மகிழ்ச்சி தரும் ரகசிய வழி

மகிழ்ச்சி தரும் ரகசிய வழி  என்ற இக்கட்டுரை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய, எங்கே போகிறோம் என்னும் நூலில்,  உழைப்புச் சிந்தனைகள்  என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

உழைத்து வாழ்வது என்ற வாழ்க்கையின் கோட்பாடு, அனைவருக்கும் பொருந்தும். உழைப்பு என்பது அனைவருக்கும், மனிதகுலம் முழுவதுக்கும் உரிய பொறுப்பு.

மனிதகுலத்தில் யாராவது சிலர் உழைக்காமல் வாழ்ந்தால், அவர்களுடைய உழைப்பின் பங்கை, மற்றவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்று இந்தப் போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது.

 

உழைக்காதவர்களும் அல்லது அரைகுறையாக உழைப்பவர்களும், அல்லது உழைப்பது போலப் பாவனை செய்பவர்களும், இன்று சமுதாயத்தில் பல்கிப் பெருகி வருகின்றனர். இஃது ஒரு சாபக்கேடு.

இந்தத் தவறான நடைமுறை பெரும்பாலும் படித்தவர்களிடையிலும், அதிகார வர்க்கத்தினரிடையிலும் பரவி வருகிறது.

நம்முடைய நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குரிய கையிருப்பு இருக்கிறது என்று, உணவு அமைச்சகம் கூறுகிறது.

ஆனால், பணப் பற்றாக்குறை இருக்கிறது. கடன் வாங்க வேண்டியிருக்கிறது.

இது ஏன்?

உழுவோர் உலகம், தமது உழைப்பை முறையாகச் செய்து, நாட்டைப் பாதுகாத்து வருகிறது.

மற்றத் துறைகளில் போதிய உழைப்புக் கிடைக்கவில்லை என்பது, தானே உய்த்துணரக்கூடிய கருத்து.

நாம் ஒவ்வொருவரும், மற்றவர்களின் உழைப்பில், எண்ணற்ற உயிர்த் தொகுதிகளின் உழைப்பில் வாழ்கிறோம்.

 

நாம், நமது ஒருநாள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று கணக்கிட்டால்,

நாம் இந்த உலகத்தில் மற்றவர்கள் அல்லது மற்றவை உழைப்பிலிருந்து, நமது வாழ்க்கைக்கும் நுகர்வுக்கும் எவ்வளவு எடுத்துக் கொள்கிறோமோ,

அவ்வளவுக்காவது நாம் திருப்பித் தரும் வகையில் உழைக்கின்றோமா?

பலர் வாழ்க்கையில் இல்லை என்பதே விடையாக இருக்கிறது.

அப்படியானால், உழைக்காது வாழ்பவர்கள், பிறர் பங்கைத் திருடுகிறார்கள்; அல்லது பிறருக்கு சுமையாக இருக்கிறார்கள்.

இவர்கள் நிலத்திற்கும் பாரம்! இவர்களை வையகம் சுமப்பதும் வம்பு. அதாவது பயனற்றவர்கள்!

 

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிடத், தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான், சமூகத்திற்குப் பயன்படுவான்.  சமூகத்தில் ஒரு நிலையான இடத்தை முன்னேறிப் பெறுவான். இதுவே வாழும் நியதி.

ஆழ்கடலின் மேலே புல் பூண்டுகள் மிதக்கும், செத்தைகள் மிதக்கும். ஆனால் முத்து ஆழத்தில்தான் கிடக்கும்.

முத்தை விரும்புவோர், ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கித்தான், முத்தை எடுக்கவேண்டும். அதுபோல, வாழ்க்கையில் அரும்பயனையும் வெற்றியையும் விரும்புவோர் உழைத்தல் வேண்டும்.

 

உடம்பு உழைப்பினாலானது. உழைப்பதற்கே உரியது.

இரும்பு பயன்படுத்தப் பயன்படுத்த உறுதிப்படும்; நீண்ட நாட்களுக்கும் பயன்படும்.

உழைப்பில் பயன்படுத்தப்படாத இரும்பு, துருப்பிடித்து அழியும். விலை மதிப்பையும் இழக்கும். இரும்பு துருப்பிடித்து அழிவதைவிட, உழைப்பில் பயன்படுவதன் மூலம் தேய்வதே மேல்.

உடம்பும் அப்படியே!

 

மனிதராய்ப் பிறந்தோர் எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சி! மகிழ்ச்சியை எளிதாக அடைவதற்குரிய ஒரே வழி- மிகவும் இரகசியமான வழி – கடுமையாக உழைத்தலே ஆகும்.

அந்த மகிழ்ச்சியும் ஓரொருகால் உழைத்தலினால் கிடைக்காது; இடையீடின்றித் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

மகிழ்ச்சி தரும் ரகசிய வழி கடுமையான உழைப்பே ஆகும் என்பதை உணர்ந்து, அனைவரும் செயல்பட வேண்டும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.