மகாகவி பாரதியார் தமிழகத்தின் அருட்கொடைகளில் ஒருவர். தன் எழுத்தால் தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்.
நாம் இக்கட்டுரையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்ப் புலமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
பிறப்பு
பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்தார்.
இவரது தந்தையார் பெயர் சின்னச்சாமி.
இவருடைய தாயார் பெயர் இலக்குமி அம்மையார்.
இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இவரை அனைவரும் செல்லமாக சுப்பையா என்று அழைத்தனர்.
சுப்பையா தன் சிறுவயதில் தாயை இழந்தார். எனவே இவர் தன் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார்.
இளமைப் பருவம்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப பாரதியார் சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றார்.
இவருடைய கவிபுனையும் ஆற்றலைக் கண்டு வியந்த எட்டையபுர மன்னர் இவருக்கு “பாரதி” என்ற பட்டம் வழங்கினார்.
பாரதி என்றால் கலைமகள் என்று பொருள்படும். அன்றிலிருந்து இவர் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்படுகிறார்.
பாரதியார் 1897 ஆம் ஆண்டு செல்லம்மாவை திருமணம் செய்து கொண்டார்.
பாரதியின் கல்வி
பாரதி சிறிது காலம் காசியில் தன் அத்தையின் வீட்டில் இருந்து படித்தார். அப்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். வங்காளம் மற்றும் ஆங்கில மொழிகளிலும் புலமை பெற்றார்.
பாரதியின் வேலை
பாரதியார் சிலகாலம் எட்டையபுர மன்னரின் அரசவையில் கவிஞராக பணியாற்றினார்.
பின்னர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன் பின் ‘சுதேசமித்திரன்’ பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.
பாரதியின் தமிழ்ப்பற்று
பாட்டுக்கொரு புலவன் பாரதி தன் தாய்மொழியாகிய தமிழ்மீது மிகுந்த பற்று கொண்டவர்.
“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடினார்.
பாரதியின் பாடல்களைக் கேட்டவுடன் நம் மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.
அவர் எழுதிய “பாப்பா பாட்டு” குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது.
“ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு– பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு– என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா.”
பாரதியார் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு மற்றும் குயில் பாட்டு ஆகிய நூல்களை எழுதினார்.
பாரதியின் தேசப்பற்று
பாரதியார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டும் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். அதனால் பிரிட்டிஷ் ஆட்சி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
நாடு விடுதலை அடைய வேண்டும்.
நாட்டில் சமத்துவம் நிலவ வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
நாட்டில் தொழில் வளர்ச்சி வேண்டும்.
இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் தலைமை ஏற்கும் முதன்மை நாடாக இருக்க வேண்டும்.
இவைதாம் மகாகவி பாரதியார் கொள்கைகள். இவற்றிற்காக சமரசம் செய்து கொள்ளாமல், தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை உழைத்தார்.
அவர் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அவர் பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது.
பாரதியின் படைப்புக்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அதாவது யார் வேண்டுமானாலும் பாரதியின் படைப்புக்களை நூலாக அல்லது கவிதை, கட்டுரை வடிவில் வெளியிடலாம். காப்புரிமை சட்டப்படி அது செல்லும்.
நாமும் பாரதியின் பாடல்களைப் படிப்போம்.
அவரை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்.
வாழ்க பாரதம்!
வளர்க பாரதி புகழ்!
– பிரேமலதா காளிதாஸ்
பாரதியார் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைக்க இக்கட்டுரை உதவியாக உள்ளது.
பாரதியின் பாடல்களில் மட்டுமல்ல; பாரதியைப் பற்றிய தங்கள் அருமையான கட்டுரையைப் படித்ததிலும் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது! சிறப்பான கட்டுரை! வாழ்த்துகள்!