மட்டன் உப்புக் கறி என்பது மசாலா சேர்க்காமல், ஆட்டின் கறியால் செய்யக்கூடிய அருமையான தொட்டுக்கறி ஆகும். ஆட்டுக்கறி, உப்பு மற்றும் மிளகாய் வற்றல் மட்டுமே கொண்டு இந்த உணவு வகை செய்யப்படுகிறது.
எங்கள் ஊரில் மசாலா சேர்த்து செய்யப்படும் கறி வகையை காட்டிலும் உப்புக் கறி செய்வதே நடைமுறையில் அதிகமாகும்.
இனி உப்புக் கறி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளாட்டுக் கறி – 200 கிராம்

கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 50 கிராம்
கடுகு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
மிளகாய் வற்றல் – 4 எண்ணம் (நடுத்தரமான அளவுடையது)
மட்டன் உப்புக் கறி செய்முறை
வெள்ளாட்டுக் கறியை சிறுசிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
பின்னர் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.


பின்னர் அதனுடன் அலசிய வெள்ளாட்டுக் கறி, உப்பு, சிறிதளவு நீர் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி அடுப்பினை சிம்மில் வைத்து மூடி போடவும்.

அவ்வப்போது மூடியை நீக்கிவிட்டு கிளறி விடவும்.
முதலில் வெள்ளாட்டுக் கறியானது தண்ணீர் விட்டு வேகத் தொடங்கும்.

தண்ணீர் முழுவதும் வற்றி கறியிலிருந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான உப்புக் கறி தயார்.

இதனை சூடான ரசம் சாதத்துடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
உப்புக் கறியை உண்பதற்கு முன்னர் லேசாக சூடாக்கி உண்ண சுவை மிகும்.
குறிப்பு
உப்புக் கறிக்கு கெட்டிக் கறியை தேர்வு செய்யவும்.
வெள்ளாட்டின் முன்தொடைக் கறியை இதற்கு தேர்வு செய்யவும்.
கறியுடன் சிறிதளவு கொழுப்பையும் சேர்த்து சமைத்தால் நன்றாக இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் மிளகுப் பொடி சேர்த்து உப்புக் கறி தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!