பந்தலும் தோரணமும் வாழை மரங்களும், பந்தலுக்கு நடுவே ‘வருக வருக’ என எழுதி மின்மினிப் பூச்சிகள் போல் விட்டு விட்டு மினுமினுக்கும் மின்சார விளக்குள்ள பலகையும், பந்தலுக்கு அடியில் வரிசையாக போடப்பட்டிருந்த மரத்தாலான இருக்கைகளும், சுரைக்காய் போல் பந்தல் மேல் இடைவெளி விட்டு நீட்டியிருந்த இரண்டு புனலில் ஓயாமல் கலகலப்பாக ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாடல்களும் மனோ வீட்டில் ஏதோ விஷேஷம் என்பதை வெளிப்படுத்தின.
‘வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தை செய்து பாரு‘ என்ற பழமொழி வீடு கட்டுவதிலும், கல்யாணம் செய்து வைப்பதிலும் உள்ள சிரமங்களை உணர்த்த வந்த பழமொழி. உண்மைதான். அதிலும் பெண்வீட்டார் படும்பாட்டிற்கு எல்லையில்லை.
நகைகள், புடவை, துணிமணிகள், பாத்திரப் பண்டங்கள் மற்றும் திருமண விருந்து செலவுகள் என பெண்வீட்டாரின் செலவுகளை அடுக்கலாம்.
இவை மட்டுமா? மாப்பிள்ளைக்கு புது இருசக்கர மோட்டார் வாகனம்; அப்பப்பா! இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
மனோ குடும்பத்தினர் பல சிரமங்களுக்கு நடுவில்தான் மகளின் திருமணத்தை நடத்த படாதபாடு படுகின்றனர்.
என்ன செய்வது? திருமணம் என்பது வாழ்வின் ஒரு அங்கம். திருமண வயதை தாண்டி ஒரு பெண் வீட்டில் இருந்தால் ஊர் என்னென்ன பேசும்.
அப்படி பேசிவிடக்கூடாது என்பதால்தான் பலர் பெண்ணின் திருமணத்தை விரைவாக முடிக்கின்றனர்.
பக்கத்துத் தெருவில் உள்ள திருமணம் தாமதமான பெண்ணைப் பார்த்து, ‘யாரையோ காதலிச்சிட்டா போலிருக்கு என்றும், இல்லங்க ஏதோ குறை இருக்கு, அதனாலதான் கல்யாணம் செய்யல என்றும், அவ அப்பனுக்கு கல்யாணம் செய்து வைக்க வக்கில்ல என்றும்’ விதவிதமாய் ஊர் வாய் பேசும்.
ஊர் வாயை மூட முடியாது என்பதால் பெண்ணின் கல்யாணம் என்பதில் அவசரம் என்பது கட்டாயமாகிவிட்டது.
மனோ அவ்வூரின் போஸ்ட் ஆபிஸில் போஸ்ட்மேனாக பணிபுரிபவர். தினமும் சைக்கிளில் சென்று ஊர் மக்களுக்கு வந்திருக்கும் கடிதங்கள், மணியார்டர் என பலவிதமான தபால்களைக் கொண்டு சேர்ப்பவர். ஒரு மகன், ஒரு மகள்.
சிரமப்பட்டு மகளை கல்லூரியில் இளங்கலை தமிழ் படிக்க வைத்தார். மகன் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
சொந்த ஓட்டு வீட்டில் வசித்து வருபவர். அங்கும் இங்கும் கடன் வாங்கி, ஆபிஸில் லோன் வாங்கி திருமண ஏற்பாடுகளை செய்பவர்.
பட்டணத்தில் அரசு பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரிபவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார்.
தந்தை சொல்லைத் தட்டாத மகள் கிடைத்தது அவர் செய்த புண்ணியம். அவர் மனைவியும் அவர் சொல்லைத் தட்டியதில்லை. இந்த விஷயத்தில் மனோ கொடுத்து வைத்தவர்.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. வீட்டில் ‘தாய் நலுங்கு‘ நடந்தது.
மகளுக்கு சந்தனத்தையும், குங்குமத்தையும் நெற்றியில் வைக்கும்போது கண்ணீரும் இனித்தது தாய்க்கு. கண்கலங்க மகள் தாய் நலுங்கை ஏற்றாள்.
வீட்டிற்கு வந்த மனோ நிற்க நேரமில்லாமல், மேளத்திற்கு அடவான்ஸ் கொடுக்க உடனே கிளம்பினார்.
“ஏங்க சாப்பிட்டப் பிறகு போகலாமே?” என்றாள் மனைவி.
“இல்லம்மா அடுத்தடுத்து வேலை இருக்கு, வழியில எதாவது சாப்டுக்குறன்” என ஊர் நண்பர் மோகனுடன் விரைந்து சென்றார்.
