மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி பண்டிகை இந்துக்களால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி முடிந்து பதினான்காவது நாளான சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியை சிவன் + ராத்திரி எனப் பிரித்து சிவனை வணங்கும் இரவு என்று பொருள் கொள்ளலாம். இவ்விழாவின்போது மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் விரதமிருந்து விழித்திருந்து வழிபாடு நடத்துகின்றனர்.

பொதுவாக சிவராத்திரியை நித்யசிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர்.

நித்யசிவராத்திரி என்பது தினமும் வரும் ராத்திரியைக் குறிக்கும்.

மாதசிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து பதினான்காவது நாள் அதாவது சதுர்த்தசி திதியில் வரும் ராத்திரியைக் குறிக்கும்.

மகாசிவராத்திரி என்பது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி முடிந்து பதினான்காவது நாள் வரும் சதுர்த்தசியில் (தேய்பிறை) வரும் ராத்திரியை குறிப்பதாகும்.
சிவராத்திரி பற்றிய கதைகள்

முன்னொரு சமயத்தில் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கிடையே யார் பெரியவர் என்ற‌ போட்டியின் போது சிவபெருமான் அவர்களுக்கிடையே பெரும் ஜோதி பிழம்பாகத் தோன்றி அவர்களின் போட்டியை முறியடித்தார்.

சிவன் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய நாளே திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது. பின் விஷ்ணு, பிரம்மா மற்றும் ஏனையர் வழிபாடு செய்ததன் மூலம் ஜோதி ரூபத்திலிருந்து லிங்க வடிவமாக மாறி அவர்களுக்கு அருள் புரிந்த நாள் சிவராத்திரியாக‌  கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை ஏற்பட்ட பிரளயத்தின் போது உலக உயிர்கள் யாவும் அழிந்து இருள் சூழ்ந்து உலக இயக்கம் நின்ற போது உமையம்மை சிவனை வழிபட்டு மீண்டும் உலக இயக்கத்தை இறைவனிடம் வேண்டினார்.

உமையம்மைக்கு காட்சி அளித்த சிவன் உலக இயக்கத்தை தோற்றுவித்து தன்னை உமையம்மை வழிபட்ட நாளே தனக்கு உகந்த நாளாகும் அதுவே சிவராத்திரியாகும். அம்மையைப் போல் விழித்திருந்து வழிபடுவோருக்கு பிறப்பின்மை என்னும் மோட்சத்தை அளிப்பதாகவும் அருளினார் என்றும்

அமுதம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தபோது ஏற்பட்ட ஆலகால விஷத்தினை சிவன் உண்டு தன்னுடைய யோகத்தின் வலிமையால் அதனை தன்னுடைய தொண்டையில் இருத்தி நீலகண்டன் ஆனார். தங்களைக் காப்பாற்றிய சிவனை இரவு முழுவதும் விழித்து உலக உயிர்கள் வழிபட்ட நாள் சிவராத்திரியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

சிவராத்திரி விரதத்தின் மகிமைகள்

வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது வழி தவறி அடர்ந்த காட்டிற்குள் சென்றுவிட்டான். அப்போது புலி ஒன்று அவனை துரத்தியது. புலிக்கு பயந்து அருகில் இருந்த வில்வ‌ மரத்தில் ஏறிக் கொண்டான்.

பகல் முடிந்து இரவு வந்துவிட்டது. புலியும் மரத்தடியை விட்டு அகலவில்லை. வேடன் உறங்காமல் இருப்பதற்காக வில்வ‌ மரத்தின் இலைகளை பிய்த்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.

அவ்வப்போது வேடன் தாகத்திற்கு வைத்திருந்த நீரானது சிந்தியவாறு இருந்தது. வில்வ‌ இலை மற்றும் நீரானது கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்ததை வேடன் கவனிக்கவில்லை. மேலும் அன்றைய நாள் சிவராத்திரியாகும்.

சிவன் வேடன் முன் தோன்றி அவனுக்கு ஞானம் மற்றும் செல்வத்தை வழங்கியதோடு இறந்த பின் மோட்சத்தையும் வழங்கினார். இதன் மூலம் சிவராத்திரி என்று அறியாமல் வேடன் செய்த செயல்கள் அவனுக்கு நற்பேற்றினை வழங்கின. இதுவே சிவராத்திரி மகிமை ஆகும்.

 

சிவராத்திரி வழிபாடு மற்றும் விரத முறைகள்

சிவராத்திரி அன்று, விரதம் இருப்போர்  பகல் நேரத்தில் உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடைகள் அணிந்து சிவாலயத்திற்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

பகல் நேரத்தில் உணவருந்தாமல் விரதம் மேற்கொண்டு சிவ சிந்தனையோடு இருக்கின்றனர். ஒரு சிலர் நீர் கூட அருந்தாமல் கடுமையான விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

மாலை நேரத்தில் மீண்டும் நீராடி பின் சிவாலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நான்கு வேளை இரவு வழிபாட்டில் பங்கேற்கின்றனர். இரவு முழுவதும் விழித்திருந்து சிவன் பற்றிய பாடல்கள் மற்றும் சிவனின் மூல மந்திரமான “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை கூறி வழிபாடு நடத்துகின்றனர்.

நான்கு வேளை இரவு வழிபாட்டின் போது இறைவனுக்கு பால், நெய், தயிர், அன்னம், சந்தனம், வாசனைப் பொடி, இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இறைவனை வில்வம் இலைகள் மற்றும் ருத்திராட்ச மாலை மற்றும் பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். சிவலிங்கத்தின் உச்சியில் வில்வ இலைகளை வைத்து வழிபடுகின்றனர். தீபங்கள் ஏற்றப்படுகின்றன. பல்வேறு வகையான உணவு பொருட்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன.

மறு நாள் காலை வீட்டிற்கு வந்து நீராடி மீண்டும் சிவாலயம் சென்று இறைவனை வழிபட்டு சிவராத்திரி விரதத்தினை முடிக்கின்றனர். சிவராத்திரி விரதமிருப்பதால் மீண்டும் பிறவாமை என்கின்ற மோட்சம் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

மேலும் சிவராத்திரி அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் குலதெய்வ வழிபாடு நடத்துகின்றனர்.

 

Comments are closed.