‘மக்கள் தொடர்பு’ என்கிற சொல்லாட்சி ‘Public Relations’ ஆங்கில சொல்லுக்கு இணையான சொல்லாக புழக்கத்தில் இருந்து வருகிறது. ‘மக்களுடன் தொடர்பு’ என்று அப்படியே பொருள் கொள்வது சரியே. ஆனாலும் அதுவே முழுமையான பொருள் ஆகாது.
நீங்கள் சமுதாயத்தில், வர்த்தகத்தில், தொழில் இடத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் நபர்களுடன் பழகும் விதம் மற்றும் அணுகுமுறை ஆகியவையே ‘மக்கள் தொடர்பு’ என்னும் ‘Public Relations’ பண்பு ஆகும்.
மிகப் பெரிய மனிதர்களில் சிலர், லிப்ட் இயக்குபவர், சாதாரண ஊழியர்கள், கீழ்நிலை பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி சொல்வார்கள். இது காரியம் சாதிக்கும் உத்திகளில் ஒன்றாக நமக்குத் தோன்றலாம்.
காரியம் ஆக வேண்டிய நேரத்தில் ஒரு விதமாகவும் மற்ற சமயங்களில் அலட்சியமாகவும் சிலருடைய போக்கு இருக்கும். அது ‘Public Relations’ பண்பு ஆகாது.
நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும், சிக்கலில் இருந்தாலும் மலர்ந்த முகத்துடன் எதிர் வருபவரை எதிர் கொண்டால் அதுதான் ‘Public Relations’ பண்பு.
புதிய இடங்களில் கூட, மொழி புரியாதவர்கள் இடையே சிலர் தங்களுக்குத் தேவையான தகவல் பெறுவதற்கு / வழிமுறை அறிந்து கொள்ள இந்த ‘Public Relations’ பண்பு உறுதுணை புரிகிறது.
உங்களுக்குள் உள்ள கூச்சத்தை உடைத்துக் கொண்டால் இந்த பண்பை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். அதற்காக, ‘Loose talk’ என்கிற வகையில் தொடர்பில்லாத, எதிராளி சங்கோஜப்படுகிற வகையில் பேச்சைத் தொடங்குவதற்கோ வளர்ப்பதற்கோ பேசி விடக் கூடாது.
இன்றைய காலகட்டத்தில், ஒருவருடைய தனிநபர் பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டு துளைப்பது அநாகரிகம்.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே விதமாக அமைந்து விடுவதில்லை. சாதி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து உங்களுக்கு பலரின் தொடர்பு (Contacts ) என்னும் சொத்து கிடைக்க ‘Public Relations’ பண்பு நலன் மிகவும் இன்றியமையாதது.
அடுத்தவருக்கு ஆயிரம் பணிகள் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு நேரத்தின் அருமை உணர்ந்து பேசுவதுதான் உங்களுக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.
நீங்கள் நல்ல Public Relations person என்பதை உங்கள் நேர நிர்வாக குணம் சுட்டிக் காட்டும். இதனை அந்தக் காலத்தில் திருவள்ளுவர், ‘சொலல் வலன், சோர்விலன்’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார். நமது முன்னோர் கூறிய இங்கிதம் என்கிற சொல்லாட்சியும் ‘Public Relations person’ பண்பின் ஒரு கூறு எனலாம்.
வெளிப்படும் சூழல்கள்
ஆங்கிலத்தில் over the phone, in writing, across the table என்று முன்பெல்லாம் குறிப்பிடுவார்கள். இன்று டிஜிட்டல் யுகம். ஆதலால், சமூக ஊடகங்கள், மின் அஞ்சல் வாயிலாக தகவல்களை அனுப்பும்போது தெளிவுடனும் இரத்தினச் சுருக்கமாகவும் செய்தி பகிரந்து கொள்ளும் முறையில் உங்கள் ‘Public Relations person’ பண்பைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் அணுகுமுறைகளைப் பொறுத்தே உங்கள் தொடர்புகள் அமையும். அதுவே உங்கள் சுயதொழில், வர்த்தகம் மற்றும் உத்யோக வாழ்வில் வெற்றிகளை நோக்கி பயணிக்க உதவும் .
மக்கள் தொடர்பு துறை
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அரசுத்துறை நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் மக்கள் தொடர்பு இயக்குநர், மக்கள் தொடர்பு அதிகாரி என்றெல்லாம் இருப்பார்கள்.
தனியாக மக்கள் தொடர்புத் துறையும் இருக்கும். ஊடகங்கள், விளம்பர ஏஜன்சிகள், உடன் பணிகளுக்காக தொடர்பு கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இவர்கள் பொறுப்பு.
தங்கள் நிறுவனம் பற்றிய தவறான தகவல், எதிரான தகவல் வந்தால் அது குறித்த மறுப்புரைகளை வெளியிடச் செய்வதும் அவர்கள் பொறுப்பு.
மக்கள் தொடர்பு நிறுவனம்
விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் தயாரிப்பு, சேவையைக் கொண்டு செல்ல விளம்பர ஏஜன்சிகளை வர்த்தகர்கள் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தொண்ணூறுகளில் மக்கள் தொடர்பு நிறுவனங்கள் (Public Relations Agencies) தோன்றின.
இவை ஊடகங்களில் செய்திகள் வடிவில் தயாரிப்புகள் பற்றிய விவரத்தைக் கொண்டு சென்றன. ஊடகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தித் தருபவர்களாகவும் இவர்கள் இருந்த நிலையில், Event Management-க்கு என்று தனியாக ஏஜன்சிகள், 2000-க்கு பிறகு தோன்றி வெற்றிக்கொடி நாட்டின.
ஊடகங்கள், மனிதனின் கைக்குள்ளேயே அடங்கி விட்ட இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் ‘Public Relations’ ஏஜன்சிகள் தனியாக செயல்பட்டு வருகின்றன.
இங்கிதம் பழகு என்று நம் முன்னோர் சொன்னது தனித் துறையாகத் திகழ்கிறது. அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பண்பாகவும் இருக்கிறது – Public Relations பண்பு .
மக்கள் தொடர்பைக் கற்போம்!
மகத்தான வாழ்வைப் பெறுவோம்!
(தேவை கருதி ஆங்கிலச் சொற்கள் கையாளப்பட்டன)
எஸ்.மதுரகவி
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com