மண்வாசனை

மண்வாசனை – அறிவியல் குறுங்கதை

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஒன்பது மணியளவில், வேதிவாசனும் அவரது நண்பர் கணிதநேசனும் அருகில் இருந்த நூலகத்திற்குச் செல்வது என்று முடிவு செய்திருந்தனர்.

காலார நடந்தாலும் அரைமணி நேரத்திற்குள்ளாக நூலகத்திற்கு சென்று விடலாம்.

இருவரது வீடும் வெவ்வேறு திசைகளில் இருந்ததால், அவரவர் தம் வீட்டிலிருந்து நேரிடையாக நூலகத்திற்கு வருவது என்பது அவர்களது யோசனையாக இருந்தது.

குறித்த நேரத்தில் இருவரும் நூலத்தின் வாயிலில் சந்தித்தனர். அப்போது “ஐயா, என்ன குடை கொண்டு வந்திருக்கீங்க? மழை வர மாதிரி தெரியலையே!”, என்றார் வேதிவாசன்.

“உங்களுக்கு தெரியாதுங்களா? மதியம் மூன்று மணியளவில் மழை வரும்னு செய்தியில சொன்னாங்களே”, என்றார் கணிதநேசன்.

“அடடா… இன்னைக்கு செய்தி பார்க்கவில்லையே!” என வேதிவாசன் கூற, “பராவாயில்லைங்க, என்கிட்டதான் பெரிய குடை இருக்கே! பார்த்துக்கலாம் வாங்க”, என்றார் கணிதநேசன்.

இருவரும் நூலகத்தின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு உள்ளே சென்றனர்.

வேதிவாசன், அறிவியல் புத்தகங்கள் இருந்த பகுதிக்கு சென்று தனக்கு தேவையான புத்தகத்தை தேடிக் கொண்டிருக்க, கணிதநேசன் கணித புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிப் பகுதிக்கு சென்று புத்தகங்களை தேடிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் அவரவர்க்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தனர். புத்தகங்களை படிப்பதும், குறிப்பெடுப்பதுமாக நேரம் பறந்தது.

அப்போது, பதினொன்றரை மணி இருக்கும். “ஐயா, டீ குடிக்க போகலாமா?” என்றார் கணிதநேசன்.

“நானும் அதைதான் சொல்ல வந்தேன்”, என வேதிவாசனும் ஆமோதிக்க, இருவரும் நூலகத்தின் வெளியே இருந்த தேநீர்கடைக்கு வந்தனர்.

தேநீரும் சமோசாவும் வாங்கி அருந்தி கொண்டிருக்கும் போதுதான், மழை வருவதற்கான அறிகுறியை உணர்ந்தார் வேதிவாசன்.

“ஐயா, நீங்க குடை எடுத்து வந்தது நல்லதா போச்சு. வானம் இருட்டிக்கிட்டு வருதே! மதியம் நல்ல மழைவரும் போலிருக்கு” என்றார் வேதிவாசன்.

அதற்கு, “வேணும்னா, மழைக்கு முன்னமே வீட்டிற்கு புறப்பட்டிடுவோம்”, என்றார் கணிதநேசன். இருவரும் தரவேண்டிய பணத்தை கடைகாரருக்கு கொடுத்து விட்டு, மீண்டும் நூலகத்திற்கு வந்தனர்.

தங்களது இருக்கையில் அமர்ந்தவுடன், விட்ட பக்கத்திலிருந்து புத்தகத்தை புர‌ட்ட, நேரம் கடந்து கொண்டே இருந்தது. வாசிப்பில் ஆழ்ந்ததால், அவர்கள் இருவரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை.

மழையின் அறிகுறி

அப்போது, திடீரென அங்கிருந்த ஒரு நூலக உதவியாளர், வேகமாக எழுந்து சென்று சன்னல் கதவுகளை எல்லாம் அடைத்து கொண்டிருந்தார்.

எப்படியோ இதனை உணர்ந்த வேதிவாசன், தலை நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, வெளியே காற்று வீசிக் கொண்டிருப்பது! தனது கைக்கடிகாரத்தைப் பார்க்க, பெருமுள்‌ இரண்டு முப்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.

(உடனே) “ஐயா போகலாமா?, மழை வந்திடும் போல”,  என்றார் வேதிவாசன். அதுவரை படித்துக் கொண்டிருந்த கணிதநேசன், “அடடா, நேரத்தைக் கவனிக்கவில்லையே!” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்தார்.

“நாம சீக்கிரம் புறப்படுவோம். உங்களை வீட்டில் விட்டுவிட்டு அப்புறம் என் வீட்டுக்குப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே தனது பெரிய குடையை கணிதநேசன் எடுத்துக் கொள்ள, இருவரும் நூலகத்திலிருந்து புறப்பட்டனர்.

