மசாலா இட்லி செய்வது எப்படி?

மசாலா இட்லி எல்லோருக்கும் விருப்பமான உணவாகும். இட்லியாக சாப்பிட்டுவிட்டு போரடிக்கும் குழந்தைகளுக்கு மசாலா இட்லி செய்து கொடுத்துப் பாருங்கள். அசந்து போவீர்கள்.  குழந்தைகள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் என்று கேட்டு வாங்கி உண்பார்கள்.

வீட்டில் செய்த இட்லி மீதமிருக்கும் போது இதனை எப்படி காலி பண்ணுவது என்ற கவலை இனி வேண்டாம். மசாலா இட்லி செய்து ஜமாய்த்து விடுங்கள்.

இதனைச் செய்வதற்கு சாதாரண இட்லியை சிறுதுண்டுகளாக்கியோ, சின்ன‌ இட்லி செய்தோ பயன்படுத்தலாம்.

இனி எளிய முறையில் சுவையான மசாலா இட்லி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

இட்லி 5 எண்ணம்

பெரிய வெங்காயம் 1 எண்ணம் (பெரியது)

தக்காளி 2 எண்ணம் (நடுத்தரமானது)

இஞ்சி சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு 3 பற்கள் (பெரியது)

கொத்த மல்லி இலை ஒரு கொத்து

புதினா இலை 2 குச்சிகள்

மசாலா பொடி 2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி ‍ 1/2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் 4 ஸ்பூன்

கடுகு ‍ 1/4 டீ ஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 2 கீற்று

செய்முறை

இட்லிகளை சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

துண்டுகளாக்கிய இட்லிகள்

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசதுரத் துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை கழுவி மிக்ஸியில் போட்டு கூழாக்கிக் கொள்ளவும்.

இஞ்சியையும், வெள்ளைப் பூண்டினையும் தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும். பின்னர் அதில் பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வதக்கவும்.

வெங்காயத்தை வதக்கும் போது

அதனுடன் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது, பொடியாக்கிய கொத்தமல்லி, புதினா இலையில் 2/3 பங்கினைச் சேர்த்து வதக்கவும்.

கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் மசாலாப் பொடி, கரம் மசாலாப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

மசாலாப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்ததும்

அதனுடன் அரைத்த தக்காளி விழுதினைச் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

தக்காளி விழுதினைச் சேர்த்ததும்

பின்னர் அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை சிறிதளவு வற்றியதும் அதனுடன் நறுக்கிய இட்லித் துண்டுகளைச் சேர்த்து மெதுவாக எல்லாப் பக்கங்களிலும் மசாலா படும்படி கிளறவும்.

இட்லிகளைச் சேர்க்கும் பதத்தில் மசாலா
இட்லிகளைச் சேர்த்ததும்
இறக்கும் பதத்தில்

கலவை கெட்டியானதும் அடுப்பினை அணைத்து விட்டு மேலே மீதமுள்ள கொத்தமல்லி, புதினா இலைகளைத் தூவவும்.

சுவையான மசாலா இட்லி தயார்.

இதனுடன் வெங்காய தயிர் பச்சடி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வதக்கும் போது முந்திரி பருப்பினைச் சேர்த்து இதனைத் தயார் செய்யலாம்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி இதனைத் தயார் செய்யலாம்.

ஆறிய இட்லிகளை துண்டாக்கி சேர்க்கவும். அப்போதுதான் இட்லிகள் மசாலாவுடன் சேர்ந்து கூழாகாமல் எடுத்து உண்ண சுவையாக இருக்கும்.

இட்லிகள் சூடாக இருந்தால் ஆற வைத்து பின்னர் உபயோகிக்கவும்.

விருப்பமுள்ளவர்கள் தக்காளிக்குப் பதிலாக சாட் மசாலா சேர்த்து இதனைத் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.