மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்

“எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன். மனிதத் துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்து கொள்கிறேன். ஆறுதல் தருகிறேன். மோசமான செயல்களை அழித்து ஒழிக்கிறேன். என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே,” என்கிறார் இஸ்மத் சுக்தாய்.

இஸ்மத் சுக்தாய் அவர்கள் உருது மொழியில் எழுதிய சிறுகதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘மச்சம்’ எனும் சிறுகதையாகும். இக்கதையைத் தமிழில் ராகவன் தம்பி மொழிபெயர்த்துள்ளார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாக அது இருக்கின்றது.

இஸ்லாமியப் பெண்ணின் எழுத்துக்களில் இவ்வளவு தூரம் புரட்சியும், புதுமையும் வெளிப்படுத்தப் பட்டிருக்குமா? எனும் பெருங்கேள்வி நம்முன்னே இக்கதை படித்தவுடன் எழுகிறது.

மனம் சார்ந்த உள்வெளியில் நிகழும் அதிர்வுகளின் மையத்தை லாபகமாய் எழுத்துகளில் கொண்டு வரத் தெரிந்த மாயஜாலக்காரியாக இஸ்மத் சுக்தாய் விளங்குகிறார்.

அதுவும் பெண்ணின் மனதில் எழும் விருப்பு, வெறுப்பு, பாலியல் உணர்வுகள், பாசம், கோபம், இயலாமை போன்றவைகளை அப்படியே அச்சு அசலாய் உருவமைத்து எழுதுகிறார்.

அவர் எழுதிய சிறுகதைகளில், ‘முக்காடு, மச்சம், போர்வை‘ போன்ற கதைகள், பாலியல் சார்ந்த உணர்வுகளை, உச்சக்கட்ட நிலையில், மாய எதார்த்தவாதக் கதை சொல்லலில் வெளிப்படுத்தியிருக்கும் இம்முறை, யாரும் எழுதத் துணியாத ஒன்றை, எழுதியிருக்கும் துணிச்சலை, இஸ்மத்தின் வாழ்வியல் சூழல் அவருக்குத் தந்திருக்கிறது எனலாம்.

எந்த விதமான நீட்டலும், குறைத்தலுமின்றி, இயல்பு நிகழ்வை அறிய முடியாத சுற்று வட்டாரக் காட்சிகளோடு பதிவு செய்வது அசாத்தியமான எழுத்தாற்றல் தான்.

மச்சம் கதைக்கரு இதுதான்.

‘சௌத்ரி’ ஒரு புகழ்பெற்ற கைகோர்த்த ஓவியன். அவன் வரைந்தால் அது பரிசு பெறாமல் இதுவரை இருந்ததில்லை. அவன் வரைவதற்குப் பல நூறு பேர் மாடலாக வருவதற்குக் காத்துக் கிடந்தனர்.

ஆனால் வித்தியாசமாய் குடிசையில் வாழும் ராணி என்ற‌ ஏழைப் பெண்ணொருத்தியை கண்டு பிடித்து, அவளிடம் பேசி ஓவியத்திற்கு மாடலாக அமர வைக்கிறார்.

சௌத்ரி வரைய வரைய ஓரிரு நாளில், ஒரே இடத்தில் சிலை போல் அமர முடியவில்லை எனப் பதற்றம் கொண்டு தொல்லை தருகிறாள் ராணி. சௌத்ரியை வம்புக்கு இழுக்கிறாள். கடைசியாக அவள் பேச்சு காமம் குறித்த பேச்சாக மாறுகிறது.

“என் மார்பிலிருக்கும் மச்சத்தை ஏன் பார்த்துக் கொண்டே வரைகிறாய்?” என்கிறாள். இந்த மச்சத்தைப் பார்த்து மயங்கியவர்களின் கதைகளைக் கூறுகிறாள். இவை சௌத்ரியை என்னவோ செய்கிறது.

மனதை அடக்கிக் கொண்டு வரைய நினைத்தாலும், மனம் சுழன்று சுழன்று அவள் கூறிய கதைகளின் இடத்திற்குச் சென்று சென்று வருகிறது.

மனம் அலைபாய ஆரம்பித்து விட்டது. கலையின் ஆழத்தைத் தொட நினைத்த சௌத்ரி, இவளின் வார்த்தைகளுக்குள் சிக்கி, நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டவனைப் போல் சீரழிகின்றான்.

