மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள்.

 

முன்னொரு காலத்தில் காக்கை கனி, வேப்பமரத்துக்கு அடியில் பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தது.

பருப்பு வடைகளைப் பார்த்ததும், அதற்கு அவற்றை உண்ண வேண்டும் என்ற ஆசை உண்டானது.

உடனே பாட்டியிடம் சென்றது.

‘பாட்டி எனக்கு வடை கொடுங்கள்.’ என்றது.

பாட்டியும் இரண்டு பருப்பு வடைகளை காக்கை கனியிடம் தந்தார்.

வடைகளை தின்று கொண்டே,

‘என்ன பாட்டி, வடையெல்லாம் ஒரே எண்ணெய்யா இருக்கு?

வடைக்கு உப்பும் சற்று தூக்கலாக இருக்கிறது.’ என்றது.

‘ஓசி வடைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு நக்கல் வேற பேசுற நீ?’ என்று பாட்டி கேட்டார்.

‘நான், இன்றைக்கு காசு கொண்டு வரவில்லை. நாளைக்கு வரும்போது கட்டாயம் காசு கொண்டு வந்து தந்து விடுகிறேன்.’ என்றது காக்கை கனி.

‘ம்…ம்… நாளைக்கு பார்ப்போம் அதை’ என்றார் பாட்டி சற்று எரிச்சலாக.

காக்கை கனி வருத்தத்துடன் அவ்விடத்திலிருந்து நகர்ந்து சென்றது.

 

மறுநாள் தனது தந்தையிடமிருந்து, முதல்நாள் வாங்கிய வடைக்கும், அன்றைக்கு வாங்க வேண்டிய வடைகளுக்கும் சேர்த்து காசு வாங்கிக் கொண்டு பாட்டியிடம் வந்தது.

பாட்டியிடம் காசுகளைக் கொடுத்து பழைய பாக்கியை அடைத்துவிட்டு, மீதமுள்ள காசுக்கு ஐந்து வடைகளை வாங்கிக் கொண்டு கிளம்பியது.

வீட்டிற்கு செல்லும் வழியில் குட்டி முயல் முத்துவைப் பார்த்தது. அதற்கு ஒரு வடையைக் கொடுத்தது. வடையைப் பெற்ற முயல் முத்து காக்கை கனிக்கு முத்தம் கொடுத்தது.

முயல் முத்துவிடம் விடை பெற்று செல்லும் வழியில் வண்ணக்கிளி வனிதாவைச் சந்தித்தது.

வண்ணக்கிளிக்கு ஒரு வடையைக் கொடுத்துவிட்டு போகும்போது புறாக்குஞ்சு புஷ்பாவை சந்தித்தது.

அதற்கும் ஒருவடையைக் கொடுத்ததும் அது சந்தோசத்தில் வாயைப் பிளந்தது. அதனைப் பார்த்த காக்கை கனி புறா புஷ்பாவின் இறகை மெல்லிதாக வருடிவிட்டு விடை பெற்றது.

காக்கை கனி வீட்டிற்கு அருகில் வரும்போது அணில் அய்யாச்சாமியை பார்த்ததும் ‘தாத்தா, இந்தாங்க இந்த வடையை சாப்பிட்டுவிட்டு தெம்பா வேலை செய்யுங்க’ என்று கூறி அணிலுக்கும் ஒருவடையைக் கொடுத்தது.

அணில் அய்யாசாமி வடையைப் பெற்றுக் கொண்டு புன்னகைத்தது. தன்னிடம் இருந்த மீதமுள்ள ஒரு வடையை சாப்பிடுவதற்காக தன்னுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்தது.

 

அப்போது அங்கே நரி நஞ்சப்பன் வந்தது. ‘ஏய், காக்கை கனி, நீ இன்னிக்கு அழகா இருக்க, நல்லா பாட்டுப் பாடுவ தான’ என்றது.

காக்கை கனி ‘உனக்கு இந்த வடைதான வேணும். அதுக்காக பொய் சொல்ல வேண்டாம். இந்தா வைத்துக் கொள்’ என்று கூறி தன்னிடமிருந்த ஒரே வடையைக் கொடுத்துவிட்டு ‘கா…கா…’ என்று சந்தோசமாகக் கரைந்தது.

“குழந்தைகளே, பிறரை சந்தோசப்படுத்தி, அதனைப் பார்த்து நாம் சந்தோசப்படுவதையே மகிழ்வித்து மகிழ் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆதலால் எல்லோரையும் மகிழ்ச்சிபடுத்தி நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.” என்றார் ஆசிரியர்.

வ.முனீஸ்வரன்

 

2 Replies to “மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.