட்டினார்.

“இல்ல ஆன்டி, முக்கியமான லேப் ரெக்கார்ட் டிஸ்கசன் அதான்.” என்று கெஞ்சலாகச் சொன்னாள் அன்றில்.

“இதுதான் முதலும் கடைசியாக இருக்கனும். எல்லா ரூமுலையும் அட்டன்டென்ஸ் எடுத்ததுக்கு அப்புறந்தான் யாரும் எங்கேயும் போகனும். புரிஞ்சுதா?” என்று முறைத்தார் கண்காணிப்பாளர்.

“ம்..ம்.. சரி ஆன்டி” என்றாள் அன்றில்.

கண்காணிப்பாளர் வெளியேறியதும் வெண்பா மீண்டும் அழத் தொடங்கினாள். அன்றில் அவளைத் தேற்றி “என்ன நடந்தது? விவரமாகச் சொல்” என்றாள்.

 

“14 பி-ல நீ பாட்டுக்கு ரன்னிங்குல ஏறிட்ட. என்னால ஏற முடியல. கையில காசு இல்லங்கிறதால பக்கத்துல இருந்த பழைய புத்தகக் கடையில போயி என்னோட பிரெண்ட மிஸ் பன்னிட்டேன். பணம் முழுவதும் அவகிட்ட மாட்டிக்கிடுச்சு. என்னோட ஐடி கார்ட வைச்சிட்டு பஸ்சுல ஹாஸ்டலுக்கு போறதுக்கு பணம் குடுங்க. நாளைக்கு நான் வந்து பணத்தக் குடுத்திட்டு வாங்கிக்குறேன்னு சொன்னேன்.

போம்மா உனக்கு வேற வேலையில்ல. எத்தன பேரு இப்படி கிளம்பிருக்கீங்கன்னு ரொம்ப சத்தம் போட்டான் அந்த கடைக்காரன்.

இதப் பார்த்துகிட்டே இருந்த ஒருத்தன் வா நான் உன்னை கூட்டிட்டுப் போயி ஹாஸ்டல விடுறேன்னு சொன்னான். நா அவன கண்டுக்கல. அவன் விடாம என்னை தொந்தரவு செஞ்சான்.

அதனால நான் பஸ் ஸ்டாண்டோட அடுத்த மூலைக்கு போனேன். அங்கேயும் வந்து அவன் தொந்தரவு செஞ்சான். எனக்கு ரொம்ப பயமாயிருச்சு.

அப்பத்தான் 22 ஏ நிற்கிறத கவனிச்சேன். கண்டக்டர்கிட்ட கெஞ்சியாவது ஹாஸ்டல் ஸ்டாப்புல இறக்கிவிடச் சொல்லுவோம்முன்னு நெனச்சி நான் வேகமாக வந்து ஏறதற்குள்ள பஸ்ஸ எடுத்துட்டாங்க.

பஸ் போனதப் பார்த்ததும் அவன் மறுபடியும் வந்து ‘வா வண்டியில கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறேன்னு’ சொன்னான். எனக்கு கண்ணுல தண்ணி கட்டிருச்சு.

 

அப்பதான் பக்கத்துல இருந்த பெண்ணு ஒன்னு ‘நீங்க காலேஜ் ஸ்டூடண்டா?’ன்னு கேட்டா. ஆமாம்ன்னு தலையசைச்சேன்.

என்ன பிரச்சனைன்னு கேட்டா. நான் நடந்ததையெல்லாம் சொன்னேன்.

நான் மதுரை மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். எங்க வீடு உங்க ஹாஸ்டலுக்குப் பக்கத்திலதான் இருக்கு. உங்க யூனிஃபார்ம்ம வைச்சுதான் காலேஜ் ஸ்டூடண்டா?-ன்னு கேட்டேன். இப்ப 5 ஏ வந்திரும். அதல நாம போகலாம்முன்னு சொன்னா.

அடுத்த சில நொடிகளில 5 ஏ வந்திருச்சு. இரண்டு பேரும் பஸ்ல ஏறினோம்.

அவன் அப்பவும் பஸ்சுக்கு வெளியில நின்னு தொந்தரவு செஞ்சான். இப்ப நீ போகலனா போலீசுல சொல்லிருவேன்னு அவ மிரட்டினா. இரண்டு நிமிசத்துல பஸ்ஸ எடுத்திட்டாங்க.

ஹாஸ்டலுக்கு வந்து வாட்ச்மேன்ட்ட சொல்லி அவதான் விட்டுட்டுப் போனா. அவ வந்து சொன்னதால வாட்ச்மேன் உள்ளே விட்டாரு. ஆன்டி அட்டன்டென்ஸ் எடுக்க வர்றதுக்குள்ள வந்திட்டேன்னு” என்று கூறினாள்.

 

அழுததால் வெண்பாவின் முகம் வீங்கி இருந்தது. அன்றிலும் வெண்பாவை தேடி அலைந்ததைக் கூறினாள்.

அதனைக் கேட்டதும் வெண்பா “நீ இனிமே என்னிக்கும் ரன்னிங் பஸ்ல ஏறக் கூடாது. கூட வர்ற ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஏறின பிறகு பஸ்ல நீ ஏறணும். ஓ.கே.வா?” என்று கூறி சிரித்தாள்.

“இனிமே எங்க போனாலும் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் பேரும் கையில பணம் வைச்சுருக்கணும். எந்த சூழ்நிலையையும் பயப்படாம தைரியமாக சமாளிக்கணும். சரியா?” என்றாள் அன்றில்.

“மாட்டுதாவணி இறங்குங்க” என்று கண்டக்டர் கத்த, நினைவிற்கு வந்தவளாய் மொபசல் பஸ் நிலையத்திற்குச் சென்றாள் அன்றில்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.