அதிகப்படியான சாபங்களை
அனாவசியமாய் சேமித்துக் கொள்கிறார்
அதிவேகம் கூட்டிக் காட்டும்
அற்ப வாகன ஓட்டிகள்
அனைவரிடமிருந்தும்
அவசர தருணங்களில்
விவேகத்தின் வெளிப்பாடென
விளிம்புகளில் விரிந்து மரணத்தின்
எச்சரிக்கைகளை துச்சம் என
மிரட்டியபடியே விதியின் பிடிகளில்
விம்முகிறது செயல்பாடற்ற
மதியின் கைநழுவி
கொம்புகள் முளைத்ததெனும்
கொக்கரிப்புகளினூடே தெம்பற்றுத் திரியும்
வம்பற்ற முதுகுகளையும் வக்கிரமாய்
கிழித்தெறிகிறது வக்கற்றதானபோதும்
சாலை முகங்களில் சாகசகூடங்கள் அமைத்து
நிகழ்த்தி காட்டுபவைகளில்
காமக்கசிவுகளும் கச்சிதமாய்
கடை விரிக்கப்படுகிறது
காணக்கொடும் காட்சிகளாய்
சமயங்களில் சாக்கு கட்டிகள்
வரைந்து காட்டிய சடல படங்களையும்
விரைந்து கடக்கிறது ஆணவத்தின்
உச்சமென ஈனப் பிறப்புகள்
கானம் கேட்டபடியே!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250