மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி நிறைய பேருக்குப் பிடித்த உணவு ஆகும். அதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்பு பிரியாணியின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.

பிரியாணி என்ற உணவு வகையை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை மொகலாயர்களைச் சாரும். படையெடுப்பின் போது படை வீரர்களுக்கு சாதம், குழம்பு, பொரியல் என்று தனித்தனியே தயார் செய்து உணவு அளிப்பது சவாலாக இருந்தது.

அப்போதுதான் அரிசி, மசால், கறி வகைகளைச் சேர்த்து பிரியாணி தயார் செய்வது கண்டறியப்பட்டது. ஒரே உணவு வகை என்பதால் தயார் செய்வதும், எடுத்து செல்வதற்கும் மற்றும் பரிமாறுவதற்கும் எளிதாக இருந்தது.

பிரியாணியின் சுவை மிகுந்திருந்ததால் அன்றைய போர் நாட்களில் எல்லோராலும் விரும்பப்பட்டு, இன்றும் பெரும்பான்மையோர் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நாளில் அநேக விருந்துகளில் பிரியாணி இடம் பெறுகிறது.

இப்படிப்பட்ட பிரியாணியின் ஒரு வகையான மட்டன் பிரியாணியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையாக தயார் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

மட்டன் – ½ கிலோ

சீரக சம்பா அரிசி – ½ கிலோ

பெரிய வெங்காயம் – 2

தேங்காய் – 1

நெய் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

எலுமிச்சை – ½ மூடி

 

தாளிக்க

பட்டை – சிறிதளவு

ஏலக்காய் – 4

அன்னாசிபூ – 2

கிராம்பு – 4

பிரியாணி இலை – 1

 

வதக்க

புதினா – ¼ கட்டு

கொத்தமல்லி – ¼ கட்டு

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 10

 

வறுத்து மசால் பொடி அரைக்க

சீரகம் – 2 தேக்கரண்டி

மல்லி – 4 தேக்கரண்டி

வத்தல் – 20

கிராம்பு – 4

ஏலக்காய் – 4

அன்னாசிபூ – 2

பட்டை – சிறிதளவு

 

இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காய விழுது தயாரிக்க

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 10

இஞ்சி – சிறிதளவு

 

செய்முறை

முதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயிலிருந்து பால் எடுக்கவும்.

 

தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால்

 

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மசால் அரைக்கத் தேவையான கொத்தமல்லி, சீரகம், வத்தல் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 

மசால் பொடி தயாரிக்கத் தேவையானவை
மசால் பொடி தயாரிக்கத் தேவையானவை

 

அரைத்த மசால் பொடி
அரைத்த மசால் பொடி

 

10 அரிந்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

 

சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு
சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு

 

அரைத்த சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது
அரைத்த சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை போட்டு தாளித்து வதக்க வேண்டிய அரிந்த சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் அதனுடன் கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், கறி, அரைத்து வைத்துள்ள மசால் பொடியில் பாதியளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 4 முதல் 5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

 

வேகவைத்த கறிக்கலவை
வேகவைத்த கறிக்கலவை

 

மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலையைப் போடவும். பின்னர் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள கறி கலவையைச் சேர்க்கவும். இறுதியில் தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு நெய் சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மட்டன் பிரியாணி தயார்.

 

மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி

 

குறிப்பு: மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்.

– திவ்யா பிரபு

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.