மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

வணக்கம்!

இதை என்னுடைய முதல் எழுத்து, முதல் பதிவு அல்லது முதல் கட்டுரை என‌ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் போல் இணைய உலா வரும்போது, தங்க‌ள் இனிது இணையத்தை பார்க்க இறைவன் என்னைப் பணித்தான்.

அதில் எப்படி எழுதுவது எதை எழுதுவது என்று எனக்காகவே முதலில் அந்த பக்கத்தை இறைவன் காண்பித்தான்.

என் முதல் எழுத்து வெளியிடுவதற்கு தகுதியுண்டு என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை கீரைகளின் ராஜா   மஞ்சள் கரிசலாங்கண்ணி.

நான் கிராமத்தில் என் தாயுடன் வயல் ஓரங்களிலும் ஏரிகளிலும் மற்றும் திறந்த வெளிகளிலும் சுற்றித் திரிந்தவன். அது வெறும் சுற்றல் அல்ல. மிகப் பெரிய கல்வி என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏன் தெரியுமா?

 

என் மகனுக்கு 18 வயது. அவன் வயதில் நான் கற்றிருந்த பொது அறிவு, முக்கியமாக மூலிகை பற்றிய அறிவு அவனுக்கு இல்லை.

என் தாய் எனக்கு அருகம்புல், ஆடாதோடை, கீழாநெல்லி, மஞ்ச‌ள் கரிசலான்கண்ணி,  குப்பைமேனி,  தும்பை,  கற்பூரவல்லி, பொன்னாங்கண்ணி,  முடக்கத்தான்,  பிரண்டை, மூக்கிரட்டை, தூதுவளை  இன்னும் இது போன்ற 40க்கும் மேலான கீரை மற்றும் மூலிகை பற்றி தெரிய வைத்தார்கள்.

அது வாழ்க்கையோடு கலந்த கல்வி.

கடையில் கீரை வாங்கிய‌தைவிட நானே பறித்து கொடுத்து என் அம்மா சமைத்தது அதிகம்.

அது ஒரு கனாக்காலம் என்று பெரு மூச்சு விடுகின்ற காலத்தில் இப்பொழுது இருக்கிறோம்.  அந்த வாய்ப்பு இன்று என்  ம‌கனுக்கு இல்லை.

அதனாலென்ன இணையம் இருக்கிறதே!

என் மகனைப்போல் விருப்பம் இருந்தும் தெரிந்து கொள்ள முடியாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதை அறிய வைப்போமென்று இதை எழுதுகிறேன்.

 

ஏன் மஞ்சள் கரிசாலைக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறேன்.

நம் உடலின் மருத்துவர் கல்லீரல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த கல்லீர‌லுக்கே மருத்துவர் இந்த கரிசாலைகீரை. மற்ற கீரைகள் குறிப்பிட மருத்துவ குணம் கொண்டவை. இந்த கீரை கல்லீரல், கண் பார்வை, முடி வளர்ச்சி, பல் வியாதி, தோல் பளபளப்பு, அல்சைமர் என்று சொல்லக்கூடிய  மறதி குணப்படுத்துதல், ரத்த சோகை. வயிற்றுப்புண் இத்தனை நோய்க்கும் அருமருந்து.

இதன் சிறப்பை கூற வேண்டுமானால் ராஜ ராஜ சோழன் தன் ஆட்சியில் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரைக்கு வரி விதித்தாராம். அத்தகைய சிறப்பு பெற்றது இந்த கீரை.

 

இப்படி சிறப்பித்து பேசினாலும் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக இந்த அசல் கரிசலாங்கண்ணி கீரையை தேடிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு இது வரை கிடைத்ததெல்லாம் ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய ஒட்டு ரகம் தான். ஒரிஜினல் நாட்டு மஞ்சள் கரிசாலை இது வரை எனக்கு கிடைக்க வில்லை.

மற்ற இடத்தில் தேடுவதை விட இணயத்தில் தேடினால் எனக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

எனவே இதைப்படிக்கும் நண்பர்கள் யாராவது உதவ முன் வந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் doshari22@gmail.com

நன்றி

கே.ஹரிதாஸ்
சென்னை
78714 92338

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.