பாரதி

மகாகவி சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி என்றவுடன் அவருடைய வீரமிக்க, எழுச்சியுடைய பாடல்கள் மற்றும் அவரின் சமுதாயத் தொண்டே நம் எல்லோர் நினைவிலும் நிற்கும்.

பாரதி ஒரு சிறந்த கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலை போராட்டவீரர், எழுத்தர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

பாரத அன்னை அடிமை விலங்கில் சிக்கித் தவிப்பதைக் கண்டு மனங்குமுறி, அவ்வன்னையின் விலங்கொடிக்கத் தமது கவிதா சக்தியைப் பயன்படுத்தி மக்களை தட்டி எழுப்பி விடுதலை உணர்ச்சியை தூண்டினார் பாரதி.

நாடு விடுதலை பெறுவதற்கு பல்லாண்டு முன்னதாகவே “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” என மகிழ்ச்சி கூத்தாடியவர் பாரதி.

தமிழில் மறுமலர்ச்சி யுகம் ஒன்றைத் தோற்றுவித்த பெருமை அவருடைய கவிதைகளுக்கு உண்டு.

பாரதியார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள‌ எட்டையபுரத்தில் 1882-ல் டிசம்பர் 11ம் நாள் சின்னச்சாமி ஐயர் மற்றும் இலட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் சுப்பிரமணியன் என்பதாகும்.

சிறுவயதிலேயே இசையைக் கற்றார். தனது தொடக்கக் கல்வியை திருநெல்வேலியில் பயின்றார். தனது ஐந்தாம் வயதில் தாயை இழந்தார்.

ஏழாம் வயதிலேயே அவருக்கு கவிதை இயற்றும் புலமை உண்டாயிற்று. பதினொன்றாவது வயதில் புலவர்கள் பலர் கூடியிருந்த சபையொன்றில் கொடுத்த ஈற்றடிகளை வைத்து கவிதைகளை விரைவாக இயற்றிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தினார். சபையினர் மகிழ்ந்து இவருக்கு பாரதியார் என்ற பட்டம் வழங்கினார். பாரதியார் என்பதற்கு கலைமகள் அருள் பெற்றவர் என்று பொருள்.

பாரதி தனது 14வது வயதில் 7 வயது செல்லம்மாள் என்ற பெண்ணை மணந்தார். கணக்கினை நன்கு பயில்வது தந்தையின் விருப்பமாக இருந்தது. எனவே காசியிலிருக்கும் தனது சகோதரி வீட்டிற்கு பாரதியை அனுப்பி வைத்தார். காசியில் தனது அத்தை வீட்டில் இருந்தபோது வடமொழியும் இந்தியும் கற்றுத் தேர்ந்தார். அப்போதே அவருக்கு அரசியலில் ஈடுபாடு உண்டாயிற்று.

1902-ல் எட்டையபுரம் திரும்பிய பாரதி இரண்டு ஆண்டுகள் எட்டையபுர மன்னனின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார். அப்போது தமிழறிஞர்களுடன் தமிழாராய்ச்சி செய்தார். செல்லி, பைரன் போன்ற ஆங்கில கவிஞர்களின் இலக்கியங்களை ஆர்வத்துடன் கற்றார். அவர்களுடைய சுதந்திர வெறி இவரையும் ஆட்கொண்டது.

1904 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழின் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதில் தேச பக்தியைப் போற்றியும், போலிகளை பரிகசித்தும் பாடல்களும், கட்டுரைகளும் எழுதினார்.

1906ம் ஆண்டில் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதியார் சென்றார். தேசியத் தலைவர்களின் திலகமாக விளங்கிய பாலகங்காதர திலகரின் பேச்சும் கருத்துகளும் பாரதியாரை மிகவும் கவர்ந்தன. அவரைப் போற்றி வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே என்று பாடினார்.

1905-ல் பனராஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதா அறிமுகம் கிடைத்தது. சகோதரி நிவேதிதாவிடம் உரையாடியபோது பெண் விடுதலை மற்றும் பெண்கள் முன்னேற்றமே நாடு உயர வழி வகுக்கும் என்பதனை அறிந்து கொண்டு அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் புதுமைப் பெண் கனவு பாரதியிடம் உருவாகத் தொடங்கியது.

பாரதியார் தம்மிடம் ஊற்றெனப் பெருக்கெடுத்த சுதந்திர வேட்கையை வெளிப்படுத்த ஒரு புதிய செய்தி இதழ் தேவை எனக் கருதினார். அதனால் தேச பக்த நண்பரின் உதவியுடன் 1907-ல் இந்தியா என்னும் இதழை தொடங்கினார். அப்போது வ.உ.சிதம்பரம்பிள்ளை பாரதியாருக்கு நெருங்கிய நண்பரானார்.

