மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
மஞ்சள் ஒரு
மங்கலப் பொருள்
மசாலாப் பொருள்
மூலிகைப் பொருள்
அழகுசாதனப் பொருள்
இது நம்முடைய நாட்டில் பாராம்பரியமாக நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் காணப்படும் தனித்துவமான குர்க்குமின் என்னும் பைட்டோ வேதிப் பொருட்கள் இதற்கு தனிப்பட்ட மணம், சுவை மற்றும் நிறத்தினை அளிக்கின்றன.
இந்திய உணவுகளில் கட்டாயம் இடம் பெறும் மசாலாப் பொருள் மற்றும் நம் நாட்டில் தயார் செய்யப்படும் மாசாலாக்களில் முதன்மை இடம் பெறுவதால், மஞ்சள் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.
தங்க நிறத்தினைக் கொண்டுள்ளதாலும், மசலாப் பொருட்களில் தங்கத்திற்கு நிகரான மதிப்பினைக் கொண்டுள்ளதாலும், மஞ்சள் தங்க மசாலா என்று அழைக்கப்படுகிறது.
இதனுடைய நிறம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளதால் இது இந்திய குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது.
மஞ்சளினைப் பற்றிய வரலாறு
மஞ்சளின் தாயகம் இந்தியா ஆகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு பயிர் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
முதலில் இது சாயமேற்றியாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மருந்துப்பொருளாகவும், சமையல்பொருளாகவும், அழகுப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது.
கிமு 700-ல் இது இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பரவியது. மஞ்சளானது கிமு 800-ல் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் கிமு 1200-ல் மேற்கு ஆப்பிரிக்காவிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் உலகெங்கும் உள்ள வெப்பமண்டல இடங்களுக்குப் பரவியது. 13-ம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதனை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர்.
இன்றைக்கு இந்தியா உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 80 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
இந்தோனேசியா, சீனா, பிலிபைன்ஸ், தைவான், ஜமைக்கா, பாகிஸ்தான், மியான்மார், வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான், கொரியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் இது பயிர் செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிஸா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
மஞ்சளின் அமைப்பு மற்றும் வளரியல்பு
மஞ்சளானது 60 செமீ முதல் 90 செமீ உயரம் வரை வளரும் செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
மஞ்சள் என்பது நிலத்திற்கு அடியில் காணப்படும் தரைகீழ் தண்டு ஆகும். இது உண்ணும் உட்பொருளாகவும், வெளிப்புறம் பயன்படுத்தும் பொருளாகவும் உபயோகிக்கப்படுகிறது.
இஞ்சி மற்றும் ஏலக்காய் இதனுடைய உறவினர் ஆவர். இது ஜிஞ்சிபெரேசியேயி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் குர்குமா லாங்கா என்பதாகும்.
இது 75-115 செமீ நீளமும், 38-45 செமீ அகலமும் கொண்ட கொத்தான நீள்வட்ட இலைகளைக் கொண்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் மஞ்சளானது தரைக்குக் கீழ் காணப்படும் தண்டுப் பகுதியாகும்.
மஞ்சளானது செழித்து வளர 20 டிகிரி முதல் 30 டிகிரி வரை வெப்பமும், தண்ணீரும் மிகவும் அவசியம் ஆகும்.
மஞ்சளின் வெளிப்புறமானது அடர்ந்த பழுப்புநிறத் தோலையும், உட்புறமானது ஆழமான ஆரஞ்சு மஞ்சள்நிறத்தில் சதைப்பற்று மிகுந்தும் காணப்படுகிறது.
இதனுடைய இலைகள் மற்றும் கிழங்குகள் தனிப்பட்ட வாசனை மற்றும் சுவையினைக் கொண்டுள்ளன. இது கசப்பான மற்றும் காரமான சுவையைக் கொண்டிருக்கிறது.
மஞ்சள் தாவரமானது விதைகளை உருவாக்குவதில்லை. நிலத்தடித் தண்டின் மூலமாக இவை உருவாக்கப்படுகின்றன.
மஞ்சளில் உள்ள வேதிப்பொருட்கள்
மஞ்சளில் உள்ள குர்க்குமினாய்டுகள் என்னும் பாலிபீனால் அதற்கு தனிப்பட்ட மகத்துவத்தை அளிக்கிறது. இதுவே அதனுடைய நிறம் மற்றும் மணத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
குர்க்குமினாய்டுகள் என்பது டிமீதாக்கி குர்க்குமின், பிஸ்டிமீதாக்ஸி குர்க்குமின், குர்க்குமின் ஆகியவை இணைந்த கூட்டுவேதிப் பொருளாகும்.
டூமெரோன், ஆர்டெமெரோன் மற்றும் சைங்கிபெரான் உள்ளிட்ட எண்ணெய்களும் மஞ்சளில் காணப்படுகின்றன.
