மந்திரத் தொப்பி என்ற இக்கதை ஜப்பானிய நாடோடிக் கதையாகும். இறைவன் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் உதவுவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் உழைத்து சம்பாதித்து தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.
வயதோதிகத்தின் காரணமாக அவருக்கு மிகவும் தள்ளாமை ஏற்பட்டது. அவரின் பிள்ளைகளோ, வயதானவரை கவனித்துக் கொள்ளமால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேறு ஊருக்குச் சென்று விட்டனர். அவருடைய மனைவி இறந்தும் நெடுநாட்கள் ஆகியிருந்தது.
பெரியவரால் உழைக்க இயலாததால் உணவின்றி மிகவும் சிரமப்பட்டார். அவர் தன் கிராமத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்வார்.
தன்னுடைய துயரங்களை நீக்க இறைவனிடம் வேண்டிக் கொள்வார். அப்படி ஒருநாள் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட போது களைப்பு மிகுதியால் அங்கேயே உறங்கி விட்டார்.
அப்போது அவருடைய கனவில் நீண்ட தாடியுடன் ஒருவர் தோன்றினார். “அன்பனே, உனக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். கோவிலின் தூண் ஓரமாக தொப்பி இருக்கிறது பார். அது ஒரு மந்திரத் தொப்பி. அதை எடுத்து அணிந்து கொள். பறவைகள், மரங்கள் பேசுவது உனக்குப் புரியும்” என்று கூறி மறைந்து விட்டார்.
பெரியவர் திடுக்கிட்டு விழித்து கோவிலின் தூணின் அருகில் பார்த்தார். தொப்பி இருப்பதைக் கண்டார். அதனை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஒரு மரத்தில் இருகாக்கைகள் அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனே கையில் இருந்த தொப்பியை அணிந்து கொண்டார். காக்கைகள் பேசுவது பெரியவருக்கு புரிய ஆரம்பித்தது.
தொப்பி செய்த உதவி
“கீழுர் காக்கையே, நீ கொண்டு வந்த சேதி யாது?” என்றது மேலூர் காக்கை.
அதற்கு கீழுர் காக்கை “எங்கள் ஊர் பூசாரிக்கு உடம்பு சரியில்லை. எத்தனையோ வைத்தியம் பார்த்தாகிவிட்டது. ஆனால் குணமாகவில்லை.
காரணம், ஒரு பாம்பின் சாபம். பூசாரி சிறிது காலத்திற்கு முன்புதான் வீடு கட்டினான். அவனுடைய சமையலறை சுவருக்கு இடையில் பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.
அதனால் வெளியே வர இயலவில்லை. அதனுடைய சாபத்தினால் இவன் அவதிப்படுகிறான். பாம்பை விடுவித்துவிட்டால் இவன் குணமடைவான்” என்றது.
அதற்கு மேலூர் காக்கை “எங்கள் கிராமத்திலும் பூசாரியின் ஒரே மகளுக்கு உடல்நலமில்லை. அது ஒரு மரத்தின் சாபம். அவன் வீடுகட்டும்போது புறக்கடையில் இருந்த மரத்தை வெட்டிவிட்டு வழிபாட்டறை கட்டிவிட்டான்.
அம்மரம் இப்போது துளிர்க்க முயல்கிறது. அதனை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டால் அவனுடைய பிரச்சினை தீரும்” என்றது. பின் இரு காக்கைகளும் அவ்விடத்தை விட்டுச் சென்றன.
மறுநாள் பெரியவர் கீழுர் கிராமத்திற்குச் சென்றார். தெருவில் நடந்து கொண்டு “வருங்காலம் சொல்லுவேன், வருங்காலம் சொல்லுவேன்” என்று கூறிக் கொண்டு சென்றார்.
பூசாரியின் குடும்பத்தினர் அவரை அழைத்து பூசாரி படுத்திருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
பெரியவர் பூசாரியிடம் “நீ சிறிது காலத்திற்கு முன்பு கட்டிய வீட்டின் சமையலறைச் சுவரில் பாம்பு ஒன்று மாட்டிக் கொண்டுள்ளது. அதனை விடுவித்தால் உன்னுடைய நோய் குணமாகும்” என்று கூறினான்.
உடனே அக்குடும்பத்தினர் பாம்பை விடுவித்தனர். பூசாரியின் நோய் குணமாகியது. பெரியவருக்கு அக்குடும்பத்தினர் நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பினர்.
மறுநாள் பெரியவர் மேலூருக்குச் சென்றார். அவ்வூரின் தெருக்களில் “வருங்காலம் சொல்லுவேன், வருங்காலம் சொல்லுவேன்” என்று கூறியபடி சென்றார்.
அவ்வூர் பூசாரி குடும்பத்தினர் அவரை அழைத்து பூசாரியின் மகள் படுத்திருந்த அறைக்குள் அழைத்து சென்றனர்.
அப்போது பெரியவர் “நீங்கள் சமையலறையின் கீழே துளிர்விட்டுக் கொண்டிருக்கும் மரத்தினை தோண்டியெடுத்து தோட்டத்தில் நட்டு வைத்தால் இப்பெண்ணின் நோய் நீங்கும்” என்று கூறினார்.
அவர்களும் பெரியவர் கூறியபடி செய்ய அப்பெண்ணும் குணமடைந்தாள். பூசாரி அவருக்கு அநேக பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினார்.
அதன்பின் பெரியவர் மந்திரத் தொப்பி மூலம் பலருக்கு நல்லது செய்து தானும் நல்ல வழியில் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்.