மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.
மகாபாரதப் போர் மனித குலத்திற்கு மிகப்பெரிய அழிவைத் தந்த போர். போரைத் தவிர்த்திருக்கலாமா என்று நல்லவர் அனைவரும் யோசிப்பார்கள். அந்தப் போருக்குக் காரணமானவர் மீது நாம் கடுங்கோபம் கொளவதும் இயற்கையே.
முதலில் அந்த போருக்கான பிண்ணனியைத் தெரிந்து கொள்வோம்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் 5 பேர் ஓரு குழுவாகவும், கெளரவர்கள் 100 பேர் மற்றொரு குழுவாகவும் இருக்கின்றார்கள். பாண்டவர்களின் தந்தை பாண்டு. கெளரவர்களின் தந்தை, பாண்டுவின் அண்ணனான திருதுராட்டிரன்.
இரு குழுக்களுக்குள்ளும் நாட்டைப் பிரித்து ஆட்சி செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது பங்காளிச் சண்டை.
ஒரு சமயம் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே சூது விளையாட்டு நடைபெறுகிறது. அதில் பாண்டவர்கள் நாட்டை இழக்கின்றார்கள். இறுதியாகத் தங்கள் மனைவி திரெளபதியைப் பணயமாக வைத்து, அவளையும் இழக்கிறார்கள். அவள் கெளரவர்களால் அவமானப்படுத்தப் படுகிறாள். அப்போது கண்ணன் அவளின் மானத்தைக் காப்பாற்றுகிறான்.
கெளரவர்களின் முதல்வன் துரியோதனனைக் கொன்று, அவன் இரத்தத்தைக் கொண்டு குளித்த பின்பே என் கூந்தலை முடிவேன்; அதுவரை விரித்த கூந்தலோடே இருப்பேன் என்று திரெளபதி சபதம் எடுக்கிறாள்.
சூது விளையாட்டில் தோற்ற பாண்டவர்களுக்கு, பன்னிரெண்டு ஆண்டுகள் வன வாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞான வாசமும் தண்டனையாக கெளரவர்களால் வழங்கப்பட்டது. அதாவது 12 ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும்; ஓராண்டு நாட்டில் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் ஒளிந்து வாழ வேண்டும்.
தங்களின் தண்டனை காலத்தை நிபந்தனைகளின் படி நிறைவேற்றிய பாண்டவர்கள், தங்களது நாட்டினைத் திருப்பி தருமாறு கெளரவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் கெளரவர்களில் மூத்தவனான துரியோதனன் பாண்டவர்களின் நாட்டினைத் திருப்பி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டான்.
இதனால் பாண்டவர்களின் நாட்டினைத் திரும்பத் தருமாறு கேட்க, பாண்டவர்களின் சார்பாக கண்ணன் தூது செல்ல முடிவு செய்யப்பட்டது.
அவ்வாறு தூது செல்ல இருந்த சமயத்தில் நகுலனும் சகா தேவனும் கண்ணனிடத்தில் உரையாடுகிறார்கள்.
இதனை வில்லிபாரதம் என்ற அழகு தமிழில் பார்ப்போம்.
தானாக உணராதவன் பிறர் சொல் கேட்பானா?
நகுலன் கண்ணனிடம் சொல்வது,
கானெறிபோய்க் கரந்துறைந்து கடவநாள் கழித்ததற்பின் கானம் நீங்கி
ஈனமிலா வகைவந்தார் நம்துணைவர் எனச்சிறுதும் இரங்கானாகில்
மாநகரும் வளநாடும் உரிமையும்தன் மொழிப்படியே வழங்கானாகில்
தானறியாதவன் பிறர்போய் கற்பித்தால் அறிவனோ தரணிவேந்தே!
பாடலின் பொருள்:
பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு காலம் காட்டில் வசித்தும்,
ஓராண்டு காலம் மறைந்து வாழ்ந்தும், ஆக பதின்மூன்று ஆண்டுகள் கழித்து,
குறைபாடின்றி காட்டை விட்டு வெளியில் வந்துள்ளனர் என்று,
சிறிதளவும் மனம் இரங்காதவனும்,
சொன்ன சொல்படி நாட்டை வழங்காதவனும்,
தானாக உணராதவனுமான துரியோதனன்,
மற்றொருவர் தூதுபோய் எடுத்துரைத்தால் அதன்படி நடப்பானா?
நடக்க மாட்டான். அதாவது தூது சென்றாலும் பயனில்லை என்று நகுலன் சொல்கின்றான்.
முடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதிமூர்த்தி
சகாதேவன் கண்ணனிடம் சொல்வது
சிந்தித்தபடி நீயும் சென்றாலென் ஒழிந்தாலென் செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தாலென் வழங்கினாலென்
கொந்துற்ற குழலிவளும் முடித்தாலென் விரித்தாலென் குறித்த செய்கை
அந்தத்தின் முடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதிமூர்த்தி
பாடலின் பொருள்:
யாவற்றிற்கும் முன்மையானவனே கண்ணா!
நீ தூது போனால் என்ன? போகாமல் இருந்தால் என்ன?
கௌரவர் நூற்றுவரில் மூத்தவனான துரியோதனன்,
உரிய நாட்டை கொடுத்தால் என்ன? கொடுக்காமல் இருந்தால் என்ன ?
திரௌபதியும் தன்னுடைய கூந்தலை முடித்தால் என்ன ?
இல்லை இப்போது இருப்பதுபோல் கூந்தலை விரித்து வைத்து இருந்தால் என்ன?
தாங்கள் இறுதியில் முடிக்கின்ற விதத்தை அடியேனால் அறியக்கூடுமோ?
(எது நடந்தாலும் அது கண்ணனின் விருப்பப் படியே நடக்கும்)
முருகு அவிழ்க்கும் பசுந்துளப முடியோனை அன்று அலகை முலைப் பாலுண்டு
மருதிடைச் சென்று உயர் சகடம் விழவுதைத்துப் பொதுவர் மனைவளர்ந்த மாலே
ஒருவர்க்கும் தெரியாது, இங்கு உன் மாயை யானறிவேன் உண்மையாகத்
திருவுளத்துக் கருத்தெதுவோ அது எனக்கும் கருத்தென்றான் தெய்வம் அன்னான்
பாடலின் பொருள்:
துளசிமாலை அணிந்த திருமுடியுடைய பெருமானே,
அன்று குழந்தையாய் இருந்து நஞ்சுடைய பாலைப் பருகி பூதகி என்னும் பேய் மகளை அழித்தாய்!
இரு மருத மரங்களிடையே தவழ்ந்து அவர்களின் சாபத்தைத் தீர்த்தாய்!
சகடாசுரனை உதைத்து அழித்தாய்!
இடையர்களின் மாளிகையில் வளர்ந்த திருமாலே!
உன் மாயை இங்கு யாவர்க்கும் தெரியாது; ஆனால் அதனை உள்ளபடி நான் அறிவேன்.
ஆதலால் தங்களது திருவுள்ளக் கருத்து எதுவோ,
அதுவே எனக்கும் உரியதாகும் என்று தெய்வத்தைப் போன்றவனான சகாதேவன் கூறினான்.
மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450
மறுமொழி இடவும்