விண்ணொளி மண்ணில் மலர்ந்ததைக் கண்டே
கண்ணொளி எல்லாம் கருணையும் பெற்றதே
ஆட்டிடை கூட்டத்தில் ஆதவன் உதித்திட
ஆட்கொண்டு செல்பவர் இவரென உதிக்குமே
தொழுவமும் தொழுகை கூடமாய் மாறிட
நழுவியும் போகுமோ நல்வினை எங்குமே
சரித்திர மற்ற சனமிகு புவியுமே
சனனத்தின் விளைவில் சரித்திரம் காண்குமே
புண்ணிய மூர்த்தியின் கண்ணிய வரவினால்
கன்னி மரியவள் கண்ணீரும் இனித்ததே
மணிமுடி மேலொரு மரகதம் போலவே
மலரினில் உறங்கிடும் தேன்துளி சுவையென
கருமணி கண்ணிலே கருணையும் பொங்கவே
கருத்தினை விதைத்தாய் கயவரும் மாறவே
உன்வழி சென்றவர் உயர்வழி அடைந்தனர்
உன்மடி நாடியே உயிர்தனை துறந்தனர்
காண்பதற் கில்லையே உமைப்போ லொருவரை
கண்டு மகிழ்கிறோம் அகத்தினில் நாளுமே
மகிமை நாதரின் அறவழி நடப்போம்
பகைமை மறந்து பந்தத்தில் திளைப்போம்
நீட்டிய கரங்கள் நிறைவாய் அழைக்குமே
பூட்டிய இதயமும் பூவாய் மலருமே
மலரும் இதயத்தில் மகிழ்வும் பொங்குமே
மகிமை நாதனின் நாமத்தை உரைத்திட
மதமும் மறந்தது மனதினில் நிறைந்தது
மதியின் ஒளியாய் தேவனைக் கண்டிட
தேவன் உதித்த திருநாள் மண்ணில்
பாவம் மறைந்த பெருநாள் நம்மில்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!