மசாலா பொரி செய்வது எப்படி?

மசாலா பொரி என்பது எல்லா வயதினராலும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சிற்றுண்டி வகை.

பொரியை சாதாரணமாக இனிப்புச் சுவையில் பொரி உருண்டையாகவோ அல்லது காரத்தில் மசாலா சேர்த்தோ தயார் செய்யலாம்.

சிறுகுழந்தைகளுக்கு வெறும் பொரியாகக் கொடுப்பது சிறந்தது.

கடைகளில் பாக்கட்டுகளில் விற்கும் மசாலா பொரியை வாங்கினால் எல்லோருக்கும் குறைந்த அளவே கொடுக்க முடியும்.

அதே நேரத்தில் வீட்டிலேயே தயார் செய்தால் அது ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் எல்லோருக்கும் நிறைந்த அளவு கொடுக்க முடியும்.

இனி வீட்டில் மசாலா பொரி தயார் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

மசாலா பொரி செய்ய தேவையான பொருட்கள்
மசாலா பொரி செய்ய தேவையான பொருட்கள்

 

அரிசி பொரி – ஒரு லிட்டர்

பொரிகடலை – ¼ லிட்டர்

வறுத்த கடலைப் பருப்பு – ¼ லிட்டர்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெள்ளை பூண்டு – 3 பல் (மீடியம் சைஸ்)

மிளகுத் தூள் – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

 

செய்முறை

வெள்ளை பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை கழுவி தண்ணீர் போக உலர விட்டு உருவிக் கொள்ளவும்.

கடலைப்பருப்பை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் அடிக்கனமான பாத்திரத்தில் பொரியை சிறிய அளவு போட்டு வறுக்கவும். பொரியானது பொறுபொறுப்பாக வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி வைக்கவும். இவ்வாறாக எல்லா பொரியையும் செய்யவும்.

பொரியை வறுக்கும்போது
பொரியை வறுக்கும்போது

 

பின் பொரிகடலையை தனியே லேசாக வறுக்கவும். பொரிகடலை பொறுபொறுப்பானவுடன் பொரியுடன் சேர்த்து கொட்டி விடவும்.

பொரிகடலையை வறுக்கும்போது
பொரிகடலையை வறுக்கும்போது

 

தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துள்ள வறுத்த கடலைப் பருப்பைப் போட்டு வறுத்து அதனையும் பொரிக் கலவையில் கொட்டி விடவும்.

கடலைப்பருப்பை வறுக்கும்போது
கடலைப்பருப்பை வறுக்கும்போது

 

கறிவேப்பிலையை வறுத்து அதனையும் பொரிக் கலவையில் கொட்டி விடவும்.

கறிவேப்பிலையை வறுக்கும்போது
கறிவேப்பிலையை வறுக்கும்போது

 

மேற்கண்ட பொருட்களை வறுக்கும் போது அடுப்பை சிம்மில் வைக்கவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நசுக்கிய வெள்ளைப் பூண்டு, மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

தாளிக்கும்போது
தாளிக்கும்போது

 

பின் அதில் வறுத்து வைத்துள்ள பொரிக் கலவையைப் போட்டு நன்கு கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து பொரிக் கலவையை இறக்கி விடவும்.

தாளிசத்துடன் பொரிக்கலவையைச் சேர்க்கும்போது
தாளிசத்துடன் பொரிக்கலவையைச் சேர்க்கும்போது

 

பின் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு சேரக் கலக்கவும். சுவையான மசாலாப் பொரி தயார்.

சுவையான மசாலா பொரி
சுவையான மசாலா பொரி

 

இதனை ஆறியவுடன் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகுத் தூளுக்குப் பதில் மிளகாய் தூள் சேர்க்கலாம்.

சிறுகுழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் மிளகாய் தூள் மற்றும் மிளகுத் தூளைத் தவிர்க்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

One Reply to “மசாலா பொரி செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.