மஞ்சளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
மஞ்சளில் விட்டமின் சி, பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவும், விட்டமின் இ,கே, பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள் ஆகியவையும் காணப்படுகின்றன.
இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, மாங்கனீசு, செம்புச்சத்து ஆகியவை அதிகளவும், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவையும் காணப்படுகின்றன.
மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன.
மஞ்சளின் மருத்துவப்பண்புகள்
மஞ்சளானது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
சருமப் பாதுகாப்பிற்கு
இது சருமத்தில் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் எண்ணெய் சுரப்பினையும் தடுத்து பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மஞ்சளினைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள வடுக்களை மறையச் செய்வதோடு சருமத்தினை பளபளக்கச் செய்கிறது.
இதனுடைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உண்டாகும் வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தவும், சரும எரிச்சலை ஆற்றவும் உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் ஆன்டிஆக்ஸிஜென்டாகச் செயல்பட்டு ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுப்பதோடு சுருக்கங்கள் உண்டாவதைத் தடைசெய்கிறது.
கல்லீரலின் நலனிற்கு
மஞ்சளில் உள்ள கரிமவேதிப் பொருட்கள் நிணநீர் சுரப்புகளை ஊக்குவித்து கல்லீரலை சரிவர செயல்படச் செய்து நச்சுக்களை உடலிலிருந்து நீக்குகிறது.
மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கல்லீரல் அழற்சி மற்றும் கொழுப்புக் கல்லீரல் நோய் உள்ளிட்ட கல்லீரல் வியாதிகளுக்கு தீர்வாக அமைகின்றன.
மூளையின் செயல்திறனை அதிகரிக்க
மஞ்சளானது மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், ஒருமுகப்படுத்தும் திறனை ஊக்குவிக்கவும் செய்கிறது. மஞ்சளானது மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கும் பொருளாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது நீண்டகால ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளால் நரம்புகளில் உண்டாகும் அடைப்பினைத் தடைசெய்கிறது. மஞ்சள் மனஅழுத்தத்தையும் நீக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே மஞ்சளைப் பயன்படுத்தி மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம்.
இரத்த உறைதலைத் தடுக்க
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த உறைதலைத் தடைசெய்கிறது. இரத்தத்தில் உள்ள ப்ளேட்டுலெட்டுகள் ஒன்று சேர்ந்து உறைவதை இப்பொருள் தடைசெய்கிறது. எனவே மஞ்சளை உண்டு இரத்த உறைதலைத் தடுக்கலாம்.
இதயநலத்தை மேம்படுத்த
மஞ்சளில் உள்ள விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) மற்றும் குர்குமின் இதயநலத்தை மேம்படுத்துகிறது. பைரிடாக்ஸின் இதயநலத்திற்கு ஊறுவிளைவிக்கும் செல்சுவர்கள் அழியும்போது உண்டாகும் ஹோமோசைட்டோசைன்களின் செயல்பாடுகளைத் தடுக்கிறது.
ஹோமோசைட்டோசைன்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும், இரத்த குழாய்களில் அடைப்புகளை உண்டாக்கவும் செய்கின்றன.
குர்குமின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடைசெய்கிறது. இதய நோய்கள் பலவற்றிற்கு இது தீர்வினைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க
மஞ்சளில் உள்ள விட்டமின் சி, குர்குமின் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன. எனவே மஞ்சளை அடிக்கடி உணவில் சேர்த்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கலாம்.
செரிமானம் நன்கு நடைபெற
மஞ்சளில் உள்ள குர்குமின் பித்தநீர்ச் சுரப்பினைத் தூண்டி உணவு நன்கு செரிக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது செரிமானம் நன்கு நடைபெற உதவுவதோடு செரிமானப் பாதையில் ஏற்படும் வீக்கத்தையும் சரிசெய்கிறது. அல்சர், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளுக்கும் இது தீர்வாகிறது.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் மஞ்சள் எப்படிப் பயன்படுகின்றது என அறிய கீழ்க்காணும் இணைப்புகளைப் படியுங்கள்.
கஸ்தூரி மஞ்சள் – மருத்துவ பயன்கள்
மஞ்சளினைப் பற்றிய எச்சரிக்கை
மஞ்சளானது இரத்தத்தின் அடர்த்தியை மெல்லிதாக்கும் தன்மை உடையது. எனவே இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது.
மஞ்சளினை பயன்படுத்தும் முறை
மஞ்சளானது அப்படியோவோ, பொடி செய்யப்பட்டோ, எண்ணையாக்கப்பட்டோ பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் கிழங்கினை பறித்து நீரில் அவித்து சூரிய ஒளியில் காய வைக்கப்பட்டு பின் பொடியாக்கப்படுகிறது.
மஞ்சளானது எல்லா மசாலாப் பொருட்களிலும், சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் தங்க மசாலா என்பதனை உணர்ந்திருப்பீர்கள். அதனை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.