உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் மணித்தக்காளி

மணித்தக்காளி பழத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறிர்களா?. நம்முடைய வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக மணித்தக்காளிக் கீரை மற்றும் வற்றலை பெரியவர்கள் சாப்பிடச் சொல்வார்கள்.

மணித்தக்காளியானது உணவாகவும், மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. இது பார்ப்பதற்கு தக்காளியை ஒத்து அளவில் மணி போன்று சிறியதாக இருப்பதால் மணித்தக்காளி என்று அழைக்கப்படுகிறது.

இது காட்டுப்பகுதியிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும், வயல்வெளிகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக நைட்ரஜன் சத்து அதிகம் இருக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.

வேத காலங்கள் முதலே இது நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்கு பழுத்த மணித்தக்காளி இனிப்பு சுவையினை உடையது.

மணித்தக்காளியானது சோலனேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்டோர் இதனுடைய உறவினர்கள் ஆவர்.

இதனுடைய அறிவியல் பெயர் சோலனேசியே நைக்ரம் என்பதாகும். இது மணத்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி, மணல் தக்காளி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

 

மணித்தக்காளியின் அமைப்பு மற்றும் வளரிடம்

மணித்தக்காளியின் தாயகம் யுரேசியா ஆகும். இங்கு இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு பரவியது. தற்போது அன்டார்டிக்காவைத் தவிர ஏனைய கண்டங்களில் இது காணப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.

மணித்தக்காளியானது குறுகிய காலம் வாழும் வற்றாத புதர்ச்செடியாகும். இது 30 முதல் 150 செமீ வரை வளரும் இயல்புடையது.

இச்செடியில் இலைகள் நீள்வட்டம் அல்லது இதய வடிவத்தில் பற்கள் போன்ற விளிம்புகளைக் கொண்டு இருக்கும். மணித்தக்காளியின் பூக்கள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் கொத்தாகக் காணப்படும்.

 

மணித்தக்காளி இலை, பூ, காய்
மணித்தக்காளி இலை, பூ, காய்

 

இப்பூக்களிலிருந்து 8-10 மிமீ அளவுள்ள பச்சை நிறக்காய்கள் தோன்றுகின்றன. இக்காய்கள் பழுக்கும்போது கறுப்பு கலந்த கருஊதா மற்றும் சிவப்பு நிறத்தில் மாறுகின்றன.  மணித்தக்காளி பழத்தினுள் எண்ணற்ற வெள்ளைநிற விதைகள் காணப்படுகின்றன.

 

 

மணித்தக்காளி சிவப்பு பழங்கள்
மணித்தக்காளி சிவப்பு பழங்கள்

 

மணித்தக்காளி விதைகள்
மணித்தக்காளி விதைகள்

 

இத்தாவரம் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் அதிகஅளவு காணப்படுகிறது. பெரும்பாலும் இத்தாவரம் களைச்செடியாகவே கருதப்படுகிறது. பெரும்பாலும் வர்த்தக நோக்கத்தில் இப்பயிர் பயிர் செய்யப்படுவதில்லை.

மணித்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மணித்தக்காளியில் விட்டமின் சி, பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஏ போன்றவை காணப்படுகின்றன.

இதில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.

மேலும் இதில் புரதச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவையும் உள்ளன.

மணித்தக்காளியின் மருத்துவப் பண்புகள்

மணித்தக்காளியின் இலை, வேர், பழம் என தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.

மஞ்சள்காமாலையைத் தடுக்க

மஞ்சள்காமாலையை தடுக்க மணித்தக்காளி சிறந்த தேர்வாகும். இதனை உண்ணும்போது அது கல்லீரல் தசையை உறுதிபடுத்தி மஞ்சள்காமாலை உண்டாவதைத் தடுக்கிறது.

மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உண்ணும்போது இது மஞ்சள்காமாலை நோயினைக் குணப்படுத்துகிறது. கல்லீரல் நோய்களால் பாதிப்படைந்தவர்களும் இதனை உண்டு நிவாரணம் பெறலாம்.

சளியால் உண்டாகும் பசியின்மையை மற்றும் சுவையின்மையை சரியாக்க

சளித்தொந்தரவு ஏற்படும்போது பசியின்மை மற்றும் சுவையின்மை ஏற்படுகிறது. மணித்தக்காளியை சூப்பாக்கி உண்ணும்போது இதில் உள்ள விட்டமின் சி-யின் காரணமாக சளித் தொந்தரவு குறைவதோடு பசியின்மை மற்றும் சுவையின்மையும் குணமாகிறது.

மண்ணீரலைப் பலப்படுத்த

மணித்தக்காளியானது நோய்எதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. மேலும் இது மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி மண்ணீரலை பலப்படுத்துகிறது. மண்ணீரலில் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

குடல்புண் மற்றும் வாய்ப்புண் ஆற

மணித்தக்காளியின் பழம் மற்றும் இலைகளை உண்ணும்போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக குடல் மற்றும் வாயில் உண்டாகும் புண்களை ஆறச் செய்கிறது.

தொண்டைப்புண் குணமாக மற்றும் உண்டாகாமல் இருக்க

மணித்தக்காளி இலை மற்றும் பழத்தினை சாறாகவோ, சமைத்தோ பயன்படுத்தும்போது தொண்டைப்புண்ணினை குணமாக்குகிறது. மேலும் தொண்டையில் புண்கள் ஏற்படாதவாறும் பாதுகாக்கிறது.

எனவே பாடகர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து தொண்டையில் புண்கள் ஏற்படாமல் தங்கள் குரல் வளத்தினைப் பாதுகாக்கலாம்.

மலச்சிக்கல் தீர

மணித்தக்காளியில் உள்ள நார்ச்சத்தானது மலமிளக்கியாகச் செயல்பட்டு மலச்சிக்கலை நீக்குகிறது. இயற்கை மலமிளக்கியாகச் செயல்படுவதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல்சூடு மற்றும் உடல்வலி குறைய

மணித்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூட்டினைக் குறைக்கின்றது. மணித்தக்காளிச் சாறானது காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூடு, உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றை போக்கி உடலினை சீராக்குகிறது.

நல்ல சிறுநீரக செயல்பாட்டிற்கு

மணித்தக்காளியின் இலை மற்றும் பழச்சாறானது சிறுநீரகங்களை நன்கு செயல்படச் செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீரகத்தின் செயல்பாட்டினை இது ஊக்குவிக்கிறது.

சரும நோய்களை குணப்படுத்த

சரும ஒவ்வாமை, தோல் எரிச்சல், சரும கொப்புளம் போன்றவற்றிற்கு மணித்தக்காளி இலையினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள விட்டமின் சி சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கச் செய்கிறது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு

மணித்தக்காளிப் பழத்தினைக் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து இரவில் பருக உடல் வலி நீங்கி ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.

சத்துக்கள் நிறைந்த மணித்தக்காளியினை உணவில் அடிக்கடி உண்டு நலமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.