மணமக்களுக்கான ஊன்றுகோல் என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறிய அறவுரைகளில் முதலாவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.
மணமகனுக்கும் மணமகளுக்கும் நாளையிலிருந்து மாமியார் வீடு புதிது.
உடுத்துகின்ற உடையெல்லாம் புதிது.
உண்ணுகின்ற உணவெல்லாம் புதிது.
படுக்கின்ற இடமெல்லாம் புதிது.
பார்க்கின்ற முகமெல்லாம் வேற்று முகம்.
என்ன செய்வது என்றே தெரியாமல் விழிப்பார்கள்.
வாழ்க்கையிற் சிறுசிக்கல்கள் ஏற்பட்டாலும் மனமுடைந்துவிடுவார்கள்.
உலகமும் இருண்டுவிட்டது போலத் தோன்றும்.
அவர்களின் வாழ்வில் ஒரு துன்பம் விளைவதுபோலத் தோன்றும்.
இந்நிலையிலுள்ள மக்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்த வள்ளுவர் ஒரே ஒரு குறளைக் கூறிப் போயிருக்கிறார். அது இன்றைய மணமக்களுக்குப் பயன்படுமென எண்ணுகிறேன்.
சேற்று நிலம் மழை பெய்து வரப்பெல்லாம் வழுக்குகிறது. பயிரில் களை அதிகமாக மண்டியிருக்கிறது. களை பிடுங்க எண்ணி வரப்பில் நடக்கிறான் உழவன்.
வரப்பு அவனை நடக்கவிடாமல் வழுக்கிக் கீழே வீழ்த்துகிறது.
வரப்பு வழுக்கிறதே என்று உட்கார்ந்தான்.
களை மண்டிப் பயிர் பாழாகிறதே என்று மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
மறுபடியும் அவனை வரப்பு வழுக்கி வீழ்த்துகிறது. இப்படித்தான் இல்லறமும் என்று உணர்த்துகிறார் வள்ளுவர்.
அறிவு என்ற அரிவாள் கொண்டு பக்கத்திலுள்ள மரக்கிளைகளில் ஒரு கொம்பை வெட்டிக் கொடுத்தார் வள்ளுவர்.
வாங்கி ஊன்றினான் உழவன்.
கால் மூன்றாயிற்று; வழுக்கலில் வெற்றி நடை போட்டுச் சென்று பயிர்களில் உள்ள களைகளை எடுத்துவிட்டான்.
சேற்று நிலத்திலே வழுக்கி நடக்கிறவனுக்கு ஒரு ஊன்றுகோல் துணைசெய்வதுபோல, வாழ்க்கையில் வழுக்கி வழுக்கி நடக்கிறவர்களுக்கு ஒரு ஊன்றுகோல் தேவை.
அது தனக்கு முன்னே இல்லறத்தை நடத்தி வெற்றிகண்ட நல்லறிஞர்களின் வாய்ச் சொல் (அறிவுரை). அவ்வாய்ச் சொல்லை வாங்கி ஊன்றுங்கள். வாழ்க்கை வழுக்காது என்று கூறுகிறார் வள்ளுவர்.
குறள் இதுதான்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
வாய்ச்சொல் என்பதிலும், படித்தவனுடைய வாய்ச் சொல், பட்டம் பெற்றவனுடைய வாய்ச்சொல், வயது முதிர்ந்தவனுடைய வாய்ச்சொல், பதவியில் இருப்பவனுடைய வாய்ச்சொல், பணக்காரனுடைய வாய்ச்சொல் என்று கூறாமல், ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்லை வாங்கி ஊன்றுங்கள். வாழ்க்கை வழுக்காது என்று கூறியிருக்கிறார்.
இன்றைய மணமக்கள் இவ்வறிவுரையைப் பின்பற்றி வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.
கி.ஆ.பெ.விசுவநாதம்
மணமக்கள் தங்கள் வாழ்வில் வழுக்கி விழாதிருக்க ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் (அறிவுரை) என்பதைப் பின்பற்றி வாழ வேண்டும். மணமக்களுக்கான ஊன்றுகோல் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ஆகும்.
வாழ்வில் இல்லாததென ? என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!