நிலையில்லாமல் மாறி மாறி அவள் மேல் அதீதமாய் மனத்தைச் செலுத்த ஆரம்பித்து விடுகிறான். மனைவி இல்லாத சௌத்ரிக்கு வயதாகியிருந்தாலும் அவளின் மேல், தான் ஆதிக்கம் செலுத்தி, தனக்கானவளாக மாற்றிக் கொண்டாலென்ன என்கிற உளவியல் பார்வையும் ஏற்படலாயிற்று.

இந்த இடத்தில் தான் சிறுகதை ஆசிரியர் இஸ்மத் புகுந்து விளையாடியிருக்கிறார். மாய எதார்த்தவாத மற்றும் மீ மெய்மையியல் பாணியில் காட்சிகள் விரிகின்றன.

சிறுகதை வாசகனைச் சமநிலத்திலிருந்து வான்வெளிக்கும், கடலுக்கும், தீயினுள்ளும், மழையினிலுள்ளும் மாறிமாறி நிறுத்திச் செல்வது எத்தகு ஆற்றல்? அதற்குக் கொஞ்சம் கட்டுப்படாத சொல்கட்டுமானங்களை எடுத்தாண்டிருக்கின்றார் இஸ்மத். அதற்கு உதாரணமாக கீழ்காணும் பத்திகளைக் கூறலாம்.

“அந்த மச்சம் திடீரெனக் கருங்கல்லாக மாறி அவருடைய நெற்றியைத் துளைத்தது. சண்டையில் தோல்வியைக் கண்ட நாயைப் போல மிகவும் வேகமாகத் தன் அறைக்குள் சென்று படுக்கையில் வீழ்ந்தார்.

அன்றைக்கே ரத்னாவை வெளிய துரத்தினார் சௌத்ரி. ரத்னா, தான் தன்னுடைய கோவணத்தை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்ததாக பிடிவாதத்துடன் மன்றாடிக் கொண்டிருந்தான். ஆனால் ஆவேசம் வந்தது போல சௌத்ரி உக்கிரமாக இருந்தார்.

இரவு முழுதும் அவர் அரக்கர்களின் படை ஒன்று தன்வசம் இருப்பது போன்ற பாவனையில் சமர் புரிந்து கொண்டிருந்தார்.

அவருடைய உடலின் வழியாக யாரோ துளையிடும் இயந்திரத்தை வைத்துத் துளைப்பது போலவும் இடையில் ஏதோ கருங்கல் ஒன்று தடுப்பதால் அந்த இயந்திரம் துளைக்க முடியாமல் தடைபட்டு நிற்பது போலவும் தோன்றியது.

அன்று பலவகையான வர்ணங்களும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. மஞ்சள் காவி நிறத்துடன் லேசாக நீலத்தைக் கலந்தார். அது கடலின் ஆழத்தில் கிடைக்கும் அடர்த்தியான நீலவர்ணத்தில் குழைந்து மிளிர்ந்தது.

கண்களுக்கான வர்ணத்துக்காக இளம்பச்சை மற்றும் கருப்பை – இல்லை, விழியோரத்தில் சாம்பல் நிறச் சாயலில் இளஞ்சிவப்பைச் சேர்த்தார்.

ஒருகணம் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். நீண்ட நேரமாக இதனை அவர் செய்யாமல் இருந்தார்.

ஒரு ஓவியர் தன்னுடைய முகத்தைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டுமா?

கண்ணாடி அந்த ஓவியனுக்கு எதைக் காட்டும்?

அவர் வரைந்த எண்ணற்ற ஓவியங்கள் அவருடைய முகத்தை மட்டுமல்லாது, ஆன்மாவின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடியாக இருந்தன.

வண்ணக் கலவைகளால் உருவாக்கப்பட்ட அவருடைய இதயமும் எண்ணங்களும் அவர் பார்வையில் படும் வகையில் எதிரும் புதிருமாக நின்று கொண்டிந்தன.

இருப்பினும் தன் முகத்தின் பிம்பத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டார். காலியாகிப் போன தகர டின்களில் ஒன்றைக் கையில் எடுத்து அதனை அடிப்புறமாகத் திருப்பிப் பார்த்தார்.

இரண்டு பாச்சைகள் அவருடைய மூக்கை உரசியபடி பறந்து போயின. புறக்கையால் டப்பாவில் படிந்திருந்த ஒட்டடையைத் துடைத்துவிட்டு டப்பாவின் பளபளப்பான மேற்பரப்பில் தன் முகத்தைப் பார்த்தார்.

முதலில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. என்னதான் நுணுக்கமாகக் கூர்ந்து பார்த்தாலும் அடர்த்தியான குச்சங்களாகப் படர்ந்திருக்கும் கடலின் ஆழத்தைப் பார்ப்பது போலத்தான் அவரால் உணர முடிந்தது.

