கடலை எடுப்பதற்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டிருந்தாள் தனம்.
‘கடலை போட்டிருக்கும் பிஞ்சைக் காட்டுக்கு இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போகணும்.
காட்டுக்குப் போற வழியில அம்மையப்புரத்தில நாலு ஆளகள மாடசாமி கூட்டிட்டு வந்தா பரவாயில்ல.
இப்ப நம்மளோட வர்ற மூணு ஆளுகளையும் சேர்த்து மொத்தம் ஏழு பேரு ஆயிருவாக. நட்ட பாதி இடத்து கடலைய இன்னைக்கு புடங்கிடலாம்.’ என்று எண்ணியபடி அவள் நடந்தாள்.
“என்ன தனம், பலத்த யோசனை?” என்று கேட்டாள் கடலை எடுக்கக் கூடவந்த மல்லி.
“ஒன்னும் இல்லக்கா, நம்ம ஊர்ல இன்னைக்கு கடல எடுக்க உங்களையும் சேர்த்து மூணு பேருதான் கிடைச்சாக. தண்ணி பாய்ச்சும் மாடசாமிகிட்ட அம்மையப்புரத்துல இருந்து நாலு பேர கூட்டிட்டு வரச் சொல்லிருக்கேன்.” என்றாள் தனம்.
“சரி, அதுக்கு எதுக்கு அம்புட்டு யோசனை?” என்றாள் மல்லி.
“இல்லக்கா, கடல காட்ல பாதிக்கு இன்னிக்கு தண்ணி பாய்ச்ச மாடசாமிகிட்ட சொல்லியாச்சு. தண்ணி பாச்சி இருந்தாதன கடலச் செடி வேரு அறுபடாம முழுசா வந்து கடல கைசேரும்.
இல்லனா தப்புக்கடலை அதிகமாகி அதவேற எடுக்க ஆளத் தனியா விடணும். இப்ப கடல எடுக்கவே ஆளு கிடைக்க மாட்டேங்குது. மூனு நாள்ல தப்பு கடல எடுக்கிற வேலையையும் முடிக்கணும். அதான் யோசனை” என்றாள் தனம்.
தனத்தின் பிஞ்சைக்காடு அவள் வசிக்கும் சோலையூரிலிருந்து கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மாங்குடிக்கு அருகே இருந்தது.
சோலையூரிலிருந்து மாங்குடிக்கு காலை 10 மணிக்கும் மாலை மூன்று மணிக்கும் மட்டுமே மினி பஸ் இயங்கி வந்தது.
தனம் சோலையூரிலிருந்து கடலை எடுக்க மூன்று ஆட்களைக் கூட்டிக் கொண்டு காலை ஆறு மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.
அம்மையப்புரம் சோலையூரிலிருந்து மாங்குடி செல்லும் வழியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. கடலை பிஞ்சை காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சும் மாடசாமி அம்மையப்புரத்தைச் சேர்ந்தவன்.
அம்மையப்புர கிராம மக்களின் முக்கிய தொழில் ஆடு, மாடு வளர்ப்பு. ஆடுகளையும் மாடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதையே அவ்வூர் மக்கள் விரும்பிச் செய்வர்.
பிஞ்சை வேலைக்கு வருவதை விரும்ப மாட்டர். இருந்தாலும் மாடசாமி அம்மையப்புரத்திலிருந்து நான்கு ஆட்களை கடலை எடுக்க அழைத்து வருவதாக தனத்திற்கு வாக்குக் கொடுத்திருந்தான்.
அம்மையப்புர மக்களின் வழக்கம் தெரிந்ததாலேயே ‘கடலை எடுக்க ஆள் வருவார்களா?’ என்ற கேள்விக்குறியுடன் தனம் நடந்து கொண்டிருந்தாள்.
அடுத்த கால்மணி நேரத்தில் தனம் உடன்வரும் மூன்று நபர்களுடன் அம்மையப்புரத்தை நெருங்கினாள். ஊருக்கு வெளியில் இருந்த ஆலமரத்தில் மாடசாமியுடன் சேர்த்து ஐந்து பேர் தனத்தின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டாள்.
‘நாலு பேரத்தன கூட்டிட்டு வரச் சொன்னோம். அஞ்சு பேரு இருக்காக’ எண்ணியபடி ஆலமரத்தை நெருங்கினாள்.
“அம்மா, மங்கம்மாள் பாட்டியும் கூடவர்றேன்னு சொல்லுஞ்சு. பாட்டி சூப்பரா தப்பு கடல எடுக்கும்” என்றான் மாடசாமி.
மங்கம்மாள் பாட்டியும் சின்ன களைவெட்டியுடன் மாடசாமி சொல்வதை ஆமோதிப்பது போல தனத்தைப் பார்த்து வெற்றிலைக் கரையைக் கொண்ட பற்கள் வெளியே தெரிய சிரித்தாள்.
மங்கம்மாள் பாட்டி கோடாரி கொண்டை போட்டு பின்னங்கொசுவம் வைத்த பழுப்புநிறப் புடவையில் வாயில் வெற்றிலையைக் குதப்பி இருந்தாள்.
“சரி மாடசாமி, தப்பு கடலயும் இன்னிக்கே எடுக்க ஆரம்பிச்சிறது நல்லது தான். மங்கம்மாள் பாட்டிய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததில்லேயே. இவங்க இந்த ஊரா?” என்றாள் தனம்.
“இந்த ஊருக்காரகதான். வெளியூரில போய் இருபது வருஷசமா தங்கிட்டாக. இங்க வந்து மூணு மாசம் ஆகுது.” என்றான் மாடசாமி.
“சரி, வாங்க போவோம்” என்று கூறி தனம் முன்னேற மற்றவர்கள் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.
