நாங்கள் எங்கள் வீட்டில் பெரும்பாலும் எல்லா குழம்புக்கும் வீட்டில் தயார் செய்த மசாலா பொடி பயன்படுத்துகிறோம். இது சுவை தருவதுடன் தரமானதாகவும் இருக்கும்.
எங்கள் அம்மா எனக்கு சொல்லித் தந்த இந்த மசாலா பொடி தயாரிக்கும் முறை பற்றி விளக்கமாக கூறுகிறேன்.
தேவையான பொருட்கள்
கொத்த மல்லி விதை – ½ படி
சீரகம் – 150 கிராம்
விரலி மஞ்சள் – 150 கிராம்
மிளகாய் வற்றல் – 300 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
பாசிப் பருப்பு – 75 கிராம்
உளுந்தம் பருப்பு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 100 கிராம்
கட்டிப் பெருங்காயம் – 20 கிராம்
கறிவேப்பிலை – 20 கொத்து
செய்முறை
மிளகாய் வற்றல், விரலி மஞ்சள் ஆகியவற்றை ஒரு நாள் முழுவதும் நன்கு வெயிலில் காய வைக்கவும்.


அடிகனமான பாத்திரத்தில் கொத்த மல்லி விதையைப் போட்டு வறுக்கவும். கொத்த மல்லி நிறம் மாறியவுடன் வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி விடவும்.

பின் சீரகத்தை அடிகனமான பாத்திரத்தில் போட்டு பொரியும் வரை வறுத்து மல்லியுடன் கொட்டிவிடவும்.

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்நிறமாகும் வரை வறுத்து எடுத்து மல்லிக் கலவையில் கொட்டிவிடவும்.

துவரம் பருப்பு வறுக்கும் போது


பின் மிளகினை வெறும் வாணலியில் போட்டு பொரியும் வரை வறுத்து கலவையில் கொட்டவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு பொன்நிறமாகும் வரை வறுத்து கலவையில் கொட்டவும்.

புழுங்கல் அரிசியையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து கலவையில் கொட்டவும்.

கட்டிப் பெருங்காயத்தையும் வெறும் வாணலியில் போட்டு பொரியும்வரை வறுத்து கலவையில் கொட்டவும்.

கறிவேப்பிலையை உருவி வெறும் வாணலியில் போட்டு மொறு மொறுவென்று வரும்வரை வறுத்து கலவையில் கொட்டவும்.

மிளகாய் வற்றல் காய்ந்தவுடன் காம்பினை நீக்கவும்.
மல்லி கலவை ஆறிய பின் கலவையுடன் காய்ந்த மிளகாய் வற்றல், விரலி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து மிசினில் கொடுத்து நைசாக அரைக்கவும்.

மசாலா பொடி தயார்.
இதனை நன்கு ஆறவிட்டு காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும்.
இந்த மசாலா பொடியை சாம்பார், புளிக்குழம்பு, ஆட்டுக் கறிக் குழம்பு , கோழி குழம்பு உள்ளிட்ட எல்லா குழம்பு வகைகளுக்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பு
மசாலாப் பொருட்களை வறுக்கும்போது அடுப்பின் தணலை சிம்மில் வைத்து வறுக்கவும். அப்பொழுதுதான் பொருட்கள் கருகிவிடாமல் இருக்கும்.
மசாலாப் பொருட்களை வறுக்கும்போது கருகி விடாமல் நன்கு ஒருசேர கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!