மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் தனிப்பட்ட வடிவம், சுவை மற்றும் மணத்தினை உடையது. மேலும் இது வெப்ப மண்டலத்தில் நன்கு செழித்து வளரும். ஆதலால் இப்பழம் வெப்பமண்டல பழங்களின் ராணி எனவும், கடவுளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இப்பழம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழம் இனிப்புச் சுவையுடன் தனிப்பட்ட மணத்தினை உடையது.

இப்பழம் வெளிப்புறத்தில் அடர்ந்த சிவப்பு நிறத்தில் சற்று கடினமான தோல் பகுதியினையும் உள்ளே பனிப் போன்ற வெள்ளை நிறத்தில் ஆரஞ்சினைப் போன்ற மென்மையான சாறுகள் நிறைந்த சுளைகளையும் கொண்டுள்ளது.

இப்பழச்சுளையினுள் வெள்ளை நிற விதைகள் காணப்படுகின்றன. இப்பழம் உருண்டையாக பார்ப்பதற்கு சிறிய ஆப்பிள் வடிவில் உள்ளது.

இப்பழத்தின் வெளிப்புறத்தில் மேற்பகுதியானது பச்சை நிற சிப்பிகளால் ஆன தொப்பியினையும், சிறிய காம்பினையும் கொண்டுள்ளது.

மங்குஸ்தான் வெப்ப மண்டலத்தில் செழித்து வளரும் மர வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இப்பழ மரமானது 6 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையது.

இம்மரமானது செதில் செதிலான பட்டைகளையும், அடர் பச்சை நிறத்தில் நீள் வட்ட வடிவ தோல் போன்ற இலைகளையும் கொண்டுள்ளது.

மங்குஸ்தான் மரம்
மங்குஸ்தான் மரம்

 

இத்தாவரம் செழித்து வளர நல்ல வெப்பமும், மழையும் தேவை. மேலும் இது அதிக குளிரான பகுதியிலும், வறட்சியான பகுதியிலும் வளராது.

இம்மரம் பயிர் செய்து 10 வருடங்களில் பலன் அளிக்கத் தொடங்கும்.

இத்தாவரத்தின் தாயகம் தெற்காசியப் பகுதி எனக் கருதப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, இந்தியா, இலங்கை, வியட்நாம் போன்ற இடங்களில் பல வருடங்களக இம்மரம் காணப்படுகிறது.

இந்தியாவில் இப்பழம் ஏப்ரல் முதல் ஜீன் வரை கிடைக்கிறது. இலங்கையில் இப்பழம் மே முதல் ஜீலை வரை கிடைக்கிறது.

 

மங்குஸ்தானில் உள்ள சத்துக்கள்

இப்பழத்தில் விட்டமின் சி, விட்டமின் ஏ, தயாமின்(விட்டமின் பி1), ரிபோஃப்ளோவின் (விட்டமின் பி2), நியாஸின்(விட்டமின் பி3), பான்டோதெனிக் அமிலம் (விட்டமின் பி5), பைரிடாக்ஸின் (விட்டமின் பி6), விட்டமின் பி12 போன்றவைகளும், கால்சியம், தாமிர சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சிறிதளவு சோடியம் ஆகிய தாது உப்புக்களும், கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், ஃபோலேட்டுகள், நார்சத்து, நீர்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

 

மங்குஸ்தானின் மருத்துவப் பண்புகள்

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெற

இப்பழத்தில் காணப்படும் ஃபாலிபீனால்களான ஆல்பா சாந்தோன்ஸ், காமா சாந்தோன்ஸ் காணப்படுகின்றன. இவை உடலுக்கு அழற்சி எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, புற்று நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்குகின்றன.

உடலில் புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடைசெய்து உடலினைப் பாதுகாக்கின்றன. புற்றுநோய்கான மருந்துகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

 

அழற்சி எதிர்ப்பு சக்தி பெற

இப்பழமானது தெற்காசிய பகுதிகளில் அழற்சி எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வு முடிவுகளும் இப்பழம் அழற்சி எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருக்கின்றன என உறுதி செய்கின்றன.

அழற்சிக்கு காரணமான ஹிஸ்டமின், புரோஸ்டோகிலான்டின் ஆகியவற்றை இப்பழம் உடலில் ஏற்படுவதைத் தடைசெய்கிறது.

 

சருமப் பாதுகாப்பு

இப்பழம் சருமத்திற்கு பாதுகாப்பினை வழங்குகிறது. இப்பழத்தில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா எதிர்ப்பு சக்தி போன்றவை சருமத்தில் அழற்சி, சரும முதிர்ச்சி, சரும பாக்டீரியா, பூஞ்சை தொற்று ஆகியவற்றை தடை செய்கிறது. மேலும் தோல் புற்றுநோய் ஏற்படாமல் இப்பழம் பாதுகாக்கிறது.

 

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

இப்பழத்தில் காணப்படும் நியூட்ரியன்கள், தாதுஉப்புகள், விட்டமின்கள், சாந்தோன்ஸ் ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கக் கூடிய நோய் தொற்றுகளிலிருந்தும் இப்பழம் பாதுகாப்பு அளிக்கிறது.

 

இரத்த அழுத்தத்தைச் சீர்செய்ய

இப்பழத்தில் மக்னீசியம் அதிகளவு காணப்படுகின்றது. மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீர்செய்து சீரான இதய துடிப்பிற்கு வழிவகுக்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு இரத்த அழுத்தத்தை சீர்செய்து இதயத்தை சீராக இயங்கச் செய்யலாம்.

 

சீரான செரிமானத்திற்கு

இப்பழமானது அதிக அளவு நார்ச்சத்தினைப் பெற்றுள்ளது. நார்ச்சத்தானது சீரான செரிமானம் நடைபெறச் செய்கிறது. எனவே செரிமானத்தில் பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தினை உண்டு சீரான செரிமானத்தைப் பெறலாம்.

 

ஆரோக்கியமான உடல்எடை பராமரிப்பிற்கு

இப்பழமானது குறைந்த எரிசக்தியையும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினையும் பெற்றுள்ளது. மேலும் இது அதிக நார்சத்தினையும், விட்டமின்களையும் கொண்டுள்ளது. எனவே இப்பழத்தினை உண்டு ஆரோக்கியமான உடல் எடையைப் பெறலாம்.

 

மங்குஸ்தானை வாங்கும் முறை

இப்பழத்தினை வாங்கும்போது புதிதாகவும், காயங்கள் ஏதும் இல்லாமலும், நிறமானது ஒரே மாதிரியாகவும் இருக்குமாறு வாங்க வேண்டும்.

இப்பழமானது விரைவில் உலர்ந்து விடுவதால் இதனை வாங்கி ஓரிரு நாளில் பயன்படுத்தவும் அல்லது குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இப்பழத்தினை உண்ணும் போது வெளிப்புறத் தோலினை பழத்தின் குறுக்குவாக்கில் கத்தியால் கீறி மேற்புறப் பாதியை கையால் பிய்த்து எடுத்து உள்ளிருக்கும் சுளைகளை உண்ணலாம்.

இப்பழம் அப்படியே உண்ணப்படுகிறது. மேலும் இது பழச்சாறாகவும், இனிப்புகள் செய்யவும், ஜாம்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
சிறப்புகள் வாய்ந்த மங்குஸ்தானை அதனுடைய சீசன் பருவத்தில் வாங்கி பயன்படுத்தி உடல்நலம் பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

One Reply to “மங்குஸ்தான் பழம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.