1907-ல் டிசம்பரில் நடைபெற்ற சூரத் மாநாட்டில் திலகரின் தீவிரவாதக் கொள்கையை ஆதரித்த இளைஞர் மாநாட்டில் பாரதியும், வ.உ.சியும் சேர்ந்தார்கள். சென்னை திரும்பியதும் இருவரும் ஊர் ஊராகச் சென்று திலகரின் கொள்கைகளைப் பரப்பி மக்களிடம் விடுதலை உணர்ச்சியைத் தூண்டினார்கள்.

பாரதியார் கேலிச்சித்திரங்கள், பாடல்கள், கட்டுரைகள், தலையங்கங்கள் மூலமாக இந்தியா இதழில் அரசியல் பிரச்சாரத்தை நடத்தி வந்தார். இது போன்ற இதழ்களை நசுக்க எண்ணி ஆங்கிலேய அரசு புதிய அச்சுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது.

இந்தியா பத்திரிக்கை வேறொருவர் பெயரில் இருந்தது. அதனால் அவரைப் பிடித்து ஆங்கில அரசு தண்டனை கொடுத்ததோடு பாரதியாருக்கு பிடி ஆணை பிறப்பித்தது. அப்போது பாரதியார் உடல் நலம் குன்றி இருந்ததால் சிறைபடாமல் இருப்பது நன்று என்ற நண்பர்களின் கருத்திற்கு ஏற்ப பிரெஞ்சு பகுதியான புதுச்சேரிக்கு சென்றார்.

அங்கிருந்து அரவிந்தகோஷ், வ.வே.சு ஐயர் போன்றோருடன் இணைந்து புரட்சிகரமான பணிகளைச் செய்தார். புதுவையில் அரண் இல்லாச் சிறையில் விலங்கில்லாக் கைதியாக 1908 அக்டோபர் முதல் 1918 வரை பத்தாண்டுகள் வாழ்ந்து தமிழின் மறுமலர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்தார். இச்சமயத்தில் தான் பாரதியார், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் படைத்தார். பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.

பாரதியாரைத் தந்திரமாகப் புதுவை எல்லைக்கு அப்பால் வந்து கைது செய்ய போலீசார் முயன்றனர். இத்தகைய தொல்லைகளுக்கும், வறுமைக்கும் இடையே பாரதியாரின் கவிமேதை வளர்ந்த வண்ணமாக இருந்தது.

காங்கிரஸ் சரித்திரம் என்ற நூலை எழுதி இவர் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார். இதில் சுமார் 50 அத்தியாயங்கள் அவ்விதழில் வெளியாயின. 1918 நவம்பர் 20ல் பாரதியார் புதுவையை விட்டு பிரிட்டிஷ் எல்லையில் அடி வைத்தார்.

அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு டிசம்பர் 14 வரை சிறையிலிருந்தார். பின்னர் அன்னிபெசன்ட், சுதேசமித்திரன் ஆசிரியரான ஏ.ரங்கசாமி ஐயங்கார் முயற்சியால் சில நிபந்தனைகளின் படி விடுதலை செய்யப்பட்டார். 1920ல் சென்னைக்கு வந்து மீண்டும் சுதேச மித்திரனில் பணியில் சேர்ந்தார்.

மாலை வேளைகளிலும், ஓய்வு நாட்களிலும் நண்பர்கள், சீடர்களுடன் உரையாடுவதும், கூட்டங்களில் பேசுவதும், பாடல்கள் இயற்றுவதுமாக இருந்தார். “பாரதசமுதாயம் வாழ்க” என்ற சமதர்ம பாடலை ஒரு நாள் இரவு பதினொரு மணிவரை நடந்த ஒரு கூட்டத்தில் பாடினார்.

பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் குடியிருந்தார். அப்போது பார்த்தசாரதி கோவில் யானையிடம் அவர் நட்புடன் பழகி வந்தார். வழக்கம் போல் ஒரு நாள் யானைக்குச் சிற்றுண்டி அளிக்க அருகில் சென்ற போது அது இவரை தூக்கி எறிந்து விட்டது.

அதனால் ஏற்பட்ட காயம் குணமாகாமல் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாளில் பாரதியார் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் வெறும் 14 பேரே கலந்து கொண்டனர்.

பாரதி தனது தேச பக்தியை தெய்வ பக்தி நிலைக்கு உயர்த்தினார். பாரதத் தாயை பராசக்தியாக நினைத்தே பாடல்கள் பாடினார். பாரதிக்கு தாய் மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் இரு கண்கள் ஆகும்.

அவர் ஏசு கிறிஸ்து மற்றும் அல்லா பற்றியும் பாடல்கள் இயற்றி உள்ளார். சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, மற்றும் முன்னேற்றம் குறித்து பாடல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதினார்.

தன் படைப்புகள் மற்றும் சமூக சீர்திருத்த மற்றும் தேசிய சிந்தனைகள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மக்கள் கவியான பாரதியைப் போற்றுவோம்.

 


Comments

“மகாகவி சுப்பிரமணிய பாரதி” மீது ஒரு மறுமொழி