நார்மன் வின்சென்ட் பீல்

மகிழ்ச்சிக் கணக்கு

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வந்தார்.

மனிதர்களிடம் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டவர் பீலே என்றழைக்கப்படும் நார்மன் வின்சென்ட் பீல்.

பீலே எழுதிய ‘நல்ல சிந்தனைகளின் ஆற்றல்’ (The Power of Positive Thinகிங்) என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது.

தன்னை சந்திக்க வந்தவரை பீலே வரவேற்று, “என்ன விசயம்? சொல்லுங்கள்” என்றார்.

 

நல்ல விச‌யங்கள்

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் அவர் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலதுபக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும், கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக்கொண்டு அந்தக் காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது, சொன்னது போலவே வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

 

சில கேள்விகள்

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் “எனது மகன் ஜெயிலுக்கே போகவில்லையே” என்று கூறினார்.

“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

 

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என்று பீலே கேட்டார்.

என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள்” என்றார்.

 

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்று பீலே கேட்டார்.

சாப்பிடாமல் நான் இருந்ததில்லை” என்று பதிலளித்தார்.

 

“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்றபோது என்ன செய்தீர்கள்?” என்று பீலே கேட்டார்.

என் வீடு பத்திரமாகத்தானே இருக்கிறது” என்று பதில் கூறினார்.

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப்புறம் நிரம்ப ஆரம்பித்திருந்தது.

ஆனால் இப்போது இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

 

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அதுபோல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்றும் யாரும் இல்லை.

 

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.

 

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையைத் தாமே துன்பமயமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை என்பது நம் தலைமேல் தொங்கும் கத்தியாக இருக்கக்கூடாது.

அது நம்மை முன்னோக்கி நகர்த்தும் முழு விசையாய் இருக்க வேண்டும்.

 

என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்.

 

மகிழ்ச்சியாய் எழுதத் தொடங்குங்கள்.

நமது காகிதத்தின் வலது பக்கம் மட்டுமே நிரம்பட்டும்!

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.