மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) என்பது ஆட்டு எலும்பிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான சூப் வகை உணவாகும். அசைவ பிரியர்களின் பட்டியலில் இந்த சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

மட்டன் சூப் மழைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் ஏற்றது. இந்த சூப்பினை அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் ஹீமோகுளோபினும் அதிகரிக்கும்.

இனி சுவையான மட்டன் சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்பு – ¼ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 25 கிராம்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகுத்தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 6 ஸ்பூன்

தண்ணீர் – ஒரு லிட்டர்

 

செய்முறை

முதலில் ஆட்டு எலும்பினை வெட்டி நன்கு அலசிக் கொள்ளவும்.

ஆட்டின் குறுக்கெலும்பு (முதுகெலும்பு)
ஆட்டின் குறுக்கெலும்பு (முதுகெலும்பு)

 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக அரிந்து கொள்ளவும்.

மிளகினை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.

வெட்டிய எலும்பு, வெங்காயம் மற்றும் சீரகம்
வெட்டிய எலும்பு, வெங்காயம் மற்றும் சீரகம்

 

குக்கரில் ஆட்டு எலும்பு, தண்ணீர், சீரகம், நேராக அரிந்த சின்ன வெங்காயம், நல்ல எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து மூடி விசில் போடவும்.

அடுப்பில் வைக்கும் முன்பு
அடுப்பில் வைக்கும் முன்பு

 

ஒரு விசில் வந்தவுடன் அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும். 30 நிமிடங்கள் சிம்மில் இருக்கவும்.

30 நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரினைத் திறந்து கிண்டி விடவும்.

சுவையான மட்டன் சூப் தயார்.

பரிமாறும் போது தேவையான உப்பு மற்றும் தேவையான மிளகுத்தூளை சேர்க்கவும்.

சுவையான மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்)
சுவையான மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்)

 

மட்டன் சூப்பில் உள்ள‌ எலும்பினை நீக்கி விட்டால் மட்டன் கிளியர் சூப் தயார்.

 

குறிப்பு

மட்டன் சூப்பிற்கு ஆட்டின் குறுக்கெலும்பு (முதுகெலும்பு), கழுத்தெலும்பு ஆகியவற்றை வாங்கவும்.

இவை சதை கொஞ்சம் கொண்டும் மென்மையாகவும், எலும்பு மஞ்சை அதிகமாகக் கொண்டும் இருக்கும். இதனால் இவற்றைப் பயன்படுத்தி சூப் தயார் செய்யும்போது சூப் மிகவும் சுவையாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் சூப்பினை பரிமாறும்போது தேவையான நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் பட்டை, சோம்பு ஆகியவற்றைத் தாளித்து அதில் தயார் செய்த சூப்பினை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.