அல்லது இமைகளில் ஏதேனும் பிரச்னையோ? காணும் அனைத்தும் கலங்கியும் நுரைத்தும் காணப்படுவது போல அவருக்குத் தோன்றியது.

வேடிக்கையாகத் தொங்கும் அவருடைய தாடியும் பசித்த கண்களும் அனலாக தகிப்பதைக் கண்டார்.

அவரா அது? டப்பாவை மீண்டும் தலைகீழாகத் திருப்பி மீண்டும் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார். அவருடைய தாடி இன்னும் தெளிவாகத் தெரிந்தது.

ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தபோது கறைபடிந்த அவருடைய மூக்கின் நுனியும் செம்பட்டையாகிப் போன ஒழுங்கற்ற மீசையும் தெரிந்தது. ஒரு கத்திரி இருந்திருந்தால் அந்த மீசையை ஒழுங்காகத் திருத்திக் கொண்டிருக்கலாம். பார்ப்பதற்கும் கொஞ்சம் மதிப்பாக இருந்திருக்கும்”

அவள் மார்புகளுக்கிடையிலுள்ள ‘மச்சம்’ தான் சௌத்ரியை உசுப்பேற்றி விடும் காரணியாகயிருக்கிறது. அந்த மச்சம் குறித்து அவள் பேசும் பொழுதெலாம், சௌத்ரி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றான்.

ஓவியம் வரைவதா?

இல்லை விட்டு விடுவதா?

பரிசு பெறவில்லையென்றாலும் விட்டு விடலாம் என்கிற நிலைக்கு வந்து விடுகின்றான்.

அந்த நிலையில் ‘மச்சம் துப்பாக்கியாக மாறி குண்டு மழை பொழிந்தது’ என்னும் கற்பனையை உள்ளீடாய் எழுதுகிறார் சிறுகதை ஆசிரியர்.

அந்த மச்சத்தின் வண்ணமே ஓவியன் மனம் முழுவதும் நிறைந்து, அவன் வரைகின்ற அனைத்து பின்னதான ஓவியங்களிலும் கருமையாக இருந்தன என்கிறார்.

குறிப்பாக, ஒருவரின் உள்ளத்தில் காமத்தீயை உண்டு செய்துவிட்டு, அவன் காமத்தீயில் கிடந்து உழல்வதைத் தூர நின்று ரசித்துப் பார்க்கும் மனோபாவம் உடையவளாக ராணி காணப்படுகின்றாள்.

தன் காமவிளையாட்டுக்களை சௌத்ரியிடம் கூறி தன்மீது அதீதமான காமஉணர்வுகள் உண்டாகும்படிச் செய்கிறாள். இதன் விளைவால், செளத்ரி பைத்தியநிலைக்குச் செல்கின்றான்.

சிறு சம்பவம் வாழ்வின் பாதைகளைப் புரட்டிப் போடுகின்றது. சிறு நப்பாசை ஊர்மக்கள் ஏளனமாய்ச் பேசும்படி அலராய் மாறுகின்றது. தூய்மையான கலை நெஞ்சத்தில், சிறு காமத்தீ விளைவித்த பெரும்பாடுகள் அதிக விலையைத் தந்தன.

சமநிலையில் மதிப்பீடுகள் இருக்கும் போது, ஒருவர் எதிர்பாராத நிலையில் தன் மதிப்பீட்டைக் குறைத்துக் கொண்டு, எதிராளியிடம் தஞ்சம் புகும் போது, எதிராளி மதிப்பீட்டைக் குறைத்துக் கொண்டவரிடம் தன் ஆளுமையைச் செலுத்தி ஆண்டு விட நினைப்பது உளவியல் அடிப்படையாகிறது.

தன் சுயமரியாதையில் பிறர் கைவைக்கும் பொழுது, அங்கு சுயாதீனம் எவ்வுயரத்திற்கும் சென்று தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் என்பது விதியாகிறது. அதனை இக்கதை ஆழமாக எடுத்துச் சொல்கிறது.

சௌத்ரியின் நிலையில் நின்று பார்த்தால் கதை ஒரு வகையாகவும், ராணியின் நிலையில் நின்று பார்த்தால் கதை வேறு ஒரு கோணத்தையும் தருகின்றது.

