உங்களின் செயல் திறனை மேலும் அதிகரிக்க உதவுபவையே ப்ரெயின் ப்ரேக் உத்திகள்.
‘பிரேக்’ என்கிற ஆங்கிலப் பதம் நம் செவிகளில் விழாத நாள் இருக்க முடியாது.
நாம் இங்கு நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் ப்ரெயின் ப்ரேக் உத்திகள், தொழிலதிபர் முதல் எழுத்தர் வரை தங்கள் செயல்திறனை அதிகரித்துக் கொள்ள உதவக் கூடியவை.
இயந்திரங்களை தொடர்ந்து இயக்க கூடாது என்பது நாம் எல்லாம் சிறுவர்களாக இருக்கும் போதே அறிந்து கொண்ட பாடம்.
அதுவே மனிதனின் வருவாய்க்கு இன்றியமையாத உறுப்பாக இருக்கும் மூளைக்கும் பொருந்தும்.
ஆம். விளம்பர இடைவேளை என்பது நாம் பார்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்ல.
நம்முடைய தலையில் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கும் தேவை.
டூடுலிங் /கலரிங்
வரைவதும் வண்ணம் அடிப்பதும் சுட்டிகளுக்கு மட்டும் உரியது அல்ல. பெரியவர்களுக்கும் உரியது.
கூகுளை ஆராய்ந்த வண்ணம் இருப்பவர்களுக்கு டூடுல் என்கிற பதம் புரிந்திருக்கும்.
அண்மையில் குழந்தைகள் தினத்தன்று ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் வரைந்த டூடுலையே அன்றைய நாளுக்குரிய டூடுல் படமாக வைத்திருந்தது கூகுள்.
சிறுவர்களுக்கான வண்ணம் அடிப்பதற்கான நோட்டுப் புத்தகங்கள் போலவே இப்பொழுது பெரியவர்கள் வண்ணம் தீட்டி மகிழ்வதற்கான நோட்டுப் புத்தகங்கள் வந்துள்ளன.
இப்படி வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் கவனம் செலுத்தும் போது மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
ஆம். ஜெம்ஸ் பட்டன் மிட்டாயை முதியவர்கள் விரும்புவது போல் காட்டப்படுவது போலவே நமக்கும் குழந்தை பருவம் திரும்பத்தான் செய்யும். அதற்குத்தான் இந்த டூடுலிங் /கலரிங்.
உடலுக்கு வேலை
மேசை பணி பார்ப்பவர், பொறுப்பு மிக்க பதவியில் இருந்தால் உட்கார்ந்தபடியே பலவித பணிகளை செய்வார்; பலரை சமாளிப்பார்; பலரை ஏவி வேலை வாங்குவார்.
இப்படி ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருந்தால் மூளை சோர்வடையத்தான் செய்யும். அப்போது உடலை ஈடுபடுத்துகிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் கவனிப்பாரற்று கிடக்கிற வீண் பொருட்களை சேகரித்து அகற்றுகிற வேலையாககூட இந்த உடல் வேலை இருக்கலாம்
வெளி உலகத்துக்கு வாருங்கள்
பணிச்சுமைக்கு நடுவே பணியிடத்தை விட்டு வாருங்கள். காலார நடந்து பாருங்கள்.
விறுவிறுப்பான நடையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; மெதுவாகவே நடந்து வெளி உலகத்தைப் பார்த்து விட்டு மீண்டும் பணியைப் பார்க்க சென்றால் மூளை புத்துணர்ச்சி பெறும்.
வித்தியாசமான பணியில் சிறிது நேரம்
உங்கள் தொழிலுக்கு தொடர்பில்லாத வேறு பணியில் சற்று நேரம் ஈடுபடலாம். அது உங்களுக்கு பணப்பயன் தராததாகவும் இருக்கலாம். அதனால் உங்கள் மூளைக்கு புது சக்தி கிட்டும்.
எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com