மதுவிலக்கு மங்கை

காய்ந்து கிடந்த‌ இப்புவியின் நிலை கண்டு வானம் முகம் கருத்தது. எப்போது கண்ணீரை கொட்டலாம் என காத்திருந்தது. சில்லென்று வீசிய காற்று சுகந்தியின் உடலை வருடியது. அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாத சுகந்தி வாசலுக்கும் வீட்டிற்குள்ளுமாய் நடை பயின்றாள்.

“இந்த அண்ணன் எங்க போச்சி? ம்! ஆளையே காணலையே! அஞ்சி மணிக்கு வேலை முடிஞ்சிரும் மணி இப்போ ஏழு இருக்குமே!” எண்ணங்கள் மனதை வட்டமிட நடைபயின்றாள்.

பூவநாதபுரம் என்னும் குக்கிராமம் தான் சுகந்தியின் பிறப்பிடம். அனைவருடனும் இன்முகத்துடன் பழகும் அற்புத பிறவி. அவளின் பெரியம்மா பையன் தான் ராமு. கிராமத்திலேயே கொஞ்சம் கல்வி அறிவு படைத்தவன். ப்ளஸ் டூ முடித்துவிட்டு பக்கத்து டவுனில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினான்.

“அம்மா! கூப்பிட்டுக் கொண்டே வந்த ராமுவைப் பார்த்த உடன் சுகந்தியின் எண்ணங்கள் தடைபட்டது”

சுகந்தியைப் பார்த்து சற்றே திகைத்த ராமு “என்ன சுகந்தி! எப்போ வந்த? அம்மா அப்பா எல்லாம் எங்க?” கேட்ட ராமுவை கூர்ந்து நோக்கினாள்.அவன் நடையில் சிறு தடுமாற்றம் தெரிந்தது.

“ராமண்ணா! பெரியம்மா, பெரியப்பா பக்கத்து ஊர்ல கல்யாணம்னு போய்ட்டாங்க. நீ அஞ்சி மணிக்கே வேலையிலிருந்து வந்துருவன்னு காப்பி போட்டு எடுத்துட்டு வந்தேன்.
சொல்லிக்கொண்டிருந்தவளின் எண்ணம் மட்டும் அவனைப் பற்றி சிந்தித்தது.

அவன் சமீபகாலமாக மதுவிற்கு அடிமையானதாக தான் அறிந்த செய்தி உண்மையாக இருக்குமோ என கவலைப்பட்டது.

“அண்ணே! நீ போயி முகம், கை, கால் கழுவிட்டு வா! நேரமாயிடுச்சி சாதமும் எடுத்திட்டு வந்திருக்கேன். உனக்கு சாப்பாடு போட்டுட்டு போறேன்” என்றாள்

அடுத்த தெருவில் உள்ள தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் மழைவேறு தூற ஆரம்பித்துவிட்டது.முகம் கழுவிக் கொண்டு வந்த அமர்ந்தவன் முன் சாப்பாட்டை பரிமாறினாள்.

“அண்ணே! நான் இப்ப கேக்கிறதுக்கு நீ பொய் பேசாம உண்மைய சொல்லணும்”
சற்றே திகைத்தாலும் “சொல்லு சுகந்தி”

“நீ குடிக்கிறதா கேள்விப்பட்டேன் உண்மையா?”

நேரடித் தாக்குதலில் குலைந்து போனான்.

“இ…இல்ல சுகந்தி!” தடுமாறினான்.

“என் முகத்த பார்த்து சொல்லு”

“வ..வந்து சேரக்கூடாத பசங்களோட சேர்ந்துட்டேன் பழக்கத்த விட முடியலை” மென்று விழுங்கினான்.

 

“இன்னியோட சரி! இனிமேல் நீ இந்த மாதிரி குடிக்காத. நம்ம ஊர்லயே படிச்சி வேலை பார்க்கிறது நீ ஒருத்தன் தான். ஊர்ல உள்ளவங்களுக்கு நல்லது கெட்டது சொல்லவேண்டிய நீயே இப்படி செஞ்சா நல்லாயிருக்கா?

நீ ஒரே புள்ள அம்மா அப்பாவுக்கு எவ்வளவு கஷ்டம் கொஞ்சமாவது நினைச்சி பார்த்தியா?” அன்புடனும் அதட்டலுடனும் ஒலித்தது அவள் குரல்.

“இனி விட்டுர்றேன் சுகந்தி”

நாள்கள் நகர்ந்தன. ஆனால் ராமு திருந்தியதாக தெரியவில்லை. எத்தனை முறை சொல்லியும் அண்ணன் கேக்க மாட்டேங்குது. அம்மா, அப்பா சொன்னாலும் கேக்காம எதிர்த்து சண்டைக்கு நிக்குது. என்ன செய்யலாம்? யோசனையுடன் இருந்தாள் சுகந்தி.

அன்று ஞாயிறு. ராமு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். அம்மா, அப்பா பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றிருந்தனர். வர மாலையாகும்.

“பெரியம்மா சோறாக்கி வைக்க சொல்லிச்சு அதான் வந்தேன்” தந்தி வாசகம் போல் பேசிவிட்டு வேலையில் இறங்கினாள் சுகந்தி.

ராமுவிற்கு எப்படியோ இருந்தது. சுகந்தி முகம் கொடுத்து பேசாதது. காரணம் தெரியும் என்றாலும் அப்பழக்கத்தை விட முடியவில்லையே!

விட்டத்தை வெறித்தபடி அமர்ந்தான். அங்கு ஏதோ எடுக்க வந்த சுகந்தி கால் சற்றே தடுமாற விழப்போனாள். சட்டென‌ எழுந்து தாங்கிப் பிடித்தான் ராமு.

“அம்மா” அலறினாள் சுகந்தி

“என்ன சுகந்தி? என்னாச்சு” பதற்றத்துடன் கேட்டவன் அவள் மென்கரங்களை நோக்கினான்.

“சுகந்தி! என்ன இது? எப்படி பட்டது? பதறினான்.

அவள் இடது கையில் நீண்ட கொப்புளம் இருந்தது. தீப்பட்ட புண் அதில் அவன் அழுத்தி பிடித்து விட்டதால்தான் அலறிவிட்டாள்.

“இல்லண்ணே! நானும் எத்தனையோ முறை உங்கிட்ட சொல்லிட்டேன். குடிக்காதன்னு. ஆனா நீ கேக்கல. பெரியம்மா, பெரியப்பா சொன்னாங்க. அப்பவும் கேக்கல. நீ கேட்காட்டியும் என் மனசு தாங்கல. திருப்பி திருப்பி சொன்னேன்.

ஊர்ல உன்னைய எல்லாரும் ஒரு மாதிரியா பேசுறாங்க. என்னால கேட்கமுடியலை. நான் சொன்னாலும் நீ கேட்கமாட்ட. அதான் இனிமே உன்ட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு எனக்கு நானே சூடு போட்டுகிட்டேன்”

சுகந்தியை ஏறிட்டு நோக்கினான் ராமு.

“சுகந்தி! எனக்காக உன்னைய நீயே வருத்திக்கலாமா? சத்தியமா இனி குடிக்க மாட்டேன் சுகந்தி”

கண்களில் நீர் சுரந்தது ராமுவிற்கு. அவன் குரலில் உறுதி தெரிந்தது. அத்துடன் பாசமும்.

-மு.அருண்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.