வானம் (கார்மேகம் சூழ்ந்திருந்த காரணத்தால்) இருட்டிக்குக் கொண்டிருந்தது. காற்றும் பலமாக வீசிக் கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் மழைப்பொழிவு தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்பட, வேகமாக இருவரும் நடந்தனர்.

ஆனால் சடசடவென மழைப்பொழிவு வேகமெடுக்கவே, “ஐயா, மழை அதிகமா இருக்கும் போல, பேசாம இந்த கடையோரம் ஒதுங்கிக்குவோம். மழை விட்டதும் புறப்படலாமே. குடைக்கு ஒருத்தர்ன்னு சென்றாலே நல்ல நெனைஞ்சிடுவோம் போல” என்றார் வேதிவாசன்.

நண்பர் கணிதநேசனும்,  ‘நீங்க சொல்றது சரிதான்’ என்றார். இருவரும் அங்கிருந்த கடையருகில் ஒதுங்க மழை அருவியாய்க் கொட்டத் தொடங்கியது.

அன்று காலை வரை சூரியன் பிரகாசிக்க, நிலமோ வற‌ண்டு கிடந்தது. மழை மேகத்திலிருந்து புறப்பட்ட மழைத்துளிகள் வற‌ண்ட நிலத்தைத் தொட்டவுடன், மண்வாசம் (petrichor) எங்கும் வீசியது.

இதனால் கவரப்பட்ட கணிதநேசன், நம்ம ஊர் மண்வாசனையே வாசனைதான் ஐயா! என்றார். அதனை புன்முறுவலுடன் ஆமோதித்தார் வேதிவாசன்.

அப்பொழுது, “இந்த மண்வாசனை எதனால வருது?”, என்று வேதிவாசனிடம் கேட்டார் கணிதநேசன்.

மண்வாசனை – என்ன‌ காரணம்?

அதற்கு வேதிவாசன், “நிச்சயமா சொல்றேன் ஐயா. பொதுவாக மண்வாசனை ஏற்பட‌ முக்கிய காரணம் பாக்டீரியாக்கள்தான்!”.

“என்ன… பாக்டீரியாவா? ” என வியப்புடன் கேட்டார் கணிதநேசன்.

“ஆமாம், அசிடினோமைசிட்ஸ் (actinomycetes) எனும் ஒருவகை இழை வடிவ பாக்டீரியாக்கள் மண்ணில் இருக்குது. இவைகள் உலர்ந்த மண்ணில், அவற்றின் வித்துக்களை (spores) வெளிவிடும்.

அத்தோடு, ஜியோஸ்மின் (geosmin) எனும் வேதிச்சேர்மத்தையும் சேர்த்து வெளிவிடுது. மழைத்துளி வேகமாக நிலத்தில் விழுந்ததும், நீர்த்திவலைகள் கலந்த காற்றில் ஜியோஸ்மின் வேகமாக பரவும்.

நாம மண்வாசனைன்னு சொல்றோமே, அதுவேற‌ எதுவும் இல்ல, ஜியோஸ்மின் சேர்மத்தோட வாசனைதான்!”, என்றார் வேதிவாசன்.

“உம்ம்ம்…. சரி பாக்டீரியாவை தவிர்த்துத் வேற‌ ஏதாவது மண்வாசனைக்கு காரணம் இருக்கா?” என கணிதநேசன் கேட்டார்.

“சில சமயம் தாவரங்கள்கூட காரணமா இருக்குது. அதாவது உலர்ந்த காலநிலையில தாவரங்களிலிருந்து பாமிடிக்அமிலம், ஸ்டியரிக் அமிலம் போன்ற சேர்மங்கள் வெளிவந்து பாறை மற்றும் நிலத்துல சேர்ந்திடும்.

மழைப்பொழியும் போது ஜியோஸ்மின் மாதிரியே இவையும் காற்றில் வேகமா பரவும். ஆக, மண்வாசனைக்கு காரணம் பல வேதிச்சேர்மங்களின் கூட்டு கலவைன்னு சொல்லலாம்”, என்றார் வேதிவாசன்.

இதனை தலையசைத்து கேட்டுக் கொண்டார் கணிதநேசன். அப்போது, “ஐயா இன்னும் ஒன்னு சொல்லனும். அதாவது, அசிடினோமைசிட்ஸ் பாக்டீரியாங்கள் பலநாடுகளிலும் இருக்கும் பொது வகையான நுண்ணியிரிகள்தான். இதனால அந்த ஊர்லையும் மழை பொழிய, மண்வாசம் வீசும்!”.

“உம்… இதுக்கு பின்னாடி இவ்வளவு தகவல்கள் இருக்கா? நல்லது ஐயா” என்றார் கணிதநேசன். இதற்குள் மழைப்பொழிவும் வெகுவாகக் குறையவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

முனைவர்.ஆர்.சுரேஷ்

சென்னை, அலைபேசி: 9941091461.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.