மடச்சியல்ல நாம்!

மார்ச் 8 மகளிர்தினம்
இந்நாளில்…
வழக்கம் போல்
காலை முதல் இரவு வரை
தொலைக்காட்சி சேனல்களில்
அரசியல் தலைவர்களும்
அரிதாரம் பூசுவோரும்
பொய்முகம் காட்டி
புன்னகைதனைக் கூட்டி
கரங்கூப்பி மகளிருக்கு
நல்வாழ்த்துச் சொல்லிடுவர்!

பாடாவதிப் படங்கள்
பட்டிமன்றங்கள்
அரைகுறை ஆடையில்
நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள்
நுனிநாக்கு ஆங்கிலம்
அலட்டல் பேச்சுக்கள்
உருட்டும் வார்த்தைகள்
விசிலடிச்சான் குஞ்சுகளின்
ஆரவாரங்கள்
ஆட்டம்பாட்டங்கள்
கேலிக்கூத்துக்கள்
கலாச்சாரச் சீரழிவுகள்…

மேல்தட்டு வர்க்கத்து
நாரீமணிகள் பலர்கூடி
பளபளக்கும் ஆடைகள்
ஜொலிக்கும் அணிகலன்கள்
அம்சமாய் அணிந்துகொண்டு
கால் மேல் கால் போட்டு
இருக்கையில் அமர்ந்தபடி
கொஞ்சமாய்த் தமிழ் கலந்து
ஆங்கிலம் அதிகம் பேசி
அவையோரை மகிழ்வித்து
மகளிர் தினமதை
மகிழ்ந்து கொண்டாடிட…

குப்பியும் சுப்பியும்
மகளிர்தான் என்றாலும்
அவர்கள் அறிவாரோ
மகளிர் தினம் எதுவென்று?

எத்தனை கொடுமையிங்கே
ஏட்டில் வடிக்க முடியாது
பெண்படும் துயர்தனையே
சொல்லி முடிக்க முடியாது

தினம்தினம் நடக்குதிங்கே
வன்புணர்ச்சி பெண்கள் மேல்
தளிர் மொட்டுக்களும்
கசங்கும் அவலங்கள்
முதுமைப் பெண்களையும்
விடுவதில்லை கயவர்கள்…
காணச் சகிக்கவில்லை
நெஞ்சம் பொறுக்கவில்லை
பெண்களை வெட்டிச் சாய்ப்பதும்
கொளுத்தித் தீர்ப்பதும்
வாடிக்கையானது இங்கே
கேட்க நாதி எங்கே?அரசும்
வேடிக்கைப் பார்க்குது இங்கே!

பெண்களுக்கு சுதந்திரம்
பேச்சளவில் மட்டும்தான்..
வாக்குரிமை தந்து விட்டால்
வந்திடுமோ சம உரிமை?

பெண் விரும்பும் எதனையும்
ஆணாதிக்க சமூகத்தில்
தானாய் முன்வந்து
செய்து முடிக்க முடியாது

தொண்ணூறு விழுக்காடு
மாபாபம் செய்தவரே
மீதி விழுக்காடு
ஆசிர்வதிக்கபட்டவர்
வாழட்டும் அவர்கள்
வாழ்த்திடுவோம் மனதார!

அநுதினமும் கொடுமைகள்…
ஆற்றொணாத் துயரங்கள்…
வற்றாத கண்ணீரோடு
வாழும் பெண்கள் கோடிகோடி…

வருடந்தோறும் ஓர் நாள்
மாடுகளுக்கு மாட்டுப்பொங்கல்
ஆயுதங்களுக்கு ஆயுதபூஜை
மாடு அஃறிணை
ஆயுதமோ ஜடப்பொருள்
மகளிர் தினம் மகளிருக்கு
எனில் மகளிர் அஃறிணையா?
ஆணுக்கான ஜடப் பொருளா?

வருடம் ஓர்நாள் மகளிர் தினம்
யாருக்கு வேண்டுமிந்த
வேடிக்கை வினோதம்?

வாருங்கள் தோழியரே
நம் உரிமை காப்போம்!
சம உரிமை மீட்டெடுப்போம்!
அதன்பின்னர் நமக்கெல்லாம்
தினம்தினம் மகளிர்தினமே!

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்