நாளை கல்யாணம். இரவு பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக காத்திருந்தனர் மனோ குடும்பத்தினர்.
வருகின்ற மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு சுடச்சுட இட்லி, வெங்காய தோசை, மசாலா போண்டா, மைசூர் பாக்கு, தேங்காய் சட்டினி, சாம்பார், காபி என மணமணக்க எல்லாம் வீட்டின் பின்பக்கம் தயாரானது.
சமையல் சுந்தரத்திடம், “எல்லா உணவும் சுவையாக இருக்கனும், மாப்பிள்ளை வீட்டார் ஒரு குறை கூட சொல்லி விடக்கூடாது’ என சாந்தமாக கூறினார் மனோ.
பெண் அழைக்க வந்தவர்களுக்கு வாழை இலையில் சுடச்சுட இட்லி முதல், செய்து வைத்த விருந்து முழுவதும் பரிமாறப்பட்டது.
பெண்ணை பொட்டு வைத்து அனுப்பும் போது தாயும், மகளும் கட்டிப் பிடித்து அழும் நிகழ்வைப் பார்த்த அங்கு கூடியிருந்தவர்களின் மனம் கலங்கியது.
“கவலைப்படாதீங்கம்மா, நல்ல நாள் அதுவுமா ஏன் அழறீங்க?” என மனதால் அழுத மனோ அதனை வெளிக்காட்டாமல் அவர்களைத் தேற்றினார்.
அடுத்தநாள் காலை சென்னையில் கல்யாணம். மாப்பிள்ளை வீட்டார் உபசரிப்பில் மிக சிறப்பாக நடைபெற்றது.
மறுநாள் மனோ ஊரில் அவர் வீட்டில் வரவேற்பு விழா நடைபெற்றது. விருந்து சிறப்பாக நடந்தேறியது.
என்ன செய்வது? பெண்ணாக பிறந்தவள், பிறந்து வளர்ந்த வீட்டை, தந்தையை, தாயை, தம்பியை விட்டுப் பிரிவெதென்பது இயற்கைதான். ஆனால் பிரிகின்ற வேளையில் பெண்ணின் தாயின் மனம் என்ன பாடுபடும்.
ஓடி ஆடி விளையாடிய வீடு, பல கஷ்டத்திலும் மகளை கஷ்டமில்லாமல் வளர்த்த அப்பா, அம்மா இவர்களைப் பிரிவதென்பது கொடுமையான உலக இயற்கை.
அழுது அழுது கண்கள் சிவந்தன, தாய்க்கும்,மகளுக்கும். அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து, அழுகையை இதுவரை வெளிக்காட்டாமல் இருந்த மனோ, அவரை அறியாமல் மகளை அணைத்து கண்களில் நீர் ததும்பி வெளியேற அழுதார். இதனை பார்த்த மனோவின் மகனும் அழுதான்.
மகளை அனுப்பிய மனோ குடும்பத்தினர் அமைதியாக அமர்ந்தனர் வீட்டில். மனோ தன் மகளின் சிறு வயது புகைப்படத்தை எடுத்து கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார்.
மனோவின் மகன் அம்மாவிடம், “அம்மா, அக்கா இனிமேல் எப்பம்மா வரும்?” என வருத்தத்தோடு வினவினான்.
பந்தல், தோரணம், இருக்கைகள் அனைத்தும் மனோ வீட்டை விட்டுச் சென்றன. மனோவின் நண்பர் அனைவருக்கும் பணத்தை பட்டுவாடா செய்தார். வீட்டை விட்டுச் சென்ற அனைத்தும் வாடகை.
ஆனால் மகள் வாடகை இல்லையே! இதுவரை கலகலப்பாக இருந்த மனோவின் வீடு, மகள் சென்றதும் நிசப்தமான வீடானது.
“என்னப்பா மனோ சந்தோஷம்தானே! மிகப்பெரிய கடமை முடிந்தது” என ஊர் தலைவர் தேற்றினார்.
ஆனால் மனோ மனதால் நினைத்தார். இனிதான் நிறைய கடமைகள் இருக்கிறது. பெண்ணை திருமணம் செய்து வைப்பதோடு கடமை முடிவதில்லை. அடுத்தடுத்த கடமைகள் தொடர்ச்சியாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
திருமணம், ஐந்துமாத சீரு, வளையல் காப்பு,மகளின் பிரசவம்,குழந்தையின் பெயர்சூட்டும் பதினாறாம் நாள் விழா என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெண்ணின் கல்யாணத்தை நடத்துவது மிகப்பெரிய சவால்தான். ஏனென்றால் “மகள் ஒரு தொடர்கதை”.
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
Comments
“மகள் ஒரு தொடர்கதை – சிறுகதை” அதற்கு 2 மறுமொழிகள்
Excellent narration. Really heart touching. Read this story as a father… the author narrate the real feelings of a Tamil Father.
அருமை