மதுரை நகரும் பாண்டிய நாடும்

மதுரை நகரும் பாண்டிய நாடும்

மதுரை என்றாலே மீனாட்சி அம்மனும் கோயில்களும் மல்லிகையுமே நினைவுக்கு வரும்.

மதுரையில் உள்ள கோயில்கள் ஆழமான வரலாற்று பின்னனி கொண்டவை. புராணம், இலக்கியம், வரலாறு பின்னிப் பிணைந்த நகரம் என்றே மதுரையைக் கூறலாம்.

மதுரை, பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. வால்மீகி இராமாயணத்தில் பாண்டிய நாட்டுத் தலைநகராகிய கபாடபுரம் பற்றி குறிப்பு உள்ளது.

வியாச முனிவரின் மகாபாரதத்தில் அர்ச்சுனன் பாண்டியகுலப் பெண்ணை மணந்ததாகச் செய்தி உள்ளது. சாணக்கியர், பாண்டிய நாட்டு முத்துக்களையும், மெல்லிய துகிலையும் பாராட்டி உள்ளார்.

கி.மு.3‍-ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மன்னனின் அரசவைக்கு வந்த கிரேக்க நாட்டு தூதர் மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார்.

மகதப் பேரரசனாகிய அசோக நாட்டுக் கல்வெட்டுகளிலும் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பாண்டிய மன்னர்கள் புலவர்களை வைத்து தமிழ்ச் சங்கங்கள் தோற்றுவித்தனர்

தென்மதுரையில் முதல் தமிழ்ச் சங்கம் இருந்தது.

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றம் எறிந்த குமரவேள், அகத்தியர் உள்ளிட்ட 4449 புலவர்கள் பாடியுள்ளனர்.

அவர்களால் முதுநாரை, முதுகுருகு, பெரும் பரிபாடல் போன்ற பெரும் நூல்கள் இயற்றப்பட்டன. காய்சின வழுதி உட்பட 89 மன்னர்களும் தலைச்சங்கத்தில் இருந்துள்ளனர்.

அன்றைக்கு இயற்றிய தமிழ் நூல்களும், ஏடுகளும் கடல் சீற்றங்களால் அழிந்தன. இதன் காரணமாகவே பாண்டிய அரசும் முதலாம் தமிழ்ச்சங்கமும் முடிவுக்கு வந்தன.

குமரிமுனை மற்றும் பொருநையாறு கடலில் கடக்கும் முகத்துவாரத்திற்கிடையே முத்துக்களாலும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த மாடங்கள் கொண்ட அழகிய நகரான கபாடபுரம் உருவானது.

கபாடபுரமும் கொற்கை நகரமும் துறைமுக நகரங்களாகவே இருந்தன. கடுங்கோன் பாண்டிய‌ மன்னன் காலத்தில்தான் இரண்டாம் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பிறகு கடல் கோளின் சீற்றத்தால் கபாடபுரமும் அழிந்தது.

கி.மு.3-ம் நூற்றாண்டில் மன்னன் முடத்திருமாறன் தன்னுடன் தமிழ்ச்சுவடிகள், புலவர்களுடன் வடக்கு நோக்கி நகர்ந்த இடம் மணலூர்புரம். மதுரை‍ இராமநாதபுரம் சாலையில் 10 கி.மீ தூரத்தில் உள்ளது.

அங்கே கோட்டை கட்டி ஆட்சி செய்த காலத்தில் தான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் மதுரையில் தோன்றி இருக்கிறது.

முதலாம் தலைச்சங்கம் இருந்ததற்கான சான்று அகத்தியம். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் சான்று தொல்காப்பியம். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் சான்று ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பற்று, பரிபாடல் ஆகியவை.

முச்சங்கங்களைத் தொடர்ந்து மதுரையில் பாண்டித்துரை தேவரால் தொடங்கப்பட்டது நான்காவது தமிழ்ச் சங்கம்.

மதுரை செந்தமிழ் கல்லூரியில் இச்சங்கம் செயல்படுகிறது.