துணைக் கதாபாத்திரங்களாக வரும் ரத்னா, வெல்லசேவு தருபவனான சுன்னன் ஆகிய இருவரின் இடத்திலிருந்து கதையைப் பார்த்தால், முற்றிலும் வேறான கோணத்தில் கதை செல்வதை உணர முடியும்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தேவைகளும் காமத்தை அடிப்படையாகக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஆனால் அளவு கோல்கள் தான் அதிகம்வேறு வேறு.

ஒரு பெண் நினைத்தால், எத்தகு ஆடவரும் தன் நிலைமாறி அவள் விரிக்கும் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டு விடுகின்றனர் எனும் வீரவரலாறுகளில் இதுவுமொன்றாய் எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்ட விதம், எழுத்தாளரின் திறனை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

மனம் கண்டுபிடிக்கப்பட முடியாத பெரும் ஆழமுடைய சமுத்திரம். அதனூடாக நிகழும் உணர்வுகள் எழுத்திற்குள் கொண்டுவரப்பட முடியாதவையாகவும், சில நேரங்களில் அமைந்து விடுகின்றன.

சில எழுத்தாளர்கள் மட்டுமே மூழ்கிப் போய் அவ்வுணர்வுகளை அப்படியே தம் எழுத்துகளில் பதிவு செய்து விடுகின்றனர். அவர்களில் இஸ்மத் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றார்.

இயலாமையால் செளத்ரி துடிக்கும் காட்சியைக் கூறும்பொழுது, மரணத்துக்கு ஈடான விரைப்பு சௌத்ரியின் உடல் எங்கும் பரவியது.

ராணியின் உருவம் மறைவதைப் பார்த்துக் கொண்டே நின்ற அவர், தன் காலடியில் விழுந்திருந்த அந்த வெல்லச் சேவுத் துண்டை வெறியோடு பொடிப் பொடியாக நசுக்கினார்.’ என்று எழுதியிருப்பார்.

உலகப் பெண் எழுத்தாளர்களில் இவரைப் போல், இதுபோன்ற சிறுகதைகளை அக்காலத்தில் எழுதியவர்கள் மிகக் குறைவே. உருது இலக்கியத்தின் மாபெரும் கருத்துப் புரட்சியைச் செய்தவராக இஸ்மத் சுக்தாய் நமக்குப் புலப்படுகின்றார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது படைப்புக்களில் குறிப்பிட்டவைகள் தான் நூலாக்கம் ஆகியிருக்கின்றன. அவரின் முழுமையான படைப்பும் தமிழுக்குள் கொண்டு வர வேண்டியது, இக்கால மொழிபெயர்ப்பாளர்களின் முக்கியமான பணியாகும்.

உருது எழுத்தாளர்கள் கிருஷ்ணசந்தர், ராஜேந்திர சிங், மண்ட்டோ போல் இஸ்மத் சுக்தாய் புரட்சி எழுத்தாளராக இருந்தாலும், பெண் சார்ந்த பாலியல் உணர்வுகளை அப்படியே தம் படைப்புக்களில் கொண்டு வந்த சிறப்புக்குரியவர் எனும் பெருமையைப் பெறுகிறார்.

தமிழுலகம் இஸ்மத் சுக்தாயின் எழுத்துக்களை இன்னும் பெரிதாய் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் தமிழ் மக்களிடம். அப்போது தான் தமிழ்ப் படைப்பாளர்களின் போக்குகளில் சில மாற்றங்கள் நிகழும்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை ‍- 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

3 Replies to “மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்”

 1. இஸ்மத் சுக்தாய் எழுத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதலில் என்னுடைய பெரிய நன்றி.

  மச்சம் சிறுகதை எஸ்.ரா முதற்கொண்டு எல்லோரையும் பாடய்ப் படுத்துகிறது.

  இதைப்பாரு. இதோ, இங்கே… என் கழுத்துக்குக் கீழே இந்த மச்சத்தைப் பாரேன். இங்கே… கொஞ்சம் கீழே… இங்கே பாரு… கையில் இருந்த பூச்சாடியை தரையில் வைத்து விட்டு மார்பகங்களின் பிளவில் கண்களை சரித்தபடி சௌத்ரியை நோக்கிப் புன்னகைத்தாள்.

  “பார்த்தியா இதை? நீ அதைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கே இல்லையா சௌத்ரி… சீ…” என்று வெட்கப்படுகிறவள் போல பாவனை செய்தாள். “ஐயோ, எனக்குக் கூச்சமா இருக்கு…”

  இப்படித்தான் ராணிக்கும் சவுத்ரிக்கும் உரையாடல் தொடர்கிறது.

