மணமக்களுக்கு – கி.ஆ.பெ.விசுவநாதம்

மணமக்களுக்கு என்ற இக்கட்டுரை முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எழுதிய‌ மணமக்களுக்கு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

மணமக்கள் தங்கள் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை கி.ஆ.பெ.விசுவநாதம் விளக்கியுள்ளார்.

தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! வணக்கம். எல்லோருடைய நல்லெண்ணப்படியும், வாழ்த்துதற்படியும், இன்று இங்குத் தமிழ்த் திருமணம் நடைபெறுகிறது.

நாமனைவரும் சான்று கூறவும், வாழ்த்துக் கூறவும் கூடியுள்ளோம்.

தமிழ்த்திருமணம்

மணமக்களின் பெற்றோர்கள் இத் திருமணத்தைத் தமிழ்த் திருமணமாக நடத்திவைக்க முன்வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக மணமக்களின் பெற்றோர்களைப் பாராட்டுகின்றேன்.

புதியமுறை

இங்கு வந்துள்ள சாதித்தலைவர்கள், நாட்டாண்மைக்காரர்கள், பெரிய தனக்காரர்கள், வயது முதிர்ந்தவர்களில் யாராவது ஒருவர், இத்திருமணம் புதியமுறையில் நடக்கிறதே என்றெண்ணினால், தயவுசெய்து அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், இதுதான் பழைய முறை.

பழைய முறை

பழங்காலத்தில் தமிழகத்தில் ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த வயது, ஒத்த கல்வி ஆகிய இவைகளையுடைய காளையும் கன்னியும் ஆகிய இருவரும், பெற்றோர் கொடுக்கக் கொண்டு, வாழ்க்கை ஒப்பந்தம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர்.

ஆரியர்களை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்துகிற முறை தமிழகத்திலே இடைக்காலத்திலே புகுந்த ஒன்று. அது இடைக்காலத்திலே அழிந்து போயிற்று; அவ்வளவுதான்.

பழைய முறையே இப்பொழுது மறுமலர்ச்சியடைந்து வருகிறது. வந்திருக்கின்ற பெருமக்கள் அனைவரும் மனமகிழ்வோடு இதை வாழ்த்துவதுடன், தாங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றபிறகு, அங்கும் இம்மாதிரித் திருமணங்கள் நடைபெற வேண்டுமென முயற்சிப்பது நல்லது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் இப்பொழுது சுயமரியாதைத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், தமிழ்த் திருமணம், அரசியல் திருமணம், பதிவுத் திருமணம் எனப்பல்வேறு முறைகளில் திருந்திய திருமணங்கள் பல்வேறு வகையாக நடைபெற்று வருகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு ஒரே முறையில் நடைபெற வேண்டுமென விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். பெருமக்களாகிய நீங்களும் இவ்வாறே விரும்ப வேண்டுமென்பது எனது எண்ணம்.

நான் இன்று நடத்திவைக்கும் திருமணம் இரண்டாயிரத்து முந்நூற்றைத் தாண்டிய திருமணம். கடந்த 47 ஆண்டுகளாகவே திருமணத்தை நடத்தி வருகிறேன்.

நான் நடத்தி வருகிற இத் தமிழ் திருமண முறை, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் என் மக்களுக்கு நடத்தி வைத்த முறை. எல்லோரும் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

பதினாறு பேறு

இப்பொழுது திருமணத்தில் வாழ்த்துக் கூறுவது ஒரு சடங்காகப் போய்விட்டது. பழங்காலத்தில் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள்.

அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல. ஒருவனுடைய வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டுமானால், அவன் பதினாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டுமென்பது கருத்து.

அப்பேறுகள் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் என்பன.

யாரோ நல்லவர் ஒருவர் இப்பேறுகளை எண்ணாமல் பதினாறு பிள்ளைகளை எண்ணி, என் தாய் தந்தையர்களை வாழ்த்திவிட்டதனால், நாங்கள் பதினாறு பிள்ளைகள் பிறந்து விட்டோம்.

நான் தான் பதினாறாவது பிள்ளை. எனக்குத் தம்பியும் இல்லை. தங்கையும் இல்லை. இக் காலத்தில் இவ்வாழ்த்துதல் பொருந்துமா? பொருந்தாது.

