மசாலா டீ அருமையான சூடான பானம் ஆகும். இதனை வடநாட்டில் மசாலா சாய் என்றும் அழைப்பர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மசாலா டீ சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் அருமையாக இருந்தது.
மசாலா டீயில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியவை. வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ இதனைச் செய்து அருந்தலாம்.
இதற்குத் தேவையான மசாலாப் பொருட்களை, அவ்வப்போது பொடி செய்து பானம் தயார் செய்தால் இதனுடைய சுவை அதிகமாக இருக்கும்.
இனி சுவையான மசாலா டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் 1 டம்ளர்
டீ தூள் 2 டீஸ்பூன்
வெள்ளைச் சர்க்கரை 2 ஸ்பூன்
ஏலக்காய் 3 எண்ணம்
கிராம்பு 2 எண்ணம்
பட்டை சுண்டு விரல் அளவு
மிளகு 2 எண்ணம்
இஞ்சி சுண்டு விரல் அளவு
தண்ணீர் முக்கால் டம்ளர் அளவு
மசாலா டீ செய்யும் முறை
ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு ஆகியவற்றை இடி கல்லிலோ, மிக்ஸியிலோ போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இடி கல்லில் சேர்த்து இடிக்கும் போது ஏலக்காயின் விதைகள் நன்கு நொறுங்கும்படி இடித்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி இடிகல்லில் போட்டு நைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முக்கால் டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் டீத்தூளைச் சேர்க்கவும்.
டீத்தூள் நன்குக் கொதித்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு ஆகியவற்றை இடித்த பொடியைச் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
நறுமணப் பொருட்களைச் சேர்க்கும் முன்பு மற்றொரு அடுப்பில் பாலைக் காய்ச்ச வைக்கவும். பால் பொங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
டீத்தூள் நறுமணக் கலவை பாதியாக வற்றியதும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்கவும்.
அரை நிமிடம் கழித்து காய்ச்சிய பாலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
சர்க்கரையின் அளவினைச் சரி பார்க்கவும். இச்சமயத்தில் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டியில் வடி கட்டவும்.
டீ-யினை ஆற்றி பரிமாறவும்.
சுவையான மசாலா டீ தயார்.
குறிப்பு
டீ தயார் செய்ய புதிய பாலை பயன்படுத்தினால் சுவை மிகும்.
டீத் தூள் நன்றாகக் கொதித்த பின்னர் மசாலாப் பொருட்களைச் சேர்த்தால் டீயின் சுவை நன்றாக இருக்கும்.
வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, மண்டை வெல்லம் சேர்த்து டீ தயார் செய்யலாம்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப டீ டிகாசன் தயார் செய்ய, தண்ணீர் மற்றும் டீ-க்கான சர்க்கரை அளவு ஆகியவற்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
மறுமொழி இடவும்