மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாப்பிளையும் பொண்ணும் இருங்காங்க என்று திருமண ஊர்வலத்தில் சென்ற புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப்பெண்ணைப் பற்றி வயதான பாட்டி ஒருவர் கூறுவதை எலிக்குட்டி ஏகாம்பரம் கேட்டது.

“ஆஹா இதென்ன பழமொழி புதுசா இருக்கே. இதுக்கான பொருளையும் தெரிந்து கொண்டால் நாம் இன்றைக்கான பழமொழியைக் கூறி கருங்காலன் தாத்தாவின் பாராட்டினைப் பெறலாம்.” என்று மனதிற்குள் எலிக்குட்டி ஏகாம்பரம் எண்ணியது.

பழமொழிக்கான பொருளை தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது திருமண ஊர்வலத்தின் மேள சத்தத்தின் காரணமாக பாட்டி கூறிய விளக்கம் சரியாக ஏகாம்பரத்தின் காதில் விழவில்லை.

மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்டிற்கு திரும்பியது. மாலை நேரத்திற்கு சற்று முன்னர் காக்கை கருங்காலன் கூடு இருந்த மரத்தினை ஏகாம்பரம் அடைந்தது.

மரத்தின் கீழிருந்து “தாத்தா நான் எலிக்குட்டி ஏகாம்பரம் வந்திருக்கிறேன். சற்று இங்கே வாருங்கள். உங்களிடம் நான் சிறிது பேச வேண்டும்.” என்று காக்கை கருங்காலனை அழைத்தது ஏகாம்பரம்.

எலிக்குட்டியின் சத்தம் காதில் விழுந்ததும் காக்கை கருங்காலன் மரத்திற்கு அடியில் வந்தது. “என்ன ஏகாம்பரம்? என்ன விசயம்? ஏன் என்னை அவசரமாகக் கூப்பிட்டாய்?” என்று கேட்டது.

“தாத்தா நான் இன்றைக்கு மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழியை ஒரு திருமண ஊர்வலத்தில் கேட்டேன்.

அப்பழமொழிக்கான விளக்கத்தை கேட்க முயற்சிக்கும் போது திருமண ஊர்வலத்தின் மேளச்சத்தத்தில் கேட்க முடியவில்லை. அதனால் என்னால் இன்றைக்கு பழமொழியை மட்டுமே கூறமுடியும். இந்த விசயத்தைப் பற்றி கூறவே நான் இங்கு வந்தேன்.” என வருத்தமாகக் கூறியது.

அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “கவலைப் படாதே ஏகாம்பரம். நீ இன்றைக்கு நீ கேட்ட பழமொழியை மட்டும் கூறு. நான் இப்பழமொழிக்கான விளக்கத்தை எல்லோருக்கும் புரியும்படி இன்று மாலைக் கூட்டத்தில் கூறுகிறேன். மாலை கூட்டத்திற்கு வந்து விடு.” என்று கூறியது.

மாலை நேரத்தில் எல்லோரும் வழக்கமாகக் கூடும் வட்டபாறையில் கூடினர். காக்கை கருங்காலன் எழுந்து “இன்றைக்கு எலிக்குட்டி ஏகாம்பரம் தான் கேட்ட பழமொழியைக் கூறுவான். நான் அதற்கான விளக்கத்தை கூறுகிறேன்.” என்றது.

எலிக்குட்டி ஏகாம்பரம் எழுந்து “எல்லோருக்கும் வணக்கம். நான் இன்றைக்கு திருமண கூட்டத்தில் பாட்டி ஒருவர் மணமக்களைப் பார்த்து மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழியைக் கூறினார்.” என்றது.

காக்கை கருங்காலன் “ஏகாம்பரம் கூறிய பழமொழி ஏதோ புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப்பெண்ணை – கேலி செய்வது போல இருக்கிறதல்லவா? இதன் உண்மையான பொருளோ வேறு விதமானது!

கிறித்துவ இதிகாசங்களின்படி ஆதாம், ஏவாள் ஆகிய இருவரே முதலில் தோன்றிய ஆண் மற்றும் பெண் ஆவர். இவர்களிலிருந்தே மனித குலம் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

கிருத்துவ இதிகாசத்தில் இறைவன் முதலில் ஆதாமை மண்ணிலிருந்து படைத்தாக கூறப்பட்டுள்ளது.

ஆதாமின் இடுப்பெலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதிலிருந்தே மண்ணாங்கட்டி மாப்பிள்ளை (ஆதாம்)க்கு எலும்பியாம்மா (ஏவாள்) பொண்ணு என்ற இப்பழமொழி உருவாகியிருக்கலாம். இது நாளடைவில் பொருள் மாறி உலாவருகிறது.” என்று விளக்கம் கூறியது.

இதனைக் கேட்ட சில்வண்டு சிங்காரம் “பழமொழிக்கு ஏற்ற பொருள் கூறிய காக்கை கருங்காலன் தாத்தாவுக்கு நன்றி.” என்று கூறியது.

“சரி நாளைக்கு வேறு ஒரு பழமொழியை வேறு யாரேனும் ஒருவர் கூறுங்கள். இப்பொழுது செல்லுங்கள்” என்று காக்கை கருங்காலன் கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.