மசாலா சீயம் செய்வது எப்படி?

மசாலா சீயம் மாலை வேளையில் டீ, காப்பியுடன் சேர்த்து உண்ணத் தகுந்த சிற்றுண்டி ஆகும்.

இதனை இடைவேளை உணவாகவும் உண்ணலாம். இது வெளிப்புறம் மொறு மொறுப்பாகவும் உட்புறம் மிருதுவாகவும் இருக்கும்.  சுவையான மசாலா சீயம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 250 கிராம்

உளுந்தம் பருப்பு – 200 கிராம்

சின்ன வெங்காயம் – 75 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம்

தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)

எண்ணெய் (பொரித்து எடுக்க) – தேவையான அளவு

கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்

மசாலா சீயம் செய்முறை

முதலில் பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

 

ஊற வைத்த பச்சரிசி, உளுந்து
ஊற வைத்த பச்சரிசி, உளுந்து

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பச்சை மிளகாயை கழுவி சிறு துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஊற வைத்த பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பை ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

மாவினைத் தோண்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு தேவையான கல் உப்பினைச் சேர்த்து அரைத்துத் தோண்டவும்.

 

ஆட்டிய மாவு
ஆட்டிய மாவு

 

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, அலசிய கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

தாளித்த கலவையை வடைமாவில் கொட்டவும்.

பின் அதனுடன் துருவிய தேங்காய், சதுரமாக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலக்கவும்.

 

தாளித்த கலவை, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை வடைமாவில் சேர்க்கும்போது.
தாளித்த கலவை, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை வடைமாவில் சேர்க்கும்போது.

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்கும் எண்ணெயை ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் வடை மாவினை போண்டா போல் உருட்டி எண்ணெயில் போடவும்.

 

வடைகளை எண்ணையில் போடும்போது
வடைகளை எண்ணையில் போடும்போது

 

ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.

 

வடைகள் வேகும்போது
வடைகள் வேகும்போது

 

சுவையான மசாலா சீயம்
சுவையான மசாலா சீயம்

 

சுவையான மசாலா சீயம் தயார். இதனை தேங்காய் சட்னி, மல்லிச் சட்டியுடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

வடை மாவினை அரைக்கும் போது தண்ணீரினைக் கவனமாகச் சேர்த்து அரைக்கவும். வடை மாவு கெட்டியாக இருப்பது அவசியம்.

வடைகளை போடும்போது அவ்வப்போது தண்ணீரைத் தொட்டுக் கொண்டு வடைகளைத் தட்டினால் கையில் வடைமாவு ஒட்டாது.

விருப்பமுள்ளவர்கள் முழு மிளகினை வடை மாவில் சேர்த்து சீயம் தயார் செய்யலாம்.

 ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.