கடலைக் காட்டிற்குப் போகும் வழியில் மங்கம்மாள் பாட்டி பேசிக் கொண்டே வந்தாள். அவளின் சிரிப்பு கலந்த வெகுளியான பேச்சு அவர்களுக்கு நடை அலுப்பைப் போக்கியது.
கடலை காட்டிற்கு எல்லோரும் ஏழு மணிக்கு வந்தடைந்தார்கள். தனம் கடலைப் பிஞ்சையைச் சுற்றிப் பார்த்தாள். கடலைப் பிஞ்சையை பாதியாகப் பிரித்து மேற்குப் பகுதியில் தண்ணீரை பாய்ச்சியிருந்தான் மாடசாமி.
“சரி, இன்னைக்கு பிஞ்சையின் மேற்குப் பகுதி கடலையைப் பிடுக்கிடுவோம். சாப்பிட்டு வேலைய ஆரம்பிப்போம்.” என்றாள் தனம்.
எல்லோரும் கிணற்றடிக்கு வந்தார்கள். கிணற்றுக்கு அருகே வலப்புறத்தில் பிஞ்சையின் ஒரு குண்டில் வெங்காயமும் இடப்புறத்தில் மற்றொரு குண்டில் மிளகாயும் நடப்பட்டிருந்தன.
குண்டு குண்டாக பச்சைநிறத்தில் மிளகாய்கள் செடியில் கொத்தாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. வெங்காயம் பூத்திருந்தது.
வெங்காயப்பூவின் வாசம் மூக்கைத் துளைத்தெடுத்தது. ஆதலால் கிணற்றுக்கு வலப்புறத்தில் இருந்த வரப்பில் அமர்ந்தனர். எல்லோரும் உண்பதற்காக அவரவர் உணவுக் கலனைப் பிரித்தனர்.
“மாடசாமி, செம்புல கொஞ்சம் தண்ணியக் கொடேன்” என்றாள் மங்கம்மாள் பாட்டி.
“இரு, எடுத்திட்டு வாரேன்” என்றபடி நகர்ந்தான் மாடசாமி.
“யம்மா, கம்மங்கஞ்சி குடிக்க ஒருநாலு மிளகாய பிடுங்கட்டுமா?” என்று தனத்தை கெஞ்சும் பாவனையில் பார்த்தாள் மங்கம்மாள் பாட்டி.
“ம்..சரி, பிடுங்கிக்கோங்க” என்றபடி தலையசைத்தாள் தனம்.
“போய், வாயக் கொப்புளிச்சிட்டு மிளகாயப் புடுங்கிட்டு வாரேன்” என்றபடி கிளம்பினாள் பாட்டி.
அடுத்த அரைநிமிடத்தில் ஏழெட்டு குண்டு மிளகாய்களைப் பறித்துக் கொண்டு வந்தாள்.
மாடசாமியும் செம்பில் கிணத்து தொட்டித் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்டு, தான் கொண்டு வந்திருந்த தூக்குவாளியின் மூடியைப் பிரித்தாள். கம்பஞ்சோற்றில் பாதியை எடுத்து மூடியில் வைத்தாள்.
“யாருக்காவது கம்பஞ்சோறு வேணுமா?” என்று கேட்டாள் பாட்டி.
“இல்ல நீங்க குடிங்க. நாங்களும் பழைய சோறும், கஞ்சியும் வைச்சிருக்கோம்.” என்றாள் மல்லி.
“யாத்தா, நான் வச்ச கம்பஞ்சோற எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க” என்றபடி மூடியில் இருந்த கம்பஞ்சோற்றை எல்லோரிடமும் நீட்டினாள்.
எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் கம்பஞ்சோற்றை எடுத்துக் கொள்ள மூடி காலியானது. தனத்திற்கு கம்பக்கஞ்சியின் வாசனை பசியை அதிகரிக்கச் செய்தது. வாயில் அதனைப் போட்டதும் தேவாமிர்தமாக இருந்தது.
தூக்குவாளியினுள் மீதமிருந்த கம்பஞ்சசோற்றில் சொம்புத் தண்ணீரை ஊற்றிக் கரைத்தாள் மங்கம்மாள் பாட்டி.
இடுப்பில் சேலைக்குள் பொட்டலமாக சொருகி வைத்திருந்த உப்பை எடுத்தாள்.
ஒரு மிளகாயை எடுத்து அடிப்புறத்தைக் கடித்தாள். முகத்தில் மிளகாய் காரத்திற்கான எவ்வித சலனமும் தெரியவில்லை. பின்னர் கடித்த பகுதியை உப்பில் தோய்த்தாள்; மீண்டும் கடித்தாள்; உப்பில் தோய்த்தாள் கடித்தாள். இவ்வாறாக ஒருமிளகாயை அப்படியே கடித்து சாப்பிட்டு விட்டாள்.
பின்னர் தூக்குவாளியில் இருந்த கஞ்சியில் ஒருவாய் பருகினாள். அடுத்த மிளகாயை எடுத்து முன்னர் செய்தபடியே உப்பில் தோய்த்து கடித்தாள். மீண்டும் ஒருவாய் கஞ்சியைப் பருகினாள்.
இவ்வாறாக தூக்குவாளியில் இருந்த கரைத்த கம்மங்கஞ்சியை முழுவதையும் குடித்து முடித்தாள். மிளகாயும் உப்பும் காலியானது.
மங்கம்மாள் பாட்டியின் வெகுளித்தனமும் பகிர்ந்துண்ணும் குணமும் மிளகாயை கேட்டு பறித்த அவளின் நேர்மையும் தனத்தினை வெகுவாகக் கவர்ந்தன.
( பாட்டி கதை தொடரும்)
அருமை