மணமக்களின் காது கண் வாய்

மணமக்களின் காது கண் வாய் என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

மணமக்களின் காது கண் வாய்

மணமகனுக்கு நேற்று வரை இருகண்கள். இனி அது கூடாது. நாளையிலிருந்து மணமகளின் இருகண்களையும் பயன்படுத்தி, உற்றார், உறவினர்களையும் உலகத்தையும் நான்கு கண்களால் பார்த்து வாழ்வைத் தொடங்கவேண்டும்.

மணமகளுக்கு நேற்றுவரை இரு காதுகள். இனி அது போதாது. நாளையிலிருந்து மணமகனின் இரு காதுகளையும் பயன்படுத்திக் கொண்டு, நான்கு காதுகளால் உற்றார் உறவினர்களின் செய்திகளையும் உலகின் செய்திகளையும் கேட்டு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற இவ்விரண்டு மட்டும் போதாது.

மணமகனும், மணமகளும் தங்களின் வாய்கள் இரண்டையும், நான்காகப் பெருக்கிக் கொள்ளாமலும், இரண்டாக வைத்துக் கொள்ளாமலும், ஒன்றாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் வாழ்வில் வெற்றி காண முடியும், கணவன் உண்டால் மனைவி உண்டது போல, மனைவி உண்டால் கணவன் உண்டதுபோல.

கணவன் ஒருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டால் மனைவி வாக்குக் கொடுத்ததுபோல, மனைவி ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் கணவன் வாக்குக் கொடுத்ததுபோல.

காதுகளும் கண்களும் நான்கு; வாய் நான்கு மல்ல, இரண்டுமல்ல. ஒன்று என்று ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம். இதை மணமகனும் மணமகளும் உள்ளத்திற் கொண்டு வாழ்வைத் தொடங்குவது நல்லது.

வாழ்த்து

பெரியோர்களே! மேலும் உங்களின் அருமையான காலத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கு மேடையிலுள்ள நாங்கள் மட்டும் மணமக்களை வாழ்த்த வரவில்லை.

இங்கு வந்திருந்த தாய்மார்களும் பெரியோர்களும் ஆகிய எல்லோரும் மணமக்களை வாழ்த்தியாக வேண்டும்.

அதற்கு நேரமின்மையால், நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துவதாக உங்கள் எல்லோருடைய சார்பிலும் நான் மணமக்களை வாழ்த்துகிறேன்.

 

மணமகன் மணமகள் ஆகிய இருவரும்

பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து,

நன்மக்களைப் பெற்று,

எல்லா மொழிகளையும் ஆராய்ந்து,

தமிழை ஆழமாகக் கற்றறிந்து,

நன் மக்களோடு பழகி,

நல்ல வழியில் பொருளைத் தேடி,

சிக்கனமாகச் செலவழித்து,

எஞ்சிய பொருளைச் சேமித்து வைத்து,

அதையும் பல நல்ல அறச் செயல்களிலே ஈடுபடுத்தி,

நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்ய வேண்டிய நற்தொண்டுகளைச் செய்து,

நல்வாழ்வு வாழ வேண்டுமென முழுமனதோடு வாழ்த்துகிறேன்.

வாழ்க மணமக்கள்!

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

மணமக்களின் காது கண் வாய் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொண்டீர்கள்.

தமிழ்த் திருமணமுறை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.