எல்லாரும் பொருள்சேர்க்க இயன்றவரை உழைக்கின்றார்
என்றாலும் இரவினிலே இனிதுறக்கம் பெறுவதில்லை
எல்லாரும் உடல்வருத்தி இரவுபகல் படிக்கின்றார்
என்றாலும் எவரிடத்தும் இனியமொழி உரைப்பதில்லை
எல்லாரும் நகையணிகள் எழிலுடைகள் உடுத்துகின்றார்
என்றாலும் அவர்மனத்தை மறைப்பதற்குத் தெரியவில்லை
எல்லாரும் இனிதிருக்க இழிவுபல புரிகின்றார்
என்றாலும் இனிதிருந்தார் எனவுரைக்க இயலவில்லை
எப்போதோ இறந்துவிட்ட இழிபிணங்கள் இவரானார்
என்றாலும் இழுத்துக்கொண் டிருப்பதற்குத் துடிக்கின்றார்
எப்போதோ இவர்முகத்தை மழித்துவிட்டார் தலைவர்கள்
என்றாலும் அவரடியில் அழுந்தியிவர் கிடக்கின்றார்
எப்போதோ இவர்சிரித்தார் இலகுவாக மறந்துவிட்டார்
என்றாலும் நகைப்பதைபோல் இடவலமாய்த் திரிகின்றார்
எப்போதோ புதைகுழியில் விழித்திருந்தே இறங்கிவிட்டார்
என்றாலும் இவர்நடிப்பில் இடைநிறுத்தம் வருவதில்லை
ஏனென்றால் இவருள்ளம் இடுகாட்டில் புதைந்திருக்க
எனக்குமட்டும் அடுக்கடுக்காய் இடுக்கண்கள் வருமென்பார்
தான்மட்டும் துயர்கடலில் தொலைந்துவிட்டுப் பரிதவிக்கத்
தன்சுற்றம் கொழுபுணையில் தரமாக மிதக்குமென்பார்
நான்பார்த்து வளர்ந்தவர்கள் நலமாக இருப்பதுவா?
நாள்பார்த்துக் கழுத்தறுக்க நகநுனியும் உகந்ததென்பார்
தேன்கூட்டுக் குளவியெனத் துடித்துள்ளம் சிலிர்த்தெழுந்து
தடக்கொடுக்கைச் சொருகுதற்குத் தடம்பார்த்து விழித்திருப்பார்
ஆங்கொருவன் மகிழ்ந்திருந்தால் அடிவயிற்றில் அமிலநதி
அப்போதே பிறந்துவிடும் நரம்புகளில் அலையடிக்கும்
வீங்குவெளி கடவுளிடம் விடியவிடியப் புலம்பிவிட்டு
வேண்டியதைக் கொடுக்கவல்ல இறைவனில்லை எனவுரைக்கும்
தீங்குபல புரிந்திருந்தால் திரும்பவரும் எனமறந்துத்
தீங்கனவில் திளைத்திருக்கும் திசைகடொறும் மனங்கிளைக்கும்
பாங்குபெறும் நலவாழ்வின் பசுமரத்தை அறுத்துவிட்டுப்
பாடில்லை எனப்பகரும் பலச்சிதைவின் மனக்காடே!
பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574