  பாலினம் என்றாலே அது ஒரு ஈர்ப்பு தான். எதிர் பாலினத்தை பார்க்கும் பொழுது மிகப்பெரிய ஈர்ப்பு இருக்க தான் செய்கிறது. சிக்மன்ட் பிராய்ட் இன்னும் அழகாக கூர்மையான வார்த்தைகள் சொல்லி விவரிப்பார்.

  சௌத்ரி ஒரு படைப்பாளி. ராணியை வைத்து ஓவியம் தீட்ட முயற்சிக்கிறார். ஆனால் ராணிக்கு ஏனோ சவுத்ரி மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பருவம் கொண்ட நங்கை அவள். ஆனால் வயது முதிர்ந்த கலைஞன் அவர். இருவருக்கும் ஏணி வைத்துக் கூட எட்ட முடியாத ஒரு தூரம். ஆனாலும் ராணி மீது உடல் ரீதியான வேட்கை வந்ததில்லை. ஆனால் அவளுக்கு பழைய காலங்களில் ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லும் பொழுது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  சவுத்ரி மீது, ராணிக்கு இருந்தது வெறும் உடல் வேட்கை மட்டுமல்ல. கடைசி வரைக்கும் அவளை தொடுவதற்கு கூட முயற்சிக்காத ஒரு கலைஞன். பின்னொரு நாளில் குழந்தையோடு வந்த ராணியை குழந்தையின் தகப்பன் சவுத்ரி என்று இந்த ஊர் நம்பி இருந்தது.

  ஆனால் அவளுக்கு மட்டும் தானே தெரியும் அந்த குழந்தையின் தகப்பன் யார் என்பது.

  இந்த ஒரு கதை மனதை ஏதோ தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. காதலை மிக சரியான அர்த்தத்தில் ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. இதைத்தான் வள்ளுவர் கூட மலரினும் மெல்லியது காதல் என்று சொல்லி இருக்கிறார்.

  இந்தக் கதை உலக இலக்கியங்களில் போற்றக்கூடிய ஓர் அற்புதமான கலை படைப்பு.

  இது போன்ற படைப்புகளை தேடி தேடி தன்னுடைய தேடலில் கண்டடைந்து நமக்கெல்லாம் விருந்து வைக்கும் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களை மனதார பாராட்ட வேண்டும்.

  இந்த குறைந்த நாட்களில் அவர் தேடிக் கண்டெடுத்த முத்துக்களைக் கோர்த்தாலே ஒரு மாலையாக கட்டிவிடலாம். அந்த அளவிற்கு தமிழ் சமூகத்திற்கும் தமிழுக்குமான ஒரு உறவை தன் எழுத்துக்களின் மூலமாக உறுதி செய்து கொண்டிருக்கிறார்.

  உள்ளபடியே இந்த மச்சம் என்னும் சிறுகதை என்னையும் ஒரு விமர்சனம் எழுத வேண்டும் ஆர்வத்தை தோண்டி இருக்கிறது.

  ஆனால் பேராசிரியர் எழுதியதற்கு பிறகு என்னுடைய எழுத்துக்கள் அத்தனை கூர்மை பெறுமா அல்லது வலிமையை அடையுமா என்ற செய்தி நான் அறியேன்.

  இறுதியாக பேராசிரியர் ஐயா சந்திரசேகர் அவர்களின் மொழியிலேயே முடிக்கலாம் என்று விரும்புகிறேன். அவர் பின்வருமாறு அந்த கதை குறித்து அழுத்தமாக பதிவு செய்கிறார்.

  சமநிலையில் மதிப்பீடுகள் இருக்கும் போது, ஒருவர் எதிர்பாராத நிலையில் தன் மதிப்பீட்டைக் குறைத்துக் கொண்டு, எதிராளியிடம் தஞ்சம் புகும் போது, எதிராளி மதிப்பீட்டைக் குறைத்துக் கொண்டவரிடம் தன் ஆளுமையைச் செலுத்தி ஆண்டு விட நினைப்பது உளவியல் அடிப்படையாகிறது.

  தன் சுயமரியாதையில் பிறர் கைவைக்கும் பொழுது, அங்கு சுயாதீனம் எவ்வுயரத்திற்கும் சென்று தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் என்பது விதியாகிறது. அதனை இக்கதை ஆழமாக எடுத்துச் சொல்கிறது.

  மகிழ்ச்சி அய்யா!

 2. இனிது வழியாக பாரதிசந்திரன் ஆற்றிவரும் இலக்கியப் பணிக்கென்றே விருது ஒன்றை அளித்து கௌரவப் படுத்துவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.