தனம், தான்யம்

இரண்டாவதாக, இருபதாண்டுகளுக்கு முன்புவரை, மணமக்களை வாழ்த்தும்போது, “தனம், தான்யம், வெகு புத்திரலாபம், தீர்க்காயுசு, சுபமஸ்து” என்று வாழ்த்தி வந்தார்கள்.

இன்று இப்படி வாழ்த்த முடியாது. வாழ்த்தக் கூடாது. ஏனெனில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய்விட்டது.

தனம் – தங்கக் கட்டுப்பாடு – தான்யம்- தானியக் கட்டுப்பாடு வெகுபுத்திர லாபம் – குடும்பக் கட்டுப்பாடு ஆகவே இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது.

யாரைப் போல

மூன்றாவது வாழ்த்துவதில் ஒரு புதிய முறை. புலவர்களெல்லாம் மலரும் மணமும் போல, வானும் நிலவும் போல, கரும்பும் சுவையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள் என்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

நல்லறிஞர்கள் பலர் இராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியும்போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள்.

அரசியல் தலைவர்கள் சிலர் காந்தியடிகளும் கஸ்தூரி பாயும்போல, அறிஞர் அண்ணாவும் இராணியும்போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள்.

இந்த 70 ஆண்டுகளாகத் திருமணங்களில் பங்கு பெற்று வருகின்றேன். எவராவது ஒருவர், என்னைப்போல, என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை.

அதனால்தான் அவர்கள் அவர்களைப்போல, இவர்களைப்போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள்.

நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப்போல என் மனைவியைப்போல, என்னைப்போல என் கணவனைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாகவேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.

பொறுப்பு அதிகம்

ஐயரை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணம் நடத்துகிற மணமக்கள், எவ்வளவு தவறுகளைச் செய்தாலும், இந்த நாடு தாங்கிக் கொள்ளும்.

இம்மாதிரிச் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும், நாடு தாங்காது; ஏற்காது.

இன்று புதிதாக இல்லறத்தில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள், இதை உள்ளத்தே வைத்துத் தம் வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.

சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளுகிறவர்களுக்குப் பொறுப்பு அதிகம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.

வாழ்த்துப் பலிக்க

நல்லவர்கள் வாழ்த்துவதினாலேயே நாம் வாழ்ந்து விடலாமென்று மணமக்கள் நம்பிவிடக் கூடாது. அப்படி நம்பினால் ஏமாற்றமடைவார்கள்.

நல்லவர்களின் வாழ்த்துதலுக்கேற்ப மணமக்கள் உறுதியாகவும் திறமையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தலைவர்களின் வாழ்த்துக்களும் பலிக்கும்.

இல்லறம்

நான் ஒரு நாடோடி. 70 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றிப் பார்த்திருக்கிறேன்.

இந்துக்கள் அல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, சமண பார்சியக் குடும்பங்களிலெல்லாம் கணவன் மனைவி சண்டைகள் மிகக் குறைவு.

பாழ்பட்ட நம்முடைய சமுதாயத்தில்தான் கணவன் மனைவி சண்டைகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன.

இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் திருமணக் காலங்களில் அவரவர்களின் மதகுருமார்கள், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வது எப்படி? என்பதை உணர்த்தி, மணமக்களுக்கு அறிவுரையும் கூறி வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்கள்.

ஆனால் நாமோ, அறியாத ஒருவரைக்கொண்டுவந்து வைத்து, தெரியாத சடங்குகள் எதை எதையோ செய்து, புரியாதமொழியில் எது எதையோ சொல்லி வாழ்க்கை என்றால் இன்னதென அறிவிக்காமலேயே, அவர்களை வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகிறோம். அதன் விளைவே இது.

இனியேனும் இத் தவறுகளைச் செய்யாமல், திருமண நாட்களில் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுவது நலமாகும். அவ்வகையில் நான் இன்று சில அறிவுரைகளை அறவுரைகளைக் கூறுகிறேன்.

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

அந்த அறவுறைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

11 Replies to “மணமக்களுக்கு – கி.ஆ.பெ.விசுவநாதம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.