மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?

வாட்சப்பில் இப்பொழுதெல்லாம் ரொம்ப நல்ல நல்ல விச‌யங்கள் வலம் வருகின்றன‌. சமீபத்தில் அப்படி என்னைக் கவர்ந்த ஒரு பதிவு.

ஒருவன் மண்பானையிடம் கேட்டான் “இந்த கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்று இருக்கின்றாய்?” என்று.

அதற்கு மண்பானை “எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது எனக்குத் தெரியும். எவனொருவன் தனது ஆரம்பத்தையும் முடிவினையும் உணர்ந்திருக்கின்றானோ! அவன் ஏன் சூடாகப் போகிறான்? எப்போதும் குளிர்ந்தே இருப்பான்” என்றது.

நல்ல பதிவு!

ஆனால் மண்பானை நீர் ஜில்லென்று இருப்பதற்கு காரணம் இதுதானா?

உண்மையான காரணம் என்ன?

அங்கு வெப்ப இயக்கவியல் அதாவது thermodynamics விதிகளின்படி நடக்கும் வெப்பப் பரிமாற்றம் தானே அதற்கு காரணம்.

கொஞ்சம் விவரமாக அலசுவோமா!

மண்பானையில் நீரினை ஊற்றி மூடி வைத்தவுடன், அதிலுள்ள நுண்துளைகளின் வழியே உள்ளிருக்கும் நீரானது கசிந்து வெளியே வந்து பானையின் வெளிப்பகுதியில் நீர்த்திவலைகளாக ஒட்டியிருக்கும்.

இந்த நீர்த்திவலைகள் ஆவியாக மாற விரும்பும். அவை ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தினை பானையின் உள்ளிருக்கும் நீரிடம் இருந்து எடுத்துக் கொண்டு ஆவியாகும். எனவே பானையின் உள்ளிருக்கும் நீர் குளிர்ச்சியடையும். இதுதான் மண்பானை நீர் ‘ஜில்’லென்று இருப்பதன் ரகசியம்.

இதனை மற்றுமொரு சம்பவத்துடன் இணைத்துக் கூறினால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

கை குலுக்கும் துரை

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மூணார் போன்ற குளிர் பிரதேசங்களில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில், தென்தமிழ் நாட்டின் கிராமப் பகுதிகளில் இருந்து சென்ற‌ பல்வேறு மக்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.

தேயிலைச் செடிகளை பராமரிக்கும் வேலைகளை ஆண்களும், தேயிலை தளை எடுப்பதனை பெண்களும் செய்து வந்தனர். இவர்களை கண்காணிப்பதற்கு வெள்ளைக்கார அதிகாரிகள் வேலையில் அமர்த்தப்பட்டு இருந்தனர்,

அந்த குளிர் பிரதேசத்திலும் கூட இந்த வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அதிகாலைப் பொழுதில், அதுவும் விடிந்தும் விடியாமலும் இருக்கும் நேரத்திலேயே வேலைக்கு வந்து விட வேண்டும்.

அந்த அதிகாலை நேரத்து குளிரின் தாக்கத்தினாலும், அட்டைப் பூச்சிகளின் தொந்தரவினாலும் வேலையாட்கள் அடையும் துன்பத்திற்கு எல்லையே கிடையாது.

இந்த விஷயங்களை யெல்லாம் இயக்குநர் பாலா அவர்கள் தனது ‘பரதேசி‘ எனும் திரைப்படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அதிகாலை முதலே அடிமைகள் வேலை செய்து கொண்டிருக்க, நன்கு வெயில் வந்த பின்பு அவர்கள் செய்த வேலையின் அளவைக் கண்காணிக்க வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் வருவார்.

வந்தவர் அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் தனது கைகளைக் குலுக்கி “How do you Do?” எனக் கேட்பது வழக்கம்.

நமது பெண்களும் ஆண்களும் “தொர ரொம்ப நல்லவரு! நம்மை வித்தியாசமாகப் பார்க்காமல் கையெல்லாம் குடுக்கிறாறு” என்று பெருமை பேசிக் கொள்வது வாடிக்கை.

பாவம் அவர்களுக்குத் தெரியாது, துரை நம்மள டெஸ்ட் பண்ணுகிறார் என்று.

அதாவது அதிகாலையிலே தேயிலைத் தோட்டத்துக்கு வந்து சுமார் 3 அல்லது 4 மணி நேரம் இடைவிடாது வேலை செய்தவரின் கை குளிர்ச்சியாக இருக்கும். அதே சமயத்தில் வேலை செய்யாமல் வெட்டியாகப் பொழுது போக்கியவரின் கை சூடாக இருக்கும்.

கடினமாக ஒருவர் வேலை செய்தால் அவரது உடல் சூடு குறையும். இது வெப்ப இயக்கவியல்.

இந்த அறிவியல் சூட்சமத்தை உபயோகித்து, வேலை செய்தவர் யார்? சும்மா பொழுதைக் கழித்தவர் யார்? என்பதனைத் தெரிவதற்காகத்தான் “தொர” கையைக் குலுக்கி வேலையாட்களை சோதனை செய்தாரேயொழிய‌, அவர்கள் மேல் உள்ள அன்பினால் கைகுலுக்கவில்லை!

அது சரி ஏ.சி அறையின் உள்ளேயும் ப்ரிஜ் உள்ளேயும் ஜில்லுன்னு இருக்கே! இதுக்கு யாரு வேலை செய்கிறார்கள்?

அதிலுள்ள அறிவியல் உண்மைகளை அடுத்த வாரம் அலசுவோம்.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

முந்தையது கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?

2 Replies to “மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?”

  1. மூணாரில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் எனது மாமியார் இப்பவும் கொத்தடிமையாக‌ வேலை செய்து வருகிறார்.

    உழைப்புக்கேற்ப ஊதியமும் இல்லை. சுதந்திரமும் இல்லை.

    மிகவும் அருமையான பதிவு.

    திரு சாமி ஐயா இதையும் பற்றி எழுதியதற்க்கு மிக